கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சீமான் போட்டி

naam tamilarதமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். மேலும், 234 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தினார்.

இதில், கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தான் போட்டியிடுவதாக அறிவித்தார். கடலூரில் தான் போட்டியிடுவதாகவும் சீமான் அறிவித்தார்.

பின்னர் பேசிய சீமான், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தடுக்கப்படும் என்று  உறுதியளித்தார். உலகிற்கே உணவு அளித்த விவசாயிகள் இன்று கையேந்தி நிற்பதாக வேதனை தெரிவித்த சீமான், திமுக, அதிமுகவுக்கு மாற்று, நாம் தமிழர் கட்சி தான் என்றும் குறிப்பிட்டார்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி, தமிழகத்தில் எடுபடாது எனவும் சீமான் விமர்சித்தார்.   நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மதுரையை கலை இலக்கிய தலைநகராகவும், திருச்சியை ஆளும் நகரமாகவும் மாற்றுவது உட்பட பல்வேறு உறுதி மொழிகளை சீமான் வழங்கினார்.

பிப்ரவரி 23 மற்றும் 24 ஆம் தேதியில் புதுச்சேரி காரைகாலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகம் நடைபெறவுள்ளது என்றும் சீமான் தெரிவித்தார்.

மேலும், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திருநங்கை ரோஸ் போட்டியிடுவதாக அறிவித்ததோடு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கான வேட்பாளராக கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கடல்தீபனை அறிவித்தார். அதேபோன்று, கேரள மாநிலம் தேவிகுளம் சட்டப்பேரவை வேட்பாளராக கனகமணிகண்டனை அறிவித்தார்.

புதுச்சேரி மாநிலத்திலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாகவும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிக்கான வேட்பாளர் பட்டியலும் இம்மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களோடு இருக்க வேண்டும் என்பதற்காக கடலூர் தொகுதியில் தான் போட்டியிடுவதாகவும், நமது வாக்கு நம்மை ஆளவா? நாமே ஆளவா? என்ற கோஷத்துடன் தற்போதைய தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் அவர் பேசினார்.

-http://www.dinamani.com

TAGS: