விக்னேஸ்வரனைச் சந்திக்காமலேயே திரும்பிய சுஷ்மா..! எப்படித் தீரும் தமிழர் பிரச்சினை?

sushma-returnஇலங்கைக்கு சென்றிருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரனை மட்டும் சந்திக்கவில்லை. அவரை சந்திக்கக் கூடாது என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அவரைத் தவிர மற்றவர்களை சந்தித்துப் பேசியுள்ளார் சுஷ்மா. இது எந்த அளவுக்கு ஈழத் தமிழர்களுக்கு உதவி புரியும் என்று தெரியவில்லை.

அதை விட முக்கியமாக தமிழர்களின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆக்கப்பூர்வமாக எதுவும் விவாதிக்கப்பட்டது போலவும் தெரியவில்லை.

தமிழ் மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்வு செய்த விக்னேஷ்வரனை சுஷ்மா சந்திக்கவில்லை என்பதிலிருந்தே தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான ஆக்கப்பூர்வமான பேச்சுக்கள், சுஷ்மாவின் பயணித்தின் போது இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என்பதை ஊகிக்க முடிகிறது.

அதேசமயம், இலங்கை எதிர்க்கட்சித் தலைவரான ஆர். சம்பந்தனை சுஷ்மா சந்தித்துப் பேசினார். கிழக்கு மாகாண தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இந்திய வம்சாவளி தமிழர்களின் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். அதேபோல இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்களையும் சுஷ்மா சந்தித்துப் பேசினார்.

2 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை கொழும்பு புறப்பட்டுச் சென்றார் சுஷ்மா சுவராஜ். நேற்று தனது பயணத்தை முடித்துக் கொண்டு அவர் தாயகம் திரும்பினார்.

இந்த 2 நாள் பயணத்தின் முக்கிய நோக்கம் வர்த்தகம் மட்டுமே என்பது சுஷ்மாவின் சந்திப்புகளை வைத்து எளிதாக அறிய முடிகிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, அதிபர் மைத்ரிபால சிறிசேன ஆகியோருடன் நடந்த சந்திப்புகள் இதைத்தான் சுட்டிக் காட்டுகின்றன.

தனது பயணத்தின் போது ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒரு மணி நேரம் தனியாகப் பேசினார் சுஷ்மா. அப்போது இரு தலைவர்களும் பரஸ்பரம் தத்தமது நாடுகளில் முதலீடுகளை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

திருகோணமலையில் இரு நாடுகளும் இணைந்து ஏற்படுத்தவுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலம் குறித்துத்தான் இருவரும் முக்கியமாகப் பேசியுள்ளனர்.

அனைத்து நிலைகளிலும் இரு நாடுகளும் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ரணில் வற்புறுத்தினாரம்.

இந்த சந்திப்பின் போது எல்லாப் பிரச்சினைகள் குறித்தும் பேசி முடித்த பின்னர் தமிழர் பிரச்சினை குறித்தும் பொதுவாகப் பேசியுள்ளனர் இரு தலைவர்களும்.

இந்தப் பேச்சின்போது சுஷ்மா சுவராஜ் தரப்பில் அதாவது இந்தியத் தரப்பில் எந்த வலியுறுத்தலும் முன்வைக்கப்பட்டதாக தெரியவில்லை.

மாறாக, ரணிலே பொதுவாக தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் குறித்து இலங்கை அரசு தன்னாலான முயற்சிகளைத் தொடரும் என்று தெரிவித்தாராம்.

தனது பயணத்தின்போது அதிபர் சிறிசேன, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா ஆகியோரையும் சந்தித்துப் பேசினார் சுஷ்மா. இந்த சந்திப்புகளிலும் பொதுவான பேச்சுக்களே இடம்பெற்றுள்ளன.

மேலும் இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவருமான ஆர். சம்பந்தனுடனும் சுஷ்மா பேசினார்.

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்கள், கிழக்கு மாகாண தலைவர்கள், தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்துள்ளார் சுஷ்மா.

இத்தனை பேரைச் சந்தித்த சுஷ்மா, இலங்கை வடக்கு மாகாண மக்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் விக்னேஷ்வரனை மட்டும் சந்திக்கவில்லை. அவரைச் சந்திக்கக் கூடாது என்று சுஷ்மாவுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரான, அங்கீகாரம் பெற்றவரான, முதல்வர் பொறுப்பில் இருக்கக் கூடியவரை புறக்கணித்து விட்டு சுஷ்மாவின் இந்த இலங்கை பயணம் இனிதே முடிவுற்றுள்ளது.

உண்மையில் சுஷ்மாவின் இந்தப் பயணம் ஈழத் தமிழர்களுக்கு நலன் பயக்குமா என்பது சந்தேகம்தான்.

அதேபோல இராமேஸ்வர் மீனவர் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான். அதுகுறித்தும் கூட ஆக்கப்பூர்வமாக பேசப்படவில்லை என்றே தெரிகிறது.

இந்த கூட்டு மாநாடு மற்றும் சந்திப்புகளின் முக்கிய நோக்கம் இரு நாட்டு வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதும், முதலீடுகளை அதிகரிப்பதுமே என்றே தெரிகிறது, கருதப்படுகிறது.

-http://www.tamilwin.com

TAGS: