ரியுகாஸலுக்கு எதிரான புகாரைத் தூதரகத்தின் வழி செய்யுமாறு ராவுக்கு பிரிட்டிஷ் போலீசார் அறிவுறுத்து

raoசரவாக்  ரிப்போர்ட்  செய்தி  ஆசிரியர்  கிளேர்  ரியுகாஸல்- பிரவுனுக்கு  எதிராக  புகார்  செய்ய  முயன்ற  Pertubuhan Minda dan Sosial Prihatin Malaysia (பிஎம்எஸ்பி)  ஆலோசகர்  ராமேஷ்  ராவிடம்  மலேசிய  தூதரகத்தின்  மூலமாக  புகாரை  அனுப்பி  வைக்குமாறு  லண்டன்  போலீசார்  கூறி  விட்டனர்.

இச்சம்பவம்  நேற்று,  ராவ்  லண்டனில்  உள்ள  வெஸ்ட்  எண்ட்  மத்திய  போலீஸ்  நிலையத்தில்   கிளேர்  ரியுகாஸல்- பிரவுனுக்கு  எதிராக புகார்  பதிவு  செய்யச்  சென்றபோது  நிகழ்ந்தது.

“ஆவணங்களும்  ஆதாரங்களும்  தொலைந்து  போகாதிருக்க  மலேசிய  தூதரகம்  மூலமாக  அவற்றை  அனுப்பி  வைக்கும்படி  பிரிட்டிஷ்  போலீசார்   தெரிவித்தனர்”, என  ராவ்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

அதன்படி, ராவ் மலேசிய  தூதரகத்தின்வழி  புகாரையும்  அதற்குச்  சான்றாக  சில  ஆவணங்களையும்  அனுப்பி  வைத்திருக்கிறார்.   சரவாக்  ரிப்போர்ட்  செய்திகளைத் தணிக்கை  செய்வதற்காக  ரியுகாஸல்- பிரவுன்  தம்மை   வேலைக்கு  அமர்த்தியாகக்  கூறும்  லெஸ்டர்  மெலாஞியின்  சத்திய  பிரமாணம்.  ஆவணங்களைப்  பொய்யாக்குதல்  தொடர்பில்  லெஸ்டருக்கும்  ரியுகாஸல்- பிரவுனுக்குமிடையில்  நடந்த  மின்னஞ்சல்  உரையாடல்கள்,  சரவாக்  ரிப்போர்ட்  செய்திகள்  எல்லாமே  பொய்  என்று  கூறும்  பெட்ரோசவூதி-இன்  கடிதம்,  மலேசியாவில்  ரியுகாஸல்- பிரவுனுக்கு  எதிராக  செய்யப்பட்ட  போலீஸ்  புகார்கள் முதலியவை  அந்த  ஆவணங்களில்  சில.
ராவ்,  இதற்குமுன்  ரியுகாஸல்- பிரவுனுக்கு  எதிராக  மலேசிய  போலீசிடமும்  புகார்  செய்திருக்கிறார்.