பிளஸ் நெடுஞ்சாலை அடுத்த ஆண்டு 5விழுக்காடு டோல் கட்டணத்தை உயர்த்த உரிமை பெற்றுள்ளது

plusபிளஸ்  நிறுவனம்  வடக்கு- தெற்கு  நெடுஞ்சாலையிலும்  அதன்  பராமரிப்பில்  உள்ள  மற்ற  நெடுஞ்சாலைகளிலும்  2016-இல்  5 விழுக்காடு  சாலைக்கட்டணத்தை  உயர்த்த  உரிமை  பெற்றுள்ளது. ஒப்பந்தப்படி   ஒப்பந்த  காலம்  2038-இல்  முடிவடையும்  வரையில்  மூன்றாண்டுகளுக்கு  ஒரு  முறை  சாலைக் கட்டணத்தை  மறுபரிசீலனை  செய்யும்  உரிமை  அதற்கு  உண்டு.

இன்று  மக்களவையில்  கேள்வி  ஒன்றுக்கு  வழங்கிய  எழுத்துவடிவ  பதிலில்  பொதுப்பணி  துணை  அமைச்சர்  ரோஸ்னா  அப்துல்  ரஷிட்  இதனைத்  தெரிவித்தார்.

“2011-இல்,  செய்து  கொள்ளப்பட்ட  துணை  ஒப்பந்தமொன்றில்  பிளஸ்  நிறுவனமும்  அரசாங்கமும்  பிளஸின்  பராமரிப்பில்  உள்ள  எல்லா  நெடுஞ்சாலைகளிலும்  2011-இலிருந்து  2015வரை  சாலைக்கட்டணத்தை  உயர்த்துவதில்லை  என்று  ஒப்புக்கொள்ளப்பட்டது.

“அதன்படி  பிளஸ்  அதன்  அடுத்த  கட்டண உயர்வை  பினாங்கு  பாலம்  தவிர்த்து  மற்ற  நெடுஞ்சாலைகளில்  2016-இலிருந்து  அமல்படுத்தலாம். மூன்றாண்டுகளுக்கு  ஒரு  முறை  5விழுக்காடு  கட்டண  உயர்வுக்கு  ஒப்பந்தம்  இடமளிக்கிறது”, என்றாரவர்.