இந்துக்களுக்கு எதிராகத் தொடரும் செயல்களுக்கு அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும்!

reguஈப்போ ஸ்ரீ முனீஸ்வரர் அம்மன் ஆலயத்தில் அத்துமீறி நுழைந்து தெய்வச் சிலைகள் உடைக்கப்பட்டதை உலக இந்து மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று கூறிய உலக இந்து மன்றம் மலேசியா  தலைவர் வி.கே. ரகு, இந்தச் சம்பவத்தை மனநிலை பாதிக்கப்படவர் செய்தார் என்று சமாளித்து தள்ளி விட முடியாது என்கிறார்.

இந்து சமயத்தை அவதூறு செய்த ஸக்கீர் நாயக்கை, நாட்டை விட்டு வெளியேற்றாமல், அவரை பாதுகாத்து, நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய அனுமதித்தது உள்துறை அமைச்சு.

இந்துக்களை அவமதித்து, புண்படுத்திய அன்னிய நாட்டவரான அவருக்கு கொடுத்த முக்கியத்துவமானது இந்துக்களை உதாசினப்படுத்தும் வகையில் உள்ளது.

ஸக்கீர் நாயக்கின் பேச்சை முற்றிலுமாக தடை செய்வதை விடுத்து, அவர் பேச வேண்டிய தலைப்பை மட்டும் மாற்றி அவரை பேச அனுமதித்தது எந்த வகையில் நியாயம்? இந்து சமயத்தைப் பற்றி தப்பான வகையில் அவர் பேசிய பேச்சுகள் எங்களுக்கு வேதனையை கொடுத்துள்ளது. இந்நாட்டின் தேசிய நல்லிணக்கத்தை கருதி அவரை இந்நாட்டிற்குள் அனுமதிக்க கூடாது என்பதுதான் எங்கள் கோரிக்கை என்கிறார்  ரகு.

அதனைத் தொடர்ந்து, எங்கள் தலைவர்கள் குரல் கொடுத்ததற்கு பலிதீர்க்கும் படலமாக, மொலோடோவ் காக்டெய்ல் குண்டு வீசியதற்கு இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதன் பிறகு இந்த கோயில் தெய்வச் சிலை உடைப்பு நடந்தேறி இருக்கிறது. உடைத்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவரோ, பாதிக்கப்படாதவரோ என்பது முக்கியம் அல்ல.

இதற்குப் பின்னால் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும். உலக மத்தியில் இந்த மருட்டல்கள் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்துக்களைத் தொடர்ந்து அவமானத்திற்கும், மன உலைச்சலுக்கும், அச்சத்திற்கும் இட்டுச் செல்லும் இந்தச் சம்பவங்களுக்கு  அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் ரகு.

மேலும்,“எங்களுடைய கோரிக்கை, ஸக்கீர் நாயக்கை இந்நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது மற்றும் எங்கள் தலைவர்களை அச்சுறுத்தும் வகையில் குண்டு வீசியவரை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். இந்த கோயில் தெய்வச் சிலை உடைப்பிற்கு மூல காரணமாக இருப்பவர்கள் கண்டறியப்பட வேண்டும்”, என்று ரகு கேட்டுக்கொண்டார்.