நீதி நழுவுதல் இறைத் துரோகமாகும் – கி.சீலதாஸ்

1 courtஇந்த  நாட்டில்  நீதி  வழங்கும்  பொறுப்பை  ஏற்கும்  நீதிபதிகளின்  அதிகாரம்,  அதிகார  வரம்பு,  யாவற்றையும்   விளக்குவதற்கு  அரசமைப்புச்  சட்டம்,  நீதிமன்ற  அதிகாரச்  சட்டம்  1964  உள்ளன;  மற்றும்  ஏராளமானச்  சட்டங்கள்  நீதிபதிகளுக்கும்,  நீதித்துறைக்கு  பற்பல  அதிகாரங்களை  வழங்கி  செம்மையாகச்  செயல்பட  உதுவுகின்றன.  சட்டங்கள்  பல  அதிகாரங்களை  வழங்கிய  போதிலும்  அரசமைப்புச்  சட்டம்  நீதிபதிகளிடமிருந்து  தலையாய  பொறுப்பை   எதிர்பார்க்கிறது  என்பதைவிட  தலையாய  பொறுப்பை ஒப்படைத்து   இருக்கிறது  என்பது  கண்கூடு.

அதாவது,  நாட்டில்  உள்ள  சட்டங்கள்  யாவும்  இயங்க,  இயக்குவதற்கு  பற்பல  துறைகள்  இருக்கின்றன.  ஆனால்  சட்டப்பிரச்சினை  எழும்போது  சட்டத்தைப்  பாதுகாத்து  நீதி  வழங்கும்  பொறுப்பு  நீதிபதிகளுக்கு  மட்டுமே  உண்டு.  நீதி  வழங்க  வேண்டும்  என்கின்ற  கடப்பாட்டில்  இருந்து  நீதிபதிகள் ஒருபொழுதும்  நழுவக்கூடாது.  அவர்களின்  பொறுப்பு  மிகவும்  புனிதமானது  என்று  வலியுறுத்தத்  தேவையில்லை.

நீதிபதிகள்  நேர்மையானவர்களாக,  நியாயமானவர்களாக,  இன,  மத  மற்றும்  யாதொரு  பேதத்திற்கும்  மனத்தில்  இடம்  தராது  நீதி  வழங்கவேண்டும்.  இந்த  உண்மையை,  இந்தக்  கடப்பாட்டை,  இந்தப்  பொறுப்பை  மறந்து  செயல்படுபவரின்  நீதி  வழங்குதல்  சந்தேகத்திற்கு  உட்பட்டதாகிவிடும்.  அதோடு,  நீதியின்  தன்மையை  களங்கப்படுதிவிடும்.   நீதிபதிகள்  எப்படிப்பட்ட  பொறுப்புடன்,  கடமையுடன்  செயல்படவேண்டும்  என்பதை  அரசமைப்புச்  சட்டமும்  மற்ற  சட்டங்களும்  விளக்குகின்றன.

அரசமைப்புச்  சட்டத்தின்  ஆறாம்  அட்டவணையில்  நீதிபதிகள்  எப்படிப்பட்ட  ஆணைமொழி  நல்க  வேண்டும்  என்பதை  துல்லியமாக  விளக்கப்பட்டுள்ளது.  அதில்  முக்கியமாக  “நான்  மலேசியாவை,  அதன் அரசமைப்புச்  சட்டத்தை  பேணி,  காத்து,  தற்காப்பேன்”  என்கிறது.  எனவே,  நீதிமன்றத்தின்  முன்  வருகின்றவர்கள்  நீதியைத்  தேடி  வருகிறார்கள்,  அவர்களுக்கு  நீதி  வழங்காமல்  செயல்படுவது  எந்த  வகையிலும்  அரசமைப்புச்  சட்டத்தை   மதிக்கின்றச்  செயலாகக்  கருத  முடியாது.

அதோடு,  சொந்த  காரணங்களுக்காக,  அது  எந்த    வடிவத்தில்  இருந்தாலும்  சரி,  அதாவது,  இனம்,  மதம்,  நிறம்,  சமுதாயத்தில்  முக்கிய  நிலையில்  இருப்பவர்கள்.  அரசியல்  அதிகாரம்  கொண்டவர்களின்  கட்டளைகளுக்கு  அல்லது  விருப்பங்களுக்கு  கைகொடுக்கும்  வகையில்  நீதிவழங்கும்  தரம்  அமைந்தால்  அது  நீதி  அல்ல.  இறைவனின் மீது  நம்பிக்கை  கொண்டவர்கள்  இப்படிப்பட்ட  செயல்களில்  ஈடுபடுவார்களானால்  இறைவனும்  ஏற்றுக்கொள்ளமாட்டார்.

அப்படி  செயல்பட்டால்  அது  இறைவனுக்கு  இழைத்தத்  துரோகம்  என்றுதான்  சொல்லவேண்டும்.  இவர்கள்  ஒரு  உண்மையை  அறிந்துகொள்வது  நல்லது.  இறைவனைத்  திருப்திப்படுத்தும்  பொருட்டு  நீதியைப்  புறக்கணித்தால்  அது  பொய்யான,   மனித  குலத்துக்கு  எதிர்பானத்  தீர்ப்பாகும்.  காரணம்,  ஒருவர்  இறைவனைத்  திருப்திப்படுத்த  நினைப்பது  அது  சொந்த  நலனுக்காக  என்பதாகும்.

சொந்த  நலனைக்  கருதி  நீதி  வழங்குவது  நியாயமாகாது.  இறைபற்று,  இனப்பற்று,  மதப்பற்று,  பொருளாதார  மேம்பாடு  யாவும்  மனித  நேயத்துக்கு  அப்பாற்பட்டவை  அல்ல.  மனித  நேயத்தை  உதறித்தள்ளும்  நீதி,  மனிதனை  மதிக்காத  நீதி  நீதியுமல்ல,  அவ்வாறு  நீதி  வழங்குபவர்  நீதிபதி  என்று  சொல்லிக்கொள்ள  தகுதியற்றவர்  எனலாம்.

இங்கே  கிரேக்கத்  தத்துவஞானி  சாக்ரட்டீஸ்  கதை  ஞாபகப்படுத்திக்  கொள்வது  நல்லது.  ஒரு   தடவை  சாக்ரட்டீஸ்  மன்றத்தின்  தலைவராக  நியமிக்கப்பட்டபோது  அவர்  எடுதுக்கொண்ட  ஆணைமொழி  யாதெனில்,  “நான்  சட்டப்படி  நடந்துகொள்வேன்”  என்பதாகும்.  திராசிலஸ் (Thrasyllus),  இரசினிடெஸ் (Erasinides) மற்றும்  அவர்களின் சகாக்கள்  யாவருக்கும்   மரண  தண்டனை  வழங்கவேண்டுமென்ற  ஒரே  தீர்மானத்தை  வாக்கெடுப்புக்கு  சமர்ப்பிக்க  மறுத்தார்  சாக்ரட்டீஸ்.

சாக்ரட்டீஸ்  மீது  மக்கள்  சினம்  கொண்டனர்,  அதிகாரத்தில்  இருப்பவர்கள்  மிரட்டினர்.  சாக்ரட்டீஸ்  மசியவில்லை.  அவரைப்  பொறுத்தவரையில்  சட்டப்படி   நடந்துகொள்வதே  மேல்.  இந்தப்  பாடத்தை  நம்  நீதிபதிகளும்  உணர்ந்தால்  மெச்சத்தக்கதாக  இருக்கும்.