பாங்காக் கோயில் குண்டு வெடிப்பு: இருவருக்கு பிடி ஆணை

bangkokதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரம்மன் கோயிலில் ஆகஸ்ட் மாதம் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பாக ஒரு பெண் உள்பட மேலும் இருவருக்கு அந்த நாட்டு போலீஸார் திங்கள்கிழமை பிடிஆணை பிறப்பித்தனர். மேலும், அந்த இருவரின் வரைபடங்களையும் போலீஸார் வெளியிட்டனர். இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் பிராவுத் தாவோர்ன்சிறி கூறியதாவது: கோயில் குண்டு வெடிப்பு தொடர்பாக வான்னா சுவான்சாந்த் (26) என்ற பெண்ணைத் தேடி வருகிறோம். பாங்காக்கின் மின் புரி பகுதியில் குண்டு வெடிப்புக்குப் பயன்படும் பொருள்கள் கைப்பற்றப்பட்ட அறையில் அவர் தங்கியிருந்தார் என்றார் அவர். அந்த அறையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சோதனையில், வெடிமருந்தாகப் பயன்படுத்தக் கூடிய யூரியா உரம், தொலைவிலிருந்து இயக்கப்படும் பொம்மை வாகனம், வெடிகுண்டுகளை தொலைவிலிருந்து வெடிக்கச் செய்யக்கூடிய கருவிகள், குண்டுத் தாக்குதல்களின்போது மரணத்தையும், காயத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் வெடிகுண்டுகளில் நிரப்பக்கூடிய இரும்பு மரையாணிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

வான்னா சுவான்சாந்த் தவிர, பெயர் குறிப்பிடப்படாத மற்றொரு நபருக்கு எதிராகவும் போலீஸார் பிடியாணை பிறப்பித்துள்ளனர். இதையடுத்து, பாங்காக் குண்டு வெடிப்புடன் தொடர்புடையவர்கள் என போலீஸாரால் சந்தேகிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே, கோயில் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு, குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக மர்ம நபர் ஒருவரின் வரைபடத்தை தாய்லாந்து போலீஸார் வெளியிட்டனர். மேலும், வெடி குண்டு தயாரிக்கப் பயன்படும் பொருள்களுடன் வெளிநாட்டு நபரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அமைந்துள்ள எரவன் (பிரம்மன்) கோயிலில் ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர்.

-http://www.athirvu.com