ஹிண்ட்ராப் மக்களின் பேரியக்கமாக உருவாக வேண்டும்!

hindraf_politik_oneமக்கள் பிரச்சனைகளுக்கு நிறைவான தீர்வை விரும்பும் எந்த ஓர் இயக்கமும் தனிமனித தலைமைத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது  பெரும் தவறு. அவ்வாறு தனிமனிதனுக்கு முக்கியத்துவம் அளிப்பதின் மூலம் ஓர் இயக்கத்தின் நோக்கமே பணயம் வைத்துவிடப்படக்கூடிய ஆபத்து  நிகழலாம்.  ஹிண்ட்ராப் மக்களின் பேரியக்கமாக உருவாக தனிமனித தலைமைத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்பதற்கு ஹிண்ட்ராப் அமைப்பின் கடந்த காலமே ஒரு பாடமாக இருக்கட்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

கொள்கை மற்றும் கருத்து வேறுபாடுகளால் பதிவு பெற்ற ஹிண்ட்ராப் இயக்கத்திலிருந்து வெளியான ஒரு குழுவினர் தொடர்ந்து ஹிண்ட்ராப்-ஐ மக்களின் ஒரு  பேரியக்கமாக உருவாக்க சமூக ஆர்வலர்களுடன் ஒரு  கலந்துரையாடலை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  கிள்ளானில் நடத்தினர்.

hindraf2aஇதில் சுவராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகம், செம்பருத்தி ஆசிரியர் ஜீவி காத்தையா, மைஸ்கில்ஸ் அறவாரியத் தலைவர்    சி. பசுபதி , மலேசிய சோசியலிசக் கட்சியை சார்ந்த சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார், அவரது  துணைவியார்  இராணி, மேலும் அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் சகோதரர்  எஸ். அருட்செல்வம், சகோதரி சிவரஞ்ஜினி, தொழிற்சங்கவாதி பா. கந்தசாமி மற்றும் ஹிண்ட்ராப் பேரியக்கத்தின் தலைமைச் சபை உறுப்பினர்களும் மாநில செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

காலை மணி 10 க்கு துவங்கி மாலை மணி 4 வரை நீடித்த இந்த கலந்துரையாடலில்   பல ஆழமான கொள்கைகள் குறித்து விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டன. பரந்த சமூக சேவைகளில் நிறைந்த அனுபவம் வாய்ந்த அனுபசாளிகளின் ஆக்கபூர்வமான கருத்துகள், ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கத்தின் எதிர்கால சமூக சேவைகளின் வியூகம் எப்படி அமைய வேண்டும் என்ற திட்டமிடலுக்கு பெரும் பங்களிக்கும் வகையில் அமையும் என்றார் இதன் ஒருங்கிணைப்பாளர் நா. கணேசன்.

hindraf1aதெளிவான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், விவேகமாக அணுக வேண்டிய பல சமூக திட்டங்களை சி. பசுபதி முன்வைத்தார். மேலும் அரசு இலாகாகளையும், இயந்திரங்களையும்  மட்டுமே எதிர்பார்த்து இந்தியச் சமூகம் காத்திருக்கக் கூடாது  என்றும், சமூக அமைப்புகள் மக்கள் பலனடையும் வகையில் துரிதமாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் தம் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

கவனிக்கப்பட்டு, கருத்தில் கொண்டு, தீர்க்கப்படக் கூடிய பல அவலங்களால் மக்கள் இன்னலுற்று இருக்கிறார்கள் என்றும், மக்களோடு ஒன்றிணைந்து அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண களத்தில் இறங்கி சேவை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி தமது அனுபவங்களை விரிவாக டாக்டர் ஜெயக்குமார் பகிர்ந்துகொண்டார்.

மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கத்தோடு இணைந்து செயல்பட மலேசிய சோசியலிசக் கட்சி  தயாராக இருப்பதாக எஸ். அருட்செல்வம் தெரிவித்தார்.

hindraf3aஇந்நாட்டு குடிமக்கள் என்ற அடிப்படையில் நமது உரிமைகளைப் பெறுவதில் ஒருபோதும் தயக்கம் காட்டக் கூடாது என்றும்,  ஹிண்ட்ராப் பேரியக்கம் அத்தகைய நெறியில் இருந்து பின்வாங்கக் கூடாது என்றும்  ஜீவிகாத்தையா  எடுத்துரைத்தார். மலேசிய இந்தியர்களின் சமூக மற்றும் பொருளாதார சவால்களை கையாள்வதற்கு ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்க உறுப்பினர்கள் மத்தியில் திடமும், விவேகமும், அர்ப்பணிப்பு உணர்வும், திறமையும் இருப்பதை கண்டு மகிழ்வதாக  கா. ஆறுமுகம் தெரிவித்தார்.

பதவிகளையும், சலுகைகளையும்  எதிர்பார்க்காமல் மக்கள் நலனை முன்னிறுத்தி தூய சேவை மூலம் ஹிண்ட்ராப் பேரியக்கம் தொடர்ந்து செயல்படவேண்டும் என்று பா. கந்தசாமி கேட்டுகொண்டார்.

இந்தக் கலந்தாய்வு சந்திப்பின் போது முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் பரிசீலித்து  அதற்கு ஏற்ப ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் அமையும் என்று கூறிய ஹிண்ட்ராப் தலைமைச் சபை உறுப்பினர்  நா. கணேசன், ” இந்தக் கலந்தாலோசனைச் சந்திப்பிற்கு  வருகை  தந்த அனைவரும் ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கத்தொடு  இணைந்து செயல்பட சம்மதம் தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.