போகும் பாதையை மாற்றிகொள்ளப்போவதில்லை: நஜிப் திட்டவட்டம்

pmகடந்த  இரண்டு  நாள்களாக கோலாலும்பூரில்  ஆயிரக்கணக்கானவர்  திரண்டு   தம்மைப்  பதவிவிலக்  கோரி  ஆர்ப்பாட்டம்  நடத்தியபோதும் நெருக்குதலுக்குப்  பணியப்போவதில்லை  எனச் சூளுரைத்துள்ளார்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்.

கோலாலும்பூர்  மாநாட்டு  மையத்தில்  மெர்டேகா  உரை  நிகழ்த்திய  பிரதமர்  தம்  புதிய  அமைச்சரவையும்  பிஎன்னும்  மலேசியாவைத்  தொடர்ந்து  முன்னுக்குக்  கொண்டு  செல்லப்  பாடுபடும்  என்றார்.

13வது  பொதுத்  தேர்தலில்  மக்கள்  அதற்கான  அதிகாரத்தைத்  தங்களுக்கு  வழங்கியிருக்கிறார்கள்  என்றாரவர்.

“ஒன்றைத்  திரும்பச்  சொல்ல  விரும்புகிறேன்…… பாய்  விரித்து  நங்கூரம்  உயர்த்தப்பட்ட பின்னர்  கேப்டனும்  அவனின்  குழுவும்  பாதையை  மாற்றிக்கொள்ளப் போவதில்லை”, என்றவர்  சொன்னார்.

சனிக்கிழமை  தொடங்கி  நேற்றுவரை  ஆர்ப்பாட்டக்காரர்கள்  டட்டாரான்  மெர்டேகா  வட்டாரத்தில்  பேரணி  நடத்தி 1எம்டிபி  விவகாரத்துக்காகவும்  ரிம2.6 பில்லியன்  நன்கொடைக்காகவும்  நஜிப்  பதவி  விலக  வேண்டும்  என்றும்  கோரிக்கை  விடுத்து  வந்தார்கள்.

பேரணி  சட்டவிரோதமானது  எனப்  போலீசார்  அறிவித்திருந்தாலும்  அதைத்  தடுக்கவில்லை.

நஜிப்,  தம் மெர்டேகா  தினச்  செய்தியில்  பெர்சே 4 பேரணி  ஆர்ப்பாட்டக்காரர்களைச்  சாடினார். அவர்கள்  “முதிர்ச்சியற்றவர்கள்” என்றும்  நாட்டை  நாசமாக்க  முனையும்  “துரோகிகள்”  என்றும்  அவர்  வருணித்தார்.

தெரு  ஆர்ப்பாட்டங்கள்  பொது  ஒழுங்குக்கு மிரட்டலாக விளங்குவதுடன்  பல்வேறு  அசெளகரியங்களையும்  உண்டாக்குவதால்   அவை  நிராகரிக்கப்பட  வேண்டியவை  எனப்  பிரதமர் கூறினார்.

“மக்களாட்சி  நாட்டில்  உணர்வுகளை  வெளிப்படுத்த  அது  சரியான  வழி  அல்ல”, என்றாரவர்.