மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் முதல் டிஜிட்டல் தமிழ்ப்பள்ளி

midlands school1மலேசியா, சிலாங்கூர் மாநிலத்துள்ள மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி அதன் ஆறு வகுப்பறைகளையும் அதிநவீன டிஜிட்டல் வகுப்பறைகளாக மாற்றியுள்ளது. இப்பள்ளியில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் அனைத்தும் டிஜிட்டல் வழியாகவே நடத்தப்படுகிறது

21 ஆம் நூற்றாண்டில் கற்றல் கற்பித்தல் அதிநவீன டிஜிட்டல் வகுப்பறையில் நடத்தப்பட வேண்டும் என்பது மலேசியக் கல்வி அமைச்சின் திட்டமாகும். அத்திட்டத்தை இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே மிட்லெண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி அமலாக்கம் செய்து விட்டது என்று அப்பள்ளி மேலாளர் வாரியத்தின் தலைவர் கா. உதயசூரியன் கூறினார்.

இந்த அதிநவீன டிஜிட்டல் வகுப்பறையில் பொருத்தப்பட்டிருக்கும் ஊடாடு வெண்பலகை மற்றும் காட்சியாக்கர் ஆகியவற்றின் பயன்பாடு மிகச் சிறந்த ஒன்றாகும் என்பதோடு இவை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல வழிகளில் கற்றல் கற்பித்தலை மேம்படுத்தப் பயன்மிக்கதாக அமைந்துள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் முதலாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்கள் தற்போது இப்புதிய டிஜிட்டல் வழி கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து செயல்படலாம்

20160104_083151இப்புதிய டிஜிட்டல் முறையால் கற்றல் கற்பித்தலுக்கு  ஏதேனும் பங்கம் விளையும் என்று அச்சப்பட வேண்டியதில்லை. இது கவர்ச்சியும் பயனும் கொண்டதாகும். 82 அங்குல தொடுத்திரை, நேர்த்தியான ஒலி மற்றும் ஒளி, பல வண்ணம் ஆகிய அனைத்தும் மாணவர்களைக் கவரும் என்பதில் ஐயமில்லை என்று விளக்கமளித்த சூரியன், பழுதாகி விடுமே என்ற பயமில்லாமல் எளிமையாக அதனைப் பயன்படுத்தலாம் என்பது அதன் சிறப்பு அம்சங்களில் ஒன்று. இவை அனைத்தும் மாணவர்களின் கவனத்தையும் ஆர்வத்தையும் வலுப்படுத்தும் என்பது உறுதி என்றாரவர்.

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இனிமேல் புத்தகங்களைச் சுமக்க வேண்டியதில்லை. மாணவர்களின் பாட மற்றும் பயிற்சி புத்தகங்கள் அனைத்தும் இந்த டிஜிட்டல் அமைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அவற்றின் வழி கற்றல் கற்பித்தலை மிகச் சிறப்பாக நடத்தலாம்,  மாணவர்கள் தங்களின் இடுபணியை அனைத்து மாணவர்களும் பார்க்கும் வகையில் இதில் செய்து காட்டலாம் என்று அவர் மேலும் கூறினார்.

20160104_083248மேலும், ஆசிரியர்களும் மாணவர்களும் தனித் தனியாகச் செயல்பட வேண்டியதில்லை.  ஆசிரியர்கள் தொடுத்திரையின் வழி, உடனுக்குடன் தங்களின் நடவடிக்கைகளில் மாணவர்களைக் கவரும் வகையில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். மேலும் காட்சியாக்கத்தின் வழி “A”அளவிலுள்ளவற்றை உருப்பெருக்கம் செய்து அதன் உள்ளடக்கத்தை மாணவர்களும் ஆசிரியர்களும் தெள்ளத் தெளிவாகக் காண வழிவகுப்பதோடு அவற்றை உடனுக்குடன் திருத்தி சரி செய்யவும் பேருதவியாக அமைந்துள்ளது என்று சூரியன் மேலும் தெரிவித்தார்.

அதோடுமட்டுமில்லாமல், ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ற திட்டமிடலை இலகுவாக்குகிறது. தற்போது, உலகமயமாகியுள்ள கல்வியை மாணவர்களுக்கு அளிக்க இணையப் பயன்பாடு மிகவும் அவசியமானது. இப்பயிற்றுத் துணைப் பொருள்களின் வழி இணைய வழி கற்றலை மிகவும் எளிமையாக நடத்த முடிகிறது. உடனுக்குடன் தகவல்களைப் பெற்று, வீட்டில் இணைய வசதி இல்லாத மாணவர்களும் பயன் பெற ஏதுவாக உள்ளது. மேலும், அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பல கருவிகளைக் கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்த சூரியன், உயர்நிலைச் சிந்தனைக் கருவி , இசைக் குறி, கணித வடிவியல் கருவி போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் கூறினார்.

21 ஆம் நூற்றாண்டிற்கு பொருத்தமான வகுப்பறைகள் 

ஒட்டுமொத்தமாக, இந்த அரிய தொழில்நுட்ப சாதனங்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓர் அரும்பெரும் களஞ்சியமாகவும், அறிவார்ந்தப் பயன்பாடாகவும் அமைகிறது என்றால், அது மிகையாகாது என்றாரவர்.

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியின் ஆறு வகுப்பறைகளுடன் அதன் அறிவியல்கூடமும் 21 ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான கற்றல் கற்பித்தலுக்குத் தேவையான அனைத்தையும் கொண்டுள்ளன.

20151230_225356கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆசிரியர்களுக்கு இப்புதியத் திட்டத்திற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன என்பதைத் தெரிவித்த சூரியன், பள்ளி வாரியம், பள்ளி நிருவாகம் மற்றும் பள்ளியைச் சார்ந்த இதர தரப்பினரின் ஒத்துழைப்போடு 21 நூற்றாண்டுக்கான நவீன டிஜிட்டல் முறையிலான கற்றல் கற்பித்தல் திட்டம் மிட்லண்ட்ஸ் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

புத்தாக்க முறையில் கணினியின் துணையோடு கற்றல் கற்பித்தலை மேற்கொள்வது மிகவும் பயன் உள்ளதாகவும்,சுலபமாகவும் உள்ளதாக பள்ளியின் தலைமையாசிரியர் திரு மலரவன் கூறினார்.

இத்திட்டத்தின் பயன் கருதி, இப்பள்ளியின் வாரியப் பொருளாளர் கிளாசிக் சுப்பையா, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இரவீந்திரன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் குமரவேல் மற்றும் வாரிய உறுப்பினர்கள் கணேசன், மோகன்ராஜ், சீரியநாதன். மற்றும் வேலு போன்றோர் பெரும் ஒத்துழைப்பை நல்கினர் என்று சூரியன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

செலவு நம்முடையது!

IMG_7252மாவட்ட கல்வி இலாகா மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியை 21 ஆம் ஆண்டில் கற்றல் கற்பித்தலில் நவீன டிஜிட்டல் முறையைப் பின்பற்றும் முதல் தமிழ்ப்பள்ளியாக அங்கீகரித்துள்ளது என்று சூரியன் தெரிவித்தார்.

இது போன்ற மல்ட்டி மீடியா அடிப்படையிலான கற்பித்தல் நடவடிக்கை மாணவர்கள் மத்தியில் பெரும் மாற்றத்திக் கொண்டு வரும் என்பதில் தாம் பெரும் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். கல்வி கற்பதில் மெதுவாகக் கிரகிக்கும் நிலையிலான மாணவர்களுக்கு இப்புதியத் திட்டம் பயனானதாக அமையும் என்றும் அவர் கூறினார்.

பாடப்புத்தகங்களின் குறிப்புகளும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பதால் காலப்போக்கில் புத்தகத்தைச் சுமப்பதிலிருந்து மாணவர்கள் விடுதலைப் பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் சூரியன் நம்பிக்கை தெரிவித்தார்.

இப்புதியத் திட்டத்தின் நன்மைகளைப் பெற்றோர்கள் முன் வைத்து மாணவர்களின் எண்ணிக்கைய அதிகரிக்கும் நோக்கில் செயல்பட பள்ளித் தரப்பினர் முற்படவிருப்பதாகவும் சூரியன் தெரிவித்தார்.

21ஆம் நூற்றாண்டுக்கான இப்புதிய டிஜிட்டல் வழியிலான கற்றல் கற்பித்தலுக்கான ஒரு வகுப்பறையை நிருமாணிக்க ரிம15,450 செலவு செய்யப்பட்டதாக சூரியன் கூறினார்.