குதிரைகள்மீது விருப்பையும் நஜிப்மீது வெறுப்பையும் வெளிப்படுத்தினார் மகாதிர்

mahaமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்   சிஎன்என்  இந்தோனேசியாவுக்கு  அளித்த  நேர்காணலில்   குதிரைகள்மீது  அவருக்குள்ள  அளவற்ற  விருப்பத்தை  வெளிப்படுத்தினார். 40 குதிரைகள்  வைத்திருப்பதாகவும்  எல்லாமே  அன்பளிப்பாகக்  கிடைத்தவை  என்றும்  சொன்னார்.

அதே  வேளை  மலேசியாவின்  முன்னேற்றத்துக்குத்  தடையாக  உள்ளார்  என்று  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  கண்டனக்  கணைகள்  பாய்ச்சவும்  அவர்  தவறவில்லை.

அவரது  பொழுதுபோக்கு  நடவடிக்கைகள்  பற்றி  வினவியதற்கு  அதற்கெல்லாம்  நேரமில்லை  என்று  மகாதிர்  குறிப்பிட்டார்.

ஆனால்,  நேரம்  கிடைத்தால்  குதிரை சவாரி  செய்வதுண்டு  என்றார்.

“என்னிடம்  நிறைய  குதிரைகள்  உண்டு. கிட்டத்தட்ட  40. எல்லாமே  மற்றவர்கள்  கொடுத்தது.  நான்  எதையும்  வாங்கியதில்லை.

“பாகிஸ்தானிலிருந்து  இரண்டு  குதிரைகள்  வாங்க  விரும்பினேன்.  அதைக்  கேள்விப்பட்டு (அப்போதைய) அதிபர்  சியா உல் ஹாக்  இரண்டு  குதிரைகளை  அன்பளிப்பாக  வழங்கினார்”, என்று  நினைவு  கூர்ந்தார்.

பிறகு  நஜிப்  பற்றிப்  பேசியபோது,  பிரதமர்  பதவி  விலகாவிட்டால்  நாடு  பாதிக்கப்படும்  என்றார்.

வேறு  ஒருவர்  நாட்டை  வழிநடத்தினால்  நன்றாக  இருக்கும்  என்றவர்  நினைக்கிறார்.

“2020-க்குள்  ஒரு  வளர்ந்த  நாடாக  விரும்பினோம்.  ஆனால்,  அது  தாமதமாகலாம்.  ஏனென்றால்  நாட்டை மேம்படுத்தும்  நேரடி  முயற்சிகள்  கிடையாது.

“நாடு  பல  வகையான  பிரச்னைகளில்  சிக்கிக்  கொண்டிருக்கிறது.  நஜிப்  அல்லாமல்  வேறு  ஒருவர்  நாட்டை  வழிநடத்தினால்  கடந்த  காலத்தில்  போடப்பட்ட  திட்டங்கள்,  குறிப்பாக  2020  தொலைநோக்குத்  திட்டம்  நிறைவேறும்  வாய்ப்பு  உண்டு”, என்றார். 2020  மகாதிரின்  சிந்தனையில்  உருவான ஒரு  திட்டம்.