பஞ்சாப் எல்லையில் லேசர் சுவர்களின் செயல்பாடு தொடக்கம்

kashmir-border-india-pakistanபயங்கரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க, பஞ்சாப் மாநிலத்துக்குள்பட்ட இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள “லேசர் சுவர்கள்’ செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் புதன்கிழமை மேலும் தெரிவித்ததாவது:

ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் சர்வதேச எல்லையையொட்டிய பகுதிகளில் அமைந்துள்ள ஆற்றுப்படுகைகள் உள்ளிட்ட பயங்கரவாதிகள் எளிதில் ஊடுருவ வாயப்புள்ள இடங்களைக் கண்டறிந்து, அங்கு லேசர் சுவர்களை நிறுவ திட்டமிடப்பட்டது.
பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர், இந்தத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பாகிஸ்தானை ஒட்டியுள்ள பஞ்சாப் மாநிலத்தின் சர்வதேச எல்லைப் பகுதிகளில் நிறுவப்பட்ட 12 லேசர் சுவர்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. லேசர் சுவர்கள் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் செயல்படுபவை என்பதால், இவற்றின் மூலம் சர்வதேச எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை எளிதில் கண்காணிக்கலாம்.

இதேபோன்று ஜம்மு-காஷ்மீர் மற்றும் குஜராத் மாநிலங்களின் சர்வதேச எல்லைப் பகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் இந்திய-வங்கதேச எல்லைப் பகுதிகளிலும் 40 கிலோமீட்டர் தொலைவுக்கு லேசர் சுவர்கள் மற்றும் வேலிகள் விரைவில் அமைக்கப்படவுள்ளன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

-http://www.dinamani.com

TAGS: