ஹமிடா: என்னை மட்டும் அம்னோவிலிருந்து நீக்கினீர், ஏன் மகாதிரை நீக்கவில்லை?

 

அம்னோவின் தலைவர் நஜிப் ரசாக் தாம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாக அறிவித்ததைத் தொடர்ந்து தாம் பலிகடாவாக்கப்பட்டுள்ளதாக கோபெங் அம்னோ வனிதா முன்னாள் தலைவர் ஹமிடா ஓஸ்மான் வருத்தப்பட்டுக் கொண்டார்.

அம்னோவின் மூத்த தலைவர் டாக்டர் மகாதிர் இன்னும் கடுமையாக நஜிப்பை குறை கூறியுள்ளார். ஆனால் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பதை ஹமிடா சுட்டிக் காட்டினார்.

தம்மைவிட இன்னும் கடுமையாகக் குறை கூறியவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஏன் தம் மீது மட்டும் நடவடிக்கை என்று அவர் வினவினார்.

“ஏனென்றால் நான் ஒரு பெண், பலவீனமானவர் என்று கருதப்பட்டவர், ஆகவே எனக்கு எதிராக நடவடிக்கை”, என்று ஹமிடா இன்று ஈப்போவில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்திற்குப் பின்னர் மலேசியாகினியிடம் கூறினார்.

அம்னோ உச்சமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கு எதிர்வினையாற்ற ஹமிடா இச்செய்தியாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

1எம்டிபி விவகாரம் மற்றும் ரிம2.6 மில்லியன் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டது போன்றவை குறித்து ஹமிடா பிரதமர் நஜிப்பை கடுமையாகக் குறை கூறியிருந்தார்.