இந்தியாவிலே முற்றிலும் தலித் பெண்களால் நடத்தப்படும் முதல் உணவகம்!

mysore_cafe_001மைசூரில் இந்தியாவிலே முற்றிலும் தலித் பெண்களால் நடத்தப்படும் ’மைசூர் மால்குடி கபே’ என்ற முதல் ஹொட்டல் ஒன்று அமைந்துள்ளது.

மைசூர் மால்குடி கபேயில், ஜொலிஜொலிக்கும் மஞ்சள் மற்றும் மெரூன் நிறத்தில் தென்னிந்திய இளம்பெண்களின் பாரம்பரிய உடையான பாவாடை தாவணி சீருடையில், இளவரசி போல பளபளவென வலம் வரவும் வரவேற்கவும் செய்கிறார்கள் கௌரி மற்றும் சில இளம்பெண்கள்.

யார் இந்த கௌரி? இவர் வேலைசெய்வது பிரபலமான மைசூர் க்ரீன் ஹொட்டலுக்கு உட்பட்ட மால்குடி காபி கடையில்தான்.

கௌரி உட்பட 11 பெண்களுக்கு காபி கபே நடத்தும் பயிற்சி இங்கு வழங்கப்பட்டு, 2009 பிப்ரவரி மாதத்தில் தனி கபே திறந்திருக்கிறார்கள்.

இது சிறிய நட்சத்திர ஹொட்டலாக சுத்தமான சுவையான உணவுகளால் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு தலித் ஹொட்டல், இந்தியாவிலே முற்றிலும் பெண்களால் நடத்தப்படும் முதல் ஹொட்டல்.

இந்த முன்னேற்றம் சமுதாயத்தில் தனக்கு கிடைத்த கௌரவம் நல்ல எதிர்காலத்துக்கான நம்பிக்கை என கௌரி சந்தோஷப்படுகிறார்.

இந்த ஹொட்டலுக்கு ஆலோசனை வழங்கும் அறக்கட்டளை லண்டனில் உள்ளது. அதன் நிறுவனர் டாம் ஹிலாரி ப்ளம்.

கௌரியின் தாயார் தன் மகள் இந்த நிலைக்கு வருவதை கனவிலும் நினைக்கவில்லை என்கிறார்.

அதற்கு காரணம், கௌரி சிறுவயதில் வீடுகளில் குளியலறை, கழிப்பறை, மாடிகளை சுத்தம்செய்யும் வேலைக்காரி.

ஜாதியில் கீழான பால்மிகி சமூகத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் குலதொழில், கழிப்பறைகளை சுத்தம் செய்வது திறந்தவெளியில் கிடக்கும் மலங்களை அள்ளுவது, குப்பைகளை பெருக்குவது, சாக்கடை சுத்தம் செய்வது போன்ற துப்புரவு பணிகளே.

மூக்கை பிடித்துக்கொண்டு அருவெறுப்பு சித்ரவதையை தாங்கிக்கொண்டு, ஒரு திணிக்கப்பட்ட தியாகமாக இதை செய்தவர்கள்.

இதை செய்வதால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்கள் தலைமுறைகளுக்கும் சமுதாயத்தில் ஒரு மனிதனுக்குரிய மரியாதையே மறுக்கப்படுகிறது.

அதனால், மனித உரிமைகள் ஓங்கி ஒலிக்கும் இந்த காலத்தில் அவர்களின் சமூக அமைப்புகளே, இந்த வேலையை செய்யக்கூடாது என வலியுறுத்துகின்றன.

இந்த வேலையைதான் அவர்கள் செய்ய வேண்டும் என வேலையின் அவசியம் கருதியும் வேறுயாரும் செய்ய விரும்பாததாலும் இவர்களின் துன்பம் உணராத சில ஆதிக்க சமூகத்தினர் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிர்பந்திக்கின்றனர். இதனால், இவர்களுக்கு மாற்றுவேலை கிடைப்பதில்லை.

கல்வியின்மை, ஏழ்மை இவற்றோடு எந்த ஆதரவு பின்னணியும் இல்லாததால், ஆதிக்கம் செலுத்துபவர்களிடமே மீண்டும் சரணடைய வேண்டிய நிலை.

ஆங்கிலேயர் ஆட்சியில் லண்டனுக்கு சென்ற இரட்டைமலை சீனிவாசன் நான் தீண்டத்தகாதவன் (I am Untouchability) என்ற பேட்ஜ் அணிந்திருந்தார்.

அதை கவனித்த வெள்ளையர்கள் அவரோடு கைகுலுக்கி அவர் காயத்துக்கு மருந்தானார்கள்.

அதுபோல, இந்த பால்மிகி இன பெண்களுக்கு இந்தியாவில் உள்ள ஒரு வெளிநாட்டு நிறுவனம்தான் ஜாதி ஒடுக்குமுறைக்கு சவாலாக வேலை கற்பித்து தொழில் தொடங்க ஊக்குவித்துள்ளது.

இதை ஒரு இந்திய நிறுவனம் செய்திருந்தால் நாம் இன்னும் சந்தோஷமும் பெருமையும் கொள்ளலாம்.

மனிதனை அமர்த்தி, மனிதன் இழுக்கும் கைரிக்‌ஷாவை அடிமைத்தனம் என்று கருதி ஒழித்த இந்த நாட்டில், இன்னும் மனித மலத்தை மனிதர்களே அள்ளும் ஒரு இனம் இருந்தால் அது எவ்வளவு கொடுமை.

கௌரியை முன்மாதிரியாக கொண்டு பால்மிகி சமூகம் முன்னேறுவது காலத்தின் அழுத்தம். சிலர் கைகொடுப்பது கருணையின் அழுத்தம்.

பூமியில் மேடுபள்ளம் போல, மனிதர்களிலும் உயர்வு தாழ்வு அமைவது இயற்கை. ஆனால், அது இனம் சார்ந்து திணிக்கப்படுவது செயற்கை. வர்ணமுறை கட்டமைப்பே ஒரு வஞ்சக கோட்டை. மனிதர்கள் மீது மனிதர்களே நடத்தும் அதிகார வேட்டை.

– மரு சரவணன்.

-http://www.newindianews.com

TAGS: