உடுமலை, கோவில்பட்டிகளைதான் உருவாக்கியதா 50 வருட திராவிட ஆட்சி?

vaiko mnkசென்னை: ஒரு ஜாதி பெரும்பான்மையாக உள்ள தொகுதியில் மற்றொரு ஜாதியை சேர்ந்த வேட்பாளர் போட்டியிட முடியாத நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது என்பது கோவில்பட்டி தொகுதியில் நடந்த சம்பவங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது ஏதோ வேறு ஒரு மாநிலத்தில் நடக்கவில்லை. ஜாதி ஒழிப்பு பேசிய திராவிட கட்சிகள் 50 வருடங்களாக ஆட்சி செய்யும் தமிழகத்தில்தான் இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. ஜாதிகள் இல்லை என்று கூறி, பெரும் புரட்சிகள் செய்த, பெரியாரின் சீடரான அண்ணா தோற்றுவித்த திமுகவும், அதில் இருந்து பிரிந்துவந்த அண்ணா திமுகவும்தான் கடந்த 50 வருடங்களாக தமிழகத்தை ஆட்சி செய்துவருகின்றன.

இவ்விரு கட்சிகளுமே எந்த ஒரு தொகுதியிலும், அங்கு மெஜாரிட்டியாக எந்த ஜாதியினர் உள்ளனரோ அந்த ஜாதியை சேர்ந்தவரையே வேட்பாளர்களாக நிறுத்துவதை காலம்காலமாக வழக்கமாக்கிவிட்டன.

இப்படி ஜாதி பெரும்பான்மையுள்ள வேட்பாளரை நிறுத்திய கட்சிகளின் செயல்தான், பரிணாம வளர்ச்சி பெற்று, பெரும்பான்மையற்ற ஜாதியை சேர்ந்த வேட்பாளரை, தொகுதியில் நிறுத்த கூட அனுமதிக்காத அளவுக்கு சென்று சேர்ந்துள்ளது. வைகோ லேட்டஸ்ட் பலிகடா.

ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு ஒரு போராளியாக மட்டுமே பார்க்கப்படும் வைகோவுக்கே ஜாதி முத்திரை குத்தி, கலவரம் தூண்டப்பட்டுள்ளது என்றால், வருங்கால தமிழகத்தில், சாமானிய வேட்பாளர்களின் நிலை என்னவாகும் என்ற அச்சம் நடுநிலையாளர்களுக்கு எழாமல் இருக்காது.

உடுமலைப்பேட்டை ஆணவ கொலைக்கு எந்த பெரிய கட்சி தலைமையுமே கண்டனம் தெரிவிக்காமல் கள்ள மவுனம் காத்தபோதே, ஜாதி வெறியை இக்கட்சிகள் எப்படி கட்டி காப்பாற்றுகின்றன என்பது பட்டவர்த்தனமானது.

கட்சிகளின் கள்ள மவுனத்திற்கு கோவில்பட்டியில் கை மீது பலன் கிடைத்துள்ளது. பெரும்பான்மை ஜாதி என்ன சொல்கிறதோ, செய்கிறதோ அதை கைகட்டி கேட்டுக்கொள்ள வேண்டும் என்பதே, 50 ஆண்டுகளாக ஆண்ட கட்சிகள் மக்களுக்கு சொல்லும் பாடம்.

கோவில்பட்டியில் நடந்த சில சம்பவங்களே இதற்கு சான்று. ம.ந.கூட்டணியிலுள்ள ஒரு குறிப்பிட்ட கட்சியின் கொடிகளை மட்டும் தங்கள் ஊருக்குள் கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர் பெரும்பான்மை ஜாதியை சேர்ந்தோர் வாழும் கிராமத்தார்.

படுகொலையை கண்டித்தவர் என்பதற்காகவே தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க விடாமல் தடுத்துள்ளனர் ஒரு தரப்பினர். தலித்துகள் ஆலய பிரவேசம் செய்ய பாதுகாப்பு கொடுத்தவர் என்று புகழப்படும் தேவரையே ஜாதி வட்டத்திற்குள் அடைக்க முயற்சி நடந்துள்ளது.

ஜாதி பெரும்பான்மை உள்ளவர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு, ஜெயித்து வந்தால், பெரும்பான்மை ஜாதியினருக்கே அமைச்சர் பதவி என, ஜாதிதான், தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாறிவிட்டது காலக்கொடுமை.

ஜெயலலிதா அமைச்சரவையில் மூன்று ஜாதியினருக்கு மட்டுமே அமைச்சரவையில் முக்கியத்துவம் தரப்பட்டது. இவை மூன்றும்தான் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மை ஜாதிகள். கருணாநிதி அமைச்சரவையிலும் பெரும்பான்மை ஜாதியினருக்குதான் பெரும்பாலும் முக்கியத்துவம் தரப்படுவது வழக்கம்.

ஜாதியை முன்வைத்து வெற்றி பெற்று, ஜாதிக்காக பதவி கொடுத்து, ஜாதியை ஊக்குவிக்கும் இரு பெரும் கட்சிகள், திருந்தாவிட்டால், தமிழகமெங்கும் இன்னும் பல கோவில்பட்டிகள் உருவாகுவதை தடுக்க முடியாமல் போய்விடும்.

ஜாதி சங்கங்கள் மிக வலுவாக இருந்த காலகட்டத்திலேயே பெரியாரால் புரட்சிகள் செய்ய முடிந்தது. ஆலய பிரவேசங்கள் நடத்த முடிந்தது. ஜாதி ஆதிக்கம் ஒடுக்கப்பட்டது. ஆனால், வலு குறைந்து கிடந்த ஜாதி கட்சிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றி வலு ஊட்டியது அதே புரட்சி பேசிய கட்சிகள் என்பது காலத்தின் சோகம்.

tamil.oneindia.com

TAGS: