போருக்கு பின் அமைதி உண்டாக்கும் புதிய அரசியல்!

K. Arumugam_suaramபோருக்கு பின் அமைதியான சூழலை இலங்கை பெற்றாலும், தமிழர்களுக்கென்று ஒரு தனி நாடு தேவை என்கிறார்கள் இலங்கை ஆளுங்கட்சியின் கவுன்சலர்கள்.  தமிழீழ போராட்டம் தமிழர்களுக்கு ஒரு சர்வதேச அளவில் தமிழ் தேசியம் என்ற அரசியல் சிந்தனையை உருவாக்கி உள்ளதை மறுக்க இயலாது என்கிறார்கள்.

பெரும்பான்மை தமிழர்கள் உள்ள நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த நான்கு நகரசபை, உள்ளூராட்சி உறுப்பிணர்களுடன்  நடத்திய ஒரு சந்திப்பு, அங்குள்ள நடப்பு அரசியலை ஓரளவு விளக்குவதாக கூறுகிறார் சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம். நேற்று மாலை நடந்த இந்தச் சந்திப்பில்  நுவரேலியா பிரதேசிய சபாவின் தலைவர் சதாசிவன், நகரசபை உறுப்பிணர்கள் விஸ்வநாதன், இரவிராம், மயில்வாகனம் ஆகியோருடன் சிலாங்கூர் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் இலா. சேகரனும் கலந்து கொண்டார்.

2009-ஆம் ஆண்டு இலங்கை அரசு மேற்கொண்ட இராணுவ தாக்குதலால் தமிழீழ போராட்டம் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது என இலங்கை அரசு அறிவித்தது. அது ஓர் இன அழிப்பு என்றும், இன ஒழிப்பு என்றும் உலக அளவில் பலத்த கண்டணத்தை எதிர் நோக்கியது இலங்கை அரசு. இதற்கான நீதி தேவை என ஐக்கிய நாட்டு சபை ஏற்றுக்கொண்டாலும், அது கிடைக்கும் என்ற சாத்திய கூறுகள் இன்னமும் தென்படவில்லை.

Sri Lanka coucillorஇது சார்பாக வினவிய போது, “இராஜபக்சேயின் இனவாத அரசியலுக்கான ஆதரவு பெருமளவு குறைந்துள்ளது. ஆனால், இனவாத அரசியல் இல்லாமல் அங்கு ஆட்சி நடத்தும் காலம் இன்னமும் கனியவில்லை” என்கிறார்கள்.

இராஜபக்சேயை தோற்கடித்து கடந்த வருடம் ஜனவரியில் அதிபர் பதவியேற்ற மைத்திரிபாலா ஸ்ரீசேனா, இலங்கை தமிழர்களுகு ஒரு புத்துயிர் ஊட்டுவார் என்ற நம்பிக்கை எழுந்தது. ஆனால் அதை நடைமுறைக்குக் கொண்டு வரும் சூழல் இருப்பதாகத் தெரியவில்லை என்கிறார் ஆறுமுகம். இது சார்பாக யாரும் வெளிப்படையான கருத்துகளை கூற மறுக்கின்றனர் என்றார்.

“தற்போது அமைதி நிலவுகிறது. அது எங்களுக்கு முக்கியம். மேலும் எங்களின் வாழ்வாதரத்திற்கான வழி முறைகளை நாங்கள் உருவாக்க வேண்டும்”  என்ற யாதார்த்த சூழலுக்கு விவாதங்களை கொண்டு செல்கின்றனர்.

nuwaraeliyaஇலங்கையில் உல்லாசப் பிரயாணத்துக்கு முக்கிய பகுதிகளில் ஒன்றான  நுவரெலியா மாவட்டம் இலங்கையில் உள்ள மாவட்டங்களில் ஒன்றாகும். கடல் மட்டத்திலிருந்து 1500 அடி  – 8000 அடி உயரத்தில் உள்ள இங்குதான்  இலங்கையின் உயரமான மலையான பீதுருதாலகாலையும் அமைந்துள்ளது. சிவனொளி பாதம் அமைந்துள்ள சமனல மலைத்தொடரின் பெரும்பகுதி நுவரெலியா மாவடத்திலேயே மைந்துள்ளது.  பிரிட்டிஷ் ஆட்சியின் காலத்தில் நுவரெலியா சிறிய இங்கிலாந்து என அழைக்கப்பட்டதாம்.

மாவட்ட மக்கள் தொகையில் 57.1% தமிழர்களாவர் (இலங்கைத் தமிழர் 6.5%, இந்தியத் தமிழர் 50.6%) இவர்களில் 93.1 சதவீத மக்கள் தேயிலைத் தோட்டங்களில் வசிக்கின்றனர். மாவட்ட தமிழர்களில் 77 சதவீதத்தினர் தேயிலை தோட்டங்கள் பெரும்பான்மையாக காணப்படும் நுவரெலியா, அம்பகமுவா பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கின்றனர். மாவட்டத்தில் 40.2 சதவீதத்தினர் சிங்களவராவர். இவர்களில் 85 சதவீதத்தினர் கிராமங்களில் வசிக்கின்றனர்.

இங்குள்ள நகரசபை உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு தேர்தல் இல்லை. நியமனம்தான் செய்யப்டுகிறார்கள். தற்போது இதில் நியமனம் செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் தமிழர்கள்தான் என்கிறார்கள்.

மலேசியாவுக்கு வருகை தந்துள்ள அவர்கள் இங்குள்ள தேயிலைத்  தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துறையாட ஆவல் கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.    இவர்களுக்கான உபசரிப்பை சிலாங்கூர் மாநில தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் கிள்ளான் நகராண்மைக் கழக  உறுப்பிணருமான மணிவண்ணனும் இலா. சேகரனும் ஏற்றுள்ளனர்.

போரும் அமைதியும் என்ற நாவவில் “தார்மீகமற்ற சூழலில், எப்படி நன்றாக வாழ இயலும்?” என்கிறார் டால்ஸ் டாய். இந்தக் கேள்விக்கு இவர்களிடம் பதிலில்லை என்கிறார் ஆறுமுகம்.