ஜனநாயகத்துடன் கூடிய சுய நிர்ணய உரிமையினை புதிய அரசியலமைப்பு உறுதிப்படுத்த வேண்டும்!

private_Law001இன்றைய தேசிய அரசியலிலும், பன்னாட்டு அரசியலிலும் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ள விடயங்களாக சுய நிர்ணய உரிமை மற்றும் பங்குபற்றல் ஜனநாயகம் என்பன விளங்குகின்றன.

1863 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக விளங்கிய ஆப்ரகாம் லிங்கன் “கெட்ஸ்பேர்க்” நகரத்தில் இடம்பெற்ற உரை நிகழ்வொன்றில் ஜனநாயகம் என்பது “மக்களால் மக்களுக்காக கொண்டு நடாத்தப்படும் மக்களின் அரசாங்கம்” என மக்கள் இறைமையை முதன்மைப்படுத்தி ஜனநாயகத்துக்குரிய விளக்கத்தினை கொடுத்திருந்தார்.

இவ்வாறான ஜனநாயக ஆட்சித் தொடர்பான சிந்தனைகள் காலத்துக்குக் காலம் மாற்றமடைந்து வந்திருப்பதை காணலாம். கிரேக்க நகர அரசுகளில் ஆரம்பித்த நேரடி ஜனநாயகம் பின்னர் சனத்தொகை பெருக்கம், நிலப்பரப்பின் விரிவாக்கம் என்பவற்றினால் பிரதிநிதித்துவ ஜனநாயகமாக மாற்றியமைக்கப்பட்டது.

மக்கள் தமது அரசியல் செயற்பாடுகளை தமது பிரதிநிதிகளின் ஊடாக நிறைவேற்ற முனைவதையே இப் பிரதிநிதித்துவ ஜனநாயகம் குறித்து நிற்கின்றது.

இருப்பினும் காலப்போக்கில் இப் பிரதிநிதித்துவ ஜனநாயக சிந்தனைகளில் சிறிய மாற்றம் ஏற்படலாகியது. அம் மாற்றம் மூன்றாம், நான்காம் மண்டல (நீட்ஸ்மனின் வகைப்பாடு) நாடுகளை மையப்படுத்தி தோற்றம் பெற்ற தேசிய சிறுபான்மை இனங்களின் விடுதலைப் போராட்டத்தினால் பங்குபற்றல் ஜனநாயகம் என்றதொரு ஜனநாயக சிந்தனையை தோற்றுவித்தது.

இவ்வாறான பங்குபற்றல் ஜனநாயக வடிவம் தோற்றம் பெறுவதற்கு 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகில் பல நாடுகளில் காணப்படும் பல்வேறுபட்ட சிறுபான்மை தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை மையப்படுத்தி  தோற்றம் பெற்ற விடுதலை போராட்டமே காரணமாகியது.

தேசிய சிறுபான்மை இனத்தின் சுய நிர்ணய உரிமையும் பங்குபற்றல் ஜனநாயகமும்

“இனக்குழுமம்” என்பது இன்று சர்வதேச அளவில் பாரிய விவாதத்தினை தோற்றுவித்துள்ள பதமாக காட்சியளிக்கின்றது.

இனம் அல்லது இனக்குழுமம் என்பதை “அந்தோனி ஸ்மித்”பின்வருமாறு வரையறை செய்கின்றார்.“கற்பனையான பொது மரபுரிமை, பொதுவான ஞாபகங்கள், கலாசார கூறுகள், வரலாற்று ரீதியான தாயகம் என்பவற்றைக் கொண்டுள்ளதோடு தமக்கென ஒரு பெயரையும் கொண்டுள்ள மக்கள் குழுவே இனக்குழுமம் ஆகும.”

இவ்வாறு தோற்றம் பெற்ற ஒவ்வொரு இனக்குழுமமும் பல்வேறு காரணங்களின் நிமித்தம் தங்களை தாங்களே ஆள வேண்டும் என்ற சுய நிர்ணய உரிமையை வலியுறுத்தி வருகின்றன.

இத்தகைய சுய நிர்ணய உரிமையை வலியுறுத்தி போராடும் இனங்களில் “சிறுபான்மை இனம்”முதன்மையானதாகும் “குறிப்பிட்ட நிலப்பிரதேசத்தில் வாழும் மக்களில் சனத்தொகையில் குறைவாக உள்ள இனமே சிறுபான்மையினம்” என அறிஞர்கள் வரையறை செய்கின்றனர்.

ஒரு நாட்டில் வாழும் சிறுபான்மையினங்களை தேசிய இனங்களாக அரசியல் யாப்பு ரீதியாக அங்கீகரிக்காத போதே அவ்வினங்கள் தங்களை தாங்களே ஆள வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி பலபோராட்டங்களை தோற்றுவிக்கின்றனர்.

இத்தன்மையான இன விடுதலை போராட்டங்களை சந்தித்த நாடுகளுக்கு இலங்கை மாத்திரம் விதிவிளக்கல்ல.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் இங்கு வாழும் தேசிய சிறுபான்மை இனத்தினருக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள், சலுகைகள் அரசியல் யாப்பு ரீதியாக வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதன் காரணமாகவே தேசிய அரசியலில் இருந்து வடகிழக்கு தமிழர்கள் உட்பட தேசிய சிறுபான்மை இனங்கள் தனிவழி அரசியல் போராட்டத்தினை தொடங்கினர்.

இப்போராட்டம் ஒரு கட்டத்தில் பாரிய அழிவினை தனதாக்கிக் கொண்ட 30 வருடகால யுத்தமாகவும் மாறியது. இது ஒருபுறமிருக்க இத்தகைய சுயநிர்ணய உரிமையின் முக்கியத்துவத்தை முதன் முதலில் வலிறுத்தியவராக சோவியத் யூனியனில் மாக்ஸிசத்தை லெனினிஸமாக புதுப்பித்து வழங்கிய லெனின் கருதப்படுகின்றார்.

லெனின் உடைய பார்வையில் “சுயநிர்ணய உரிமையை கைகொண்டு முதலாளித்துவத்தின் பிடியில் இருந்து பாட்டாளி வர்க்கம் விடுபட்டு தங்களை தாங்களே ஆளும் நிலைக்க வர வேண்டும்” என்பதாக இருந்தது.

மேலும்,தேசிய சிறுபான்மை இனங்களின் சுய நிர்ணய உரிமையினை முன்னால் அமெரிக்க குடியதிபதி வூற்றோ வில்சனும் வலியுறுத்தியிருந்தமையைக் காணலாம்.

வூற்றோ வில்சன் ஒரு விடயத்தினை தெளிவாக வலியுறுத்தியிருந்தார். “ஒரு நாட்டின் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது மட்டும்தான் உலக நாடுகளுக்கிடையில் அமைதியைப் பேணவும் உலக சமாதானத்தினை நிலைநிறுத்தவும் சிறந்த வழி.

இல்லையேல் இன்னொரு உலக யுத்தம் தவிர்க்க முடியாது போய்விடும்.” என்றார்.

வூற்றோ வில்சனின் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை உலக நாடுகள் ஏற்க மறுத்தமையே இரண்டாம் உலகமகா யுத்தத்தை தோற்றுவித்தது.

இவ்வாறு லெனின், வூற்றோ வில்சன் அன்று வலியுறுத்தியிருந்த தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை கடந்த காலங்களில் இலங்கையில் ஆட்சியில் இருந்த பேரினவாத அரசாங்கங்கள் அரசியலமைப்பில் முறையாக ஏற்று அங்கீகரிக்க தவறியமையே இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்ததோடு அதன் பரிணாம வளர்ச்சியின் பயனாக பாரிய அழிவினை ஏற்படுத்திய சிவில் யுத்தமாகவும் மாறியது.

இவ்வாறு தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையினை முறையாக அரசியல் யாப்பின் ஊடாக ஏற்று அங்கீகரிக்க தவறியமையே இலங்கை உட்பட பல மூன்றாம் மண்டல நாடுகளில் இன முரண்பாடுகள், தேசிய சிறுபான்மை இனங்களின் விடுதலை போராட்டங்கள் தோற்றம் பெற காரணமாகியது.

இத்தகைய போராட்டங்கள், இன முரண்பாடுகளை தவிர்க்கவே தற்போது “பங்குபற்றல் ஜனநாயகம்” என்றதொரு அம்சம் பல தரப்பினராலும் முன்வைக்கப்படுகின்றது.

பங்குபற்றல் ஜனநாயகம் என்பது “ஒரு நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் தமக்கிடையில் காணப்படும் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாடு ரீதியான வேறுபாடுகளை மறந்து தேசிய ஒருமைப்பாட்டுக்காக ஒன்றிணைந்து ஆட்சியில் பங்குபற்றுவதாகும்.”

இன்னொரு வகையில் கூறின் “எல்லா சிறுபான்மை மக்களும் ஆட்சியில் பங்குபற்றுகின்ற ஜனநாயகமே பங்குபற்றல் ஜனநாயகமாகும்” இத்தன்மை வாய்ந்த சுய நிர்ணய உரிமையுடன் கூடிய பங்குபற்றல் ஜனநாயகத்தின் உறுதிப்படத்துவதாகவே இலங்கையின் புதிய அரசியல் திட்ட உருவாக்கம்  அமைய வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது

இலங்கையின் மூன்றாம் குடியரசு யாப்பு உருவாக்கமும் மக்களின் எதிர்ப்பார்ப்பும்

இலங்கையில் கடந்த வருடம் ஜனவரி மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து உதயமாகிய புதியதொரு அரசியல் கலாசாரம் இலங்கையில் தேசிய இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டினை நிலை நிறுத்துவதற்காகவும், 30 வருடகால உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காகவும், 2012 ஆம் ஆண்டில் இருந்து இலங்கைக்கு எதிராக ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட கண்டன தீர்மானங்களில் இருந்து தேசிய அரசாங்கம் தன்னை பாதுகாத்துக் கொள்ளவும்  தற்போதைய ஜனாதிபதியும், பிரதமரும் சர்வதேசத்தின் ஆதரவுடன் பல்வேறு செயற்திட்ட முயற்சிகளில் இறங்கியுள்ளமை பாரட்டத்தக்கதே.

அவ்வாறான முயற்சிகளில் முதன்மையானதாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் அல்லது யாப்புத்திருத்தத்திற்கான நடவடிக்கைகள் விளங்குகின்றன.

1978 ஆம் ஆண்டு ஜே. ஆர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் உருவாக்கிய இரண்டாம் குடியரசு யாப்பில் காணப்படுகின்ற குறைபாடுகளும், சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமைகள் அரசியலமைப்பில் பல்வேறு இடங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளமையும், 30 வருடகால உள்நாட்டு யுத்தமும், சர்வதேசத்தின் அழுத்தங்களும் இன்று புதியதொரு அரசியல் அமைப்பிற்கான கோரிக்கையை தூண்டி நகர்த்தி செல்வதை யாரும் மறுக்க முடியாது.

அந்தவகையில் கடந்த சில மாதங்களாக புதியதொரு அரசியல் திட்ட மாற்றத்திற்கான முயற்சிகளில் அரசாங்கத் தரப்பினரும், சிவில் அமைப்பினரும் மும்முரமாக ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தற்போதைய அரசியல் திட்டத்தினை பாராளுமன்றத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு குழுவே உருவாக்கியது.

ஆனால் புதிய அரசியல் திட்ட உருவாக்கத்திற்கான பொறுப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களிடம் கையளித்திருப்பதாக குறிப்பபிடுகின்றார்.

அவ்வாறாயின் இப் புதிய அரசியல் திட்டத்தில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும், புதிய அரசியல் யாப்பில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள், பிரேரணைகள், சரத்துக்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை அறிவதற்காக “அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் ஆலோசனைக் குழு” அமைக்கப்பட்டுள்ளதோடு நாடலாவிய ரீதியில் இக்குழு பல அமர்வுகளை நடாத்தி வருவதினை காணலாம்.

அதேவேளை ஆளும் கட்சியினரும், எதிர் கட்சியினரும் தமது அரசிலமைப்பு முன்மொழிவுகளை முன்வைத்து வருகின்றனர்.

அத்துடன் இலங்கையில் வாழும் ஒவ்வோரு தேசிய இனங்களும் (இந்திய வம்சாவழி தமிழர்களும் அடங்குவர்) தமது பிரதிநிதிகளின் ஊடாக அரசியல் அமைப்பு மாற்றத்தின் போது சேர்க்கப்படவேண்டிய அம்சங்கள் தொடர்பில் “இனக்குழுமம்” என்ற வரையறைக்குள் இருந்து செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் ஒவ்வொரு இனக்குழுமமும் தமது தனித்துவத்தை பேணுவதற்காக அரசியலமைப்பில் சேர்க்க வேண்டிய அம்சங்கள் பற்றி பேசுகின்றனரே தவிர நாட்டின் சமூக ஒருமைப்பாட்டினையும், ஒத்த தேசியத்தன்மையினையும் வலியுறுத்தும் விதமாக பரிந்துரைகளை முன்வைப்பது அரிதாகவே காணப்படுகின்றது.

நான் ஏற்கனவே கூறியது போல ஒவ்வொரு இனமும் தனது தனித்துவத்தை “இனம்” என்ற வரையறைக்குள் இருந்து பேணுவதற்கு பூரண உரிமையுண்டு. ஆயினும் இனத்துவ அடையாளத்தை காரணம் காட்டி நாட்டினை பிளவடையச் செய்ய முயற்சிக்கும் ஏற்பாடுகளை அரசியலமைப்பில் இணைத்துக்கொள்ள வலியுறுத்த எந்தவொரு குடிமகனும் முனையக்கூடாது.

தற்போதைய அரசியல் திட்டத்தில் சிங்கள, பௌத்த வாதத்திற்கு முன்னுரிமை அளித்தமையினாலேயே பாரிய யுத்தத்தினை நாடு எதிர்கொள்ள நேரிட்டது. அத்தகையதொரு கரைப்படிந்த சுவடுகளை மீண்டுமொருமுறை நாட்டு மக்கள் சந்திப்பதற்கு உருவாகப்போகும் அரசியல் திட்டம் காரணமாகிவிடக்கூடாது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு இனத்திற்கோ,மொழிக்கோ, சமயத்திற்கோ யாப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதை தவிர்க்க வேண்டும். அத்தோடுஆளும் தரப்பினர் தமது ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்குறிய கருவியாக யாப்பினை பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும்.

இலங்கையில் வாழும் அனைத்து இனக்குழுமத்திற்கும் உரிய சுய நிர்ணய உரிமையினை யாப்பின் ஊடாக உறுதிப்படுத்த வேண்டும். இவ்வம்சம் அரசியல் திட்டத்தில் இணைக்கப்படவேண்டிய பிரதான அம்சமாகும்.

குறுகிய நோக்கில் சய நிர்ணய உரிமை வழங்கப்படும் போது நாடு பிளவடையும் என்ற வாதத்தினை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. காரணம் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய பங்குபற்றல் ஜனநாயகம் என்பது சிறுபான்மை மக்களும் பங்குபற்றும் ஜனநாயகமாகும்.

சுய நிர்ணய உரிமையினை மையப்படுத்தி பிரிந்து போக வேண்டும் என்ற சிநதனை எப்போது தோற்றம் பெறும் என்றால் அனைத்து மக்களும் பங்குபற்றும் ஜனநாயகம் சிறுபான்மை மக்களுக்கு மறுக்கப்படும் போது இந்த சுயநிர்ணய உரிமையை பயன்படுத்தி அவர்கள் பிரிந்து போக எத்தனிக்கின்றனர்.

ஆகவே அனைத்து மக்களுடைய அரசியல் பங்குபற்றுதலை உறுதிப்படுத்தக்கூடிய அரசியல் திட்டம் உருவாக்கப்படுமாயின் அங்கே பிரிவினை எண்ணம் தோற்றம் பெறாது.

இதுவரை காலமும் இலங்கையில் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புகளில் மேற்கூறிய சுயநிர்ணய உரிமை, மற்றும் முழுமையான பங்குபற்றல் ஜனநாயகம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்குறிய ஏற்பாடுகள் திருப்திகரமாக இடம்பெறவில்லை.

இன்றைக்கு நேரடி ஜனநாயக முறைக்கு சிறந்த தேசமாக காணப்படும் சுவிஸ்லாந்து, ஒற்றையாட்சியினுள் சமஸ்டிக்குறிய பண்பினை கொண்டியங்கும் பிரித்தானியா போன்ற நாடுகளில் வாழும் மக்கள் வேற்றுமையில் ஒற்றுமையை காண்பதற்கு சுயநிர்ணய உரிமையும், பங்குபற்றல் ஜனநாயகமும் யாப்பின் ஊடாக முழுமையாக வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமையே காரணமாகும்.

ஆகவே இன, மத, மொழி,புவியியல், பண்பாடு ரீதியான ஒருமைப்பாட்டினை தோற்றுவிக்கும் அம்சங்களை அமையப்போகும் அரசியல் திட்டத்தில் சேர்ப்பதோடு ஆழமான முறையில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய, பங்குபற்றல் ஜனநாயகத்தினை அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். அப்போதே ஆசியாவின் ஆச்சிரியமாக “ஐக்கிய இலங்கையை” கட்டியெழுப்ப முடியும்.

இரா.சந்திரசேகர்
[email protected]

-http://www.tamilwin.com

TAGS: