வங்காளத் தேசத் தொழிலாளர் இறக்குமதி இந்தியர்களுக்கு ஆபத்தாக அமையும்!

Aru1சுமார் 15 லட்சம் தொழிலாளர்களை வங்காளத் தேசத்திலிருந்து அரசாங்கம் வரவழைக்கப்போவதாக துணைப் பிரதமர் அறிவித்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் இதை கட்டம் கட்டமாக நடைமுறை படுத்த அரசாங்கம் திட்டம் போட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சருமான அமாட் ஸாஹிட்   ஹமிடி அறிவித்துள்ளார்.

சிறுபான்மை இனமாக உள்ள  இந்தியர்களுக்கு இது ஒரு பெரிய ஆபத்தாக அமையும் என எச்சரிகிறார் சுவராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவர் கா.ஆறுமுகம். காரணம் பெரும்பான்மை இந்தியர்கள்  சொத்துடமையற்ற நிலையிலும் வறுமை நிலையிலும் உள்ளது முக்கிய காரணமாகும் என்கிறார்.

வறுமை அதிகரிக்கும்

இந்த நாட்டில் ஏற்கெனவே சுமார் 40 இலட்சம் அந்நியத் தொழிலாளர்களால் சம்பள நிலமை மோசமாகியுள்ளது. குறைந்த சம்பள அடிப்படையில் இங்கு கொண்டு வரப்படும் தொழிலாளர்களால் உள்நாட்டு தொழிலாளர்களின் சம்பள உயர்வு கட்டுப் படுத்தப்பட்டு அவர்கள் மேலும் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் என்கிறார் ஆறுமுகம்.  இந்நிலை மேலும் மோசமாகும்.

Gini racial breakdown மேலும் விவரிக்கையில், மலேசியா இன்னமும் ஒரு சீரான வகையில் தனது பொருளாதாரத்தை பகிர்ந்தளிக்கும் நிலைக்கு வரவில்லை. இருப்பினும் அரசாங்க ஆய்வுகள் அந்நிலைக்கு வந்து விட்டதாகச் சொல்கிறது. உதாரணமாக கிணி குறியீடு (Gini Coefficient) 0.472 (1970) என்ற நிலையிலிருந்து தற்போது 0.396  (2014) குறைந்துள்ளதாக அரசாங்க கருவூல அறிக்கை காட்டுகிறது. அதாவது இந்த எண் சுழியமாக இருந்தால் நாட்டின் வளம் அனைவருக்கும் சமமாக உள்ளதாவும், அந்த எண் ஒன்றாக இருந்தால் நாட்டின் வளம் முற்றாக ஒருவரிடம் இருப்பதாகவும் பொருள்படும்.  அனைத்து மக்களும் வளமுடன் வாழ அந்த எண் 0.4க்கு குறைவாக இருக்க வேண்டும், அந்த நிலையை நாம் அடைந்து விட்டதாக அரசாங்கம் கதை விடுகிறது என்கிறார்.

bangla workersவருமான பங்கீடு (Income Distribution) வேறு கதையைச் சொல்கிறது. மலேசிய மக்களில் கீழ்மட்ட 40 விழுக்காட்டினரின்  சராசரி மாதாந்திர குடும்ப வருமானம் ரிம 2,537 (2014) மட்டும்தான்.  இதில் கீழ்மட்ட  40 விகித இந்தியர்களும் அடங்குவர்.  குடும்ப வருமானமாக இந்தத்  தொகையை வைத்துக் கொண்டு வாழ்க்கையை கண்டிப்பாக ஓட்ட இயலாது. இதில் வாழும் பெரும்பான்மையோர் கடன் சுமையுடன்தான்  அன்றாடப் பொழுதைக் கழிக்கின்றனர்.

கல்வி, மருத்துவம், சாலைக்கட்டணம், விலைவாசி இப்படி எல்லாம் அதிகமாகி விட்ட நிலையில் வீடு வாங்கவும் இயலாத நிலையில் வாடகை வீட்டில் வாழ்ந்துக் கொண்டு அல்லல்படும்   இவர்களின் வருமானம் அதிகரிக்கப் பட வேண்டுமானால் அதை அரசாங்கம்தான் செய்ய இயலும்.

மனித ஆற்றலுக்கு பதில் இலாபத்திற்கு முதலிடம்

workerஅதைச் செய்ய அரசாங்கம் இரண்டு முறைகளை கையாளளாம். முதலாவது, மலேசியர்களின் அடிப்படை சம்பளத்தை  வாழ்வாதாரத்திற்கு (living wages) ஏற்ற வகையில் கூட்ட வேண்டும். இரண்டாவது, மக்களின் உற்பத்திச் செயல் திறனை அதிகரிக்க பெருமளவில் முதலீடு செய்ய வேண்டும். இதைச் செய்யாமல் வணிக நோக்கமும்  இலாபமும் ஈட்டும் முதலீட்டாளர்களின் சுரண்டல் பொருளாதாரக் கடப்பாட்டுக்கு  நமது அரசாங்கம் கைகோர்த்து சோரம் போவது மக்களின் வயிற்றில் அடிப்பதற்குச் சமமாகும் என்கிறார் ஆறுமுகம்.

நம்மைவிட குறைந்த மக்கள் தொகையை கொண்ட நார்வே (51 லட்சம்), நெதர்லாந்து (168 லட்சம்), சுவீடன்(97 லட்சம்), டென்மார்க் (57 லட்சம்) போன்ற நாடுகள் அறிவியல் தொழிற்நுட்ப வளர்ச்சியில் பெருமளவு முன்னேற்றமும் வளர்ச்சியும் அடைந்துள்ளன. இவர்களில் யாரும் அந்நியத் தொழிலாளர்களை நமது நாட்டைப்போல் லட்சக்கணக்கில் இறக்குமதி செய்து முன்னேற்றமடையவில்லை. மாறாக அவர்கள் தங்களின் குடிமக்களின் அறிவாற்றலை வளர்க்க அதிகமான முதலீட்டைச் செய்தனர் அதன் வழி நாட்டு மக்களின் உற்பத்தி செயல் திறனை அதிகரித்தனர்.

இருப்பதையும் இழப்போம்

அதோடுமட்டுமல்லாமல், மக்கள் தொகை விரிவாக்கத்தில் இந்தியர்கள் மேலும் பிந்தள்ளப்படுவர். தற்போது மலேசியர்களாக இருந்தும் இரண்டாம் தர வாழ்க்கையைக் கொண்டுள்ள இந்தியர்கள் மேலும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இவர்களின் குறைந்த முதலீடு கொண்ட தொழில்களும், வியாபாரமும், பணிகளும் அந்நியத் தொழிலாளர்களின் போட்டியால் பாதிப்படையும். இதனால் நாம் இருப்பதையும் இழக்கும் சூழ்நிலை உருவாகும்.

சிறுபான்மை இனமான இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 21 லட்சமாகும். அயல் நாட்டு தொழிலாளர்களி்ன் இறக்குமதி நமது மக்கள்தொகையை விட மூன்று மடங்கு அதிகமாகும். இவர்களின் ஈடுபாட்டால் சமூகப் பிரச்னைகள் கூடும். அதோடு  கள்ள வாக்குப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டால் நமது அரசியல் சக்தியும் அதனோடு இணைந்து வரும் பிரதிநிதித்துவமும் குறைந்து விடும் அபாயமும் உள்ளது என்று விவரிக்கிறார் வழக்கறிஞருமான ஆறுமுகம் .

குடியுரிமையற்றவர்களின் நிலைப்பாடு

red icஇந்தியர்களிடையே இன்னமும் பிறப்பு பத்திரம், திருமணப் பதிவு போன்ற காரணங்களால் குடியுரிமை அற்ற நிலையில் சுமார் 30,000 க்கு மேல் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது. மைடப்தார் என்ற இயக்கம் 2011-இல் துவங்கப்பட்டதிலிருந்து இதிவரை சுமார் 8,000 நபர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர்.  ஆனால் இந்த முக்கிய பிரச்சனைக்கு இன்னமும் தீர்வு வழி முறை உருவாக்கப்படவில்லை .

இது என்ன ஒரு பெரிய தேசியப் பாதுகாப்பு பிரச்சனையா என்று வினவும் ஆறுமுகம், அரசாங்கத்திற்கு இதைச்செய்யவேண்டும் என்ற அரசியல் விருப்பம் அறவே கிடையாது என்கிறார்.

அந்நியத் தொழிலாளர்கள் இறக்குமதிக்கு அரசாங்கம் காட்டும் ஆர்வமும் அவசரமும், பரம்பரையாக நாட்டுக்காக உழைத்த இந்தியர்கள் மீது காட்ட மறுப்பது எதனால் என்றும் வினவுகிறார்.

மலேசியா ஒரு நடுத்தர வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது. அதற்கு மேற்பட்ட  நிலைத்தன்மைக் கொண்ட வளர்ச்சி என்பது மக்களின் இயக்கச் சக்தியைக் கொண்டு உருவாக்கினால் மட்டுமே  உண்டாகும். இதற்கு தீர்வு காண மாற்று வழிகள் தேவை. அதனால், இந்த தொழிலாளர் இறக்குமதியை ஒட்டுமொத்தமாக அனைவருமே எதிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறார் ஆறுமுகம்.