நிலைமாறு கால நீதி வேண்டாம். பரிகார நீதியே வேண்டும்!

un_hr_ fshkfdr0001இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹீசேன், கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் வடக்கு கிழக்கு மாகாண சங்கங்களின் (FSHKFDR – North East) பிரதிநிதிகளை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது, கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான உள்நாட்டு செயல்முறைகளிலும், உள்நாட்டு ஆணைக்குழுக்களிலும் தாம் நம்பிக்கை இழந்தவர்களாக உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

‘நிலைமாறு கால நீதி வழங்கல்’ செயல்பாட்டு முன்னெடுப்புகள் யாவும் இலங்கை அரசாங்கத்தை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர்கள் ஆணையாளருக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, பரிகார நீதியே தமது காயங்களுக்கு சிறந்த நிவாரணியாக அமையும் என்று தாங்கள் உணர்வதாகவும் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆணையாளர் சயிட் அல் ஹீசேனிடம் வலியுறுத்தினர்.

ஆட்கடத்தல் மற்றும் தடுத்துவைத்தல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் சமகால பிரச்சினைகள், குறைகள், தேவைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட ஆணையாளர், தம்முடன் நேரடி தொடர்பிலிருக்குமாறு கூறி தனது விருந்தினர் (Visiting Card) அட்டையை சங்கங்களின் பிரதிநிதிகளிடம் இதன் போது வழங்கினார்.

ஆணையாளருடனான சந்திப்பில், கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் வடக்கு கிழக்கு மாகாண சங்கங்களின் (FSHKFDR – North East) சார்பில் திருமதி ஜெ.நாகேந்திரன், திருமதி அமலி, திருமதி செல்வராணி ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: