மைஸ்கில்ஸ் அறவாரியத்தைச் சாடுவது, அவதூறு நோக்கம் கொண்டது!

myskills 2 மைஸ்கில்ஸ் அறவாரியம் சார்புடைய ஒரு காணொளியைத் தனது முகநூலின் வழி பிரபலப்படுத்திய ஒரு நபர் அது சார்பாக காவல் நிலையத்திலும் புகார் செய்துள்ளதாக தி ஸ்டார் இணையத்தளம் நேற்று ஒரு செய்தியை வெளியிட்டது.

அந்தக் காணொளியில் ஒரு மாணவனை மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் நிர்வாகியான செல்வமலர் இரண்டு முறை அறைவதுபதிவாகியுள்ளது. அந்த மாணவன்  கிள்ளானில் உள்ள மைஸ்கில்ஸ் நடத்தும் பேக்கரியில் தொழில் பயின்று வருகிறான்.

இது சார்பாக பதிலளித்த செல்வமலர், அந்த மாணவன் சக மாணவி ஒருவரை தாக்கியதால்தான் அவ்வாறு தண்டிக்கப்பட்டதாகவும், இதற்கு முன்பு ஒருமுறை இதே போன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பதாகவும் கூறினார். “நான் கோபத்தால் அந்த மாணவனை அடிக்கவில்லை. அவன் செய்த தவறை சுட்டிக்காட்டி அதற்கான விளக்கம் கேட்டேன். அவன் எதுவும் பேசவில்ல. அதன் பிறகு அவன் மூக்குக் கண்ணாடியை அகற்றி விட்டு, முகத்தை சரியாகத் திருப்பி அவனை அறைந்தேன். அதன் பிறகுதான் அவன் பேச முற்பட்டான். அப்போது எங்களுடன் சுமார் 20 பேர் இருந்தனர்” என்றார்.

“மாணவர்கள் சக மாணவர்களிடம் ஒழுங்காகப் பழக வேண்டும். இதை நாங்கள்தான் உறுதி செய்ய வேண்டும். எனவே தண்டிப்பது என்பது தவிர்க்க இயலாதது. இம்மாதிரியான மாணவர்களுக்கு ஏதாவது ஒரு திறன் சார்ந்த கல்வியை வழங்கி அவர்களை சமூகத்தின் வளர்ச்சி பாதையில் இணைப்பதுதான் எங்களின் குறிக்கோள்”,  என்கிறார் செல்வமலர்.

மேலும், அந்த மாணவன் தொடர்ந்து பயிற்சி பெற்று வருவதாகவும், அடுத்தமாதம் அவனின் பயிற்சி முடிவடைந்ததும் அவன் பேக்கரி சார்ந்த தொழில் திறன் பெற்றிருப்பான் என்றார் செல்வமலர்.

Myskills1அந்தக் காணொளியில் காணப்பட்ட மாணவனின் தந்தை சுப்ரமணியம் (வயது 50), தாம் இது பற்றிய முழுமையானத் தகவலை அறிந்துள்ளதாகக் கூறினார். தமது மகன் செய்தது பெரிய  தவறு. அவனைத்  திருத்த செல்வமலர் மேற்கொண்ட நடவடிக்கையை தாம் ஆதரிப்பதாகவும், ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

எனது மகனால் இந்த அரும்பணியைச் செய்துவரும் மைஸ்கில்ஸுக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு வருந்துவதாகக் கூறினார். “என் மகனைப் பயன்படுத்தி மைஸ்கில்ஸ் வாரியத்தைச் சாட வேண்டாம்”, என்ற அவர், “பின்தங்கிய மாணவனான அவன் இன்று ஓரளவு திறன் பெற்றுள்ளான். அந்த வாய்ப்பை இவர்கள் வழங்கியுள்ளனர். இது எங்கள் குடும்பத்திற்கும் அவனுக்கும்  கிடைத்த ஒரு சாதனையாகும்”, என்றார்.

myskills3இது சார்பாக கருத்துரைத்த வழக்குரைஞர் கா. ஆறுமுகம் மைஸ்கில்ஸில் தாமும் தமது  மனைவியும் அங்கு பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள்  நடத்தியுள்ளதாக கூறினார்.  “இது புறக்கணிக்கப்பட்ட  நிலையிலுள்ள இளையத் தலைமுறையினருக்கு ஓர் எதிர்காலத்தைக் காட்ட ஆவல் கொண்ட அமைப்பு. இதைத் தியாக நோக்கமும் சமூகத்தைச் சீர்படுத்த வேண்டும் என்ற வெறியும் கொண்டவர்களால்தான் செய்ய இயலும்” என்றார்.

“எனது நண்பர்கள் பசுபதி, செல்வமலர், தேவா, கிருஸ்டினா, இராமா, மருத்துவர்கள் மணி மற்றும் சண்முகசிவா போன்றவர்களுடன் பலமுறை பேசும் போது அவர்களிடம் இந்த உணர்வுகளை உணர முடிந்தது”, என்றார் ஆறுமுகம்.

“இந்தக் காணொளி சார்பாக அதிக அக்கரை எடுத்துக்கொண்டு, பகிரங்க பரப்புரை செய்யும் நபர்கள், எதைச் சாதிக்க முற்பட்டுள்ளனர், அவர்களின் நோக்கம்தான் என்ன என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்”, என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அந்தக் காணொளியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும், ஆக்ககரமான ஆலோசனைகள் சொல்லவும் வக்கற்ற நிலையில், சமூக சீர்திருத்த நோக்கம் கொண்ட மைஸ்கில்ஸ் வாரியத்தை சாடுவது ஒரு கேவலமானச் செயலாகும். அது அவதூறு நோக்கம் கொண்டது.