தாய்மொழிப்பள்ளிகளை ஒழிக்கவே ஒரே வகையிலான மலாய் மொழி பாடத்திட்டம்

 

 

Aru1மலேசியக் கல்விப் பெருந்திட்டம் (2013-2025) இன் தலையாய “ஒரே குறிக்கோள்” தேசிய மொழிப்பள்ளியை பெற்றோர்களின் முதன்மைத் தேர்வு பள்ளி ஆக்குவதாகும். அந்நோக்கத்தை அடைவதற்கான வழிகளில் ஒன்றுதான் அறிவிக்கப்பட்டுள்ள ஒரே வகையிலான மலாய் மொழி பாடத்திட்டம்  என்று வழக்குரைஞரும் மலேசிய மனித உரிமைக் கழகம் சுவாராமின் தலைவருமான கா. ஆறுமுகம் கூறுகிறார்.

தமிழ் மற்றும் சீனமொழி தொடக்கப்பள்ளிகளில் போதிக்கப்படும் மலாய் மொழியின் தரம் தேசிய மொழிப்பள்ளியில் போதிக்கப்படும் மலாய் மொழி பாடத்திட்டத்திற்கு சமமாக உயர்த்தும் நடவடிக்கையை மலேசிய கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாக அமைச்சின் அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். இத்திட்டம் 2016 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதைப் போலவே 2009 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் மலேசிய கல்வி அமைச்சு மலாய் மொழியை சமமாக உயர்த்தும் நடவடிக்கையை முன்மொழிந்துள்ளது. அவற்றை சீனப்பள்ளிகள் நிராகரித்துள்ளன என்பதை ஆறுமுகம் சுட்டிக் காட்டினார்.

மலேசியக் கல்விப் பெருந்திட்டம் 2013-2015 தயாரிக்கப்பட்ட காலத்தில் இது போன்ற மக்களுடனான சந்திப்புகள் நடத்தப்பட்டது என்றும் அச்சந்திப்புகளின் அடிப்படையில்தான் முடிவுகள் எடுக்கப்பட்டன என்றும் அப்பெருந்திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் இந்தத் தாய்மொழி தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் மலாய் மொழி பாடத்திட்டம் தேசிய மொழி பள்ளிகளின் பாடத்திட்டத்திற்கு சமமாக்கப்படும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பது கல்வி அமைச்சின் வாதமாகும் என்று கடந்த சனிக்கிழமை பெட்டாலிங் ஜெயா கிரிஸ்டல் கிரவுன் தங்கும்விடுதியில் தமிழ் அறவாரியம் ஏற்பாடு செய்திருந்த தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரிய உறுப்பினர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஆறுமுகம் தெரிவித்தார்.

MALAYSIA-VOTE-INDIANS

தாய்மொழிப்பள்ளிகளை மேம்படுத்தும் திட்டம் அறவே இல்லை

மேலும், தமிழ் மற்றும் சீனமொழி தொடக்கப்பள்ளிகளை வளப்படுத்தி அவற்றை தேசிய மொழிப்பள்ளியின் தரத்திற்கு உயர்த்தும் திட்டம் மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தில் அறவே இல்லை என்பதை அவர் அதிரிட்டுக் கூறினார்.

அவற்றை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு பற்றியும் ஏதும் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டிய ஆறுமுகம், தமிழ் மற்றும் சீனமொழி தொடக்கப்பள்ளிகளில் தாய்மொழி வழி போதனாமுறைகள் தொடரும் என்ற கூற்று மட்டும் உள்ளது என்றார்.

இப்பெருந்திட்டப்படி மாணவர்கள் மலாய் தேசிய மொழி என்ற அடிப்படையிலும், ஆங்கிலம் உலக மொழி என்பதாலும் அவற்றில் திறன் பெற்றிருக்க வேண்டும்.  ஆனால், தமிழ் மற்றும் சீன மொழிகளில் திறன் பெற்றிருப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

அவற்றை கற்பதற்கு வாய்ப்புகள் வழங்கப்படும், அதாவது ஒரு விருப்பத் தேர்வு மொழியாக, அரபு மொழி, ஃபிரன்ச் மற்றும் ஸ்பேனிஸ் மொழிகள் போல, கற்றுக்கொள்ளலாம்.  தமிழ் மற்றும் சீன மொழிகளின் போதனைக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் அவ்வளவுதான் 1 blueprintஎன்று ஆறுமுகம் வேதனைப்பட்டுக் கொண்டார்.

மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தில் திட்டவட்டமாக தமிழ் மற்றும் சீனமொழி கல்விக்கு எதிராக வகுக்கப்பட்டிருக்கும் வேறுபாட்டிற்கு என்ன காரணம் என்று  ஆறுமுகம் கேள்வி எழுப்பினார்.

“தேசிய ஒற்றுமை ஓங்க வேண்டும். அதனை அடைவதற்கு தேசிய மொழிப்பள்ளி ஒன்று மட்டுமே பெற்றோர்களின் முதன்மைத் தேர்வாக இருக்க வேண்டும் என்பது கல்வி அமைச்சின் “ஒரே குறிக்கோள்” என்று அப்பெருந்திட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது (பாகம் 7-17).

“அந்த நிலையை அடைவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றுதான் இந்த சமமாக்கும் திட்டம். தேசிய மொழி பாடத்திட்டம் சமமாக்கப்பட வேண்டும். ஆனால், தாய்மொழிப்பள்ளிகளின் ஒட்டுமொத்த திறனை அதிகரிக்கவும் மேம்படுத்தவும் எந்தக் கடப்பாடோ திட்டமோ அக்கல்விப் பெருந்திட்டத்தில் அறவே இல்லை”, என்பதை ஆறுமுகம் வலியுறுத்தினார்.

இதற்கு உதாரணமாக, 2015 இன் இறுதியில் 92 சதவிகித குழந்தைகள் பாலர் கல்வி கற்ற நிலையில்தான் ஆரம்பப் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற அடைவுநிலையை இந்த மலேசியக் கல்விப் பெருந்திட்டம் (பாகம் 8-5) கொண்டுள்ளது. ஆனால், நமது குழந்தைகளில் 36 சகவிகிதம் பாலர் கல்வி கிட்டாத நிலையில்தான் உள்ளனர் என்றாரவர்.

மேலும், மலாய் மொழி கற்பிக்கும் திறன் கொண்ட ஆசிரியர்கள் சுமார் 6,000 பேர்கள் அதிகம் உள்ளதாக அறிக்கை கூறுகிறது (பாகம் 5-6). இவர்களின் திறன்களை தாய்மொழிப்பள்ளிகள் பயன்படுத்த வேண்டும் என்ற ஆலோசனையும் தரப்பட்டுள்ளது. இது ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுதக் கதையாக மாறக்கூடாது என்று இத்திட்டத்தின் உள்நோக்கத்தை ஆறுமுகம் வெளிப்படுத்தினார்.

ஆழமாக சிந்திக்க வேண்டிய கருத்து: தாய்மொழிப்பள்ளிகளை ஒழிப்பதே கல்விப் பெருந்திட்டத்தின் நீண்டகால நோக்கம் என்பதை ஒட்டுமொத்தமாக மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தில் காணும் போது உண்டாகும் உலைச்சலாகும் என்றாரவர்.

Satu sekolah untuk semua-logoஅதை உருவாக்க முழுமையாக ஈடுபட்டவர்கள் ஓரினமே! அவர்கள் ஒரு முழுமையான திட்ட வரைவை மேற்கொள்ளவில்லை. பாலர் கல்வி முதல் ஆழமான கல்வி அடித்தளத்தை அமைக்கும் கூறுகள் அதில் இல்லை. பல்லின பண்பாட்டுக்கூறுகளைக் கொண்ட ஒரு ஒட்டுமொத்த மனிதவள மேம்பாட்டுக்கான திட்டமாகவும் அது இல்லை.

தேசிய கல்விக் கொள்கையின் கீழ் தாய்மொழிப்பள்ளிகளை ஒரு நீண்ட காலப்போக்கில் மலாய் மொழியின் ஆதிக்கத்திற்குள் கொண்டுவரும் முயற்சிகள்தான் தெரிகின்றன  என்றார் ஆறுமுகம்.

மலாய் மொழியின் தரத்தை உயர்த்தினால் நல்லதுதான். ஆனால், நமது குழந்தைகள் அந்தச் சூழலுக்கு உருவாக பாலர்கல்வி முதல் வசதிகள் இருக்க வேண்டும். அதோடு திறன் கொண்ட ஆசிரியர்களும் கவர்ச்சியான பாடத்திட்டமும் வேண்டும். இவை தேசியப் பள்ளிகளிலும் கிடையாது என்பதையும் நாம் அறிவோம் என்று தமது ஆதங்கத்தை அவர் வெளியிட்டார்.