குவான் எங்மீது விரைவாக செயல்பட்டதுபோல் 1எம்டிபி விசயத்தில் செயல்படாதது ஏன்? சிவில் அமைப்புகள் சாடல்

swஅதிகாரிகள்  அதிவேகமாகச்  செயல்பட்டு  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்மீது  நடவடிக்கை  எடுத்திருக்கும்  விதத்தைச்  சமூக  அமைப்புகள்  குறைகூறியுள்ளன.

அவ்விவகாரம்மீது  தனித்தனியே  அறிக்கைகள்  வெளியிட்டிருக்கும்  பெர்சேயும்  ஊழல்  எதிர்ப்பு  அமைப்பான  சி-4ம்,  மற்ற  ஊழல்  வழக்குகளில்,  1எம்டிபி  ஊழல்,  பிரதமர்   நஜிப்  அப்துல்  ரசாக்கின்  பில்லியன்  ரிங்கிட்  நன்கொடை   விவகாரம்   போன்றவற்றை  விசாரிப்பதில்  இவ்வளவு  வேகம்  காட்டப்பட்டதில்லை என்று  குறிப்பிட்டன.

“அவை  மீதான  விசாரணைகள்  ஈராண்டுகளுக்குமேல்  ஆகியும்  இன்னமும்  முடிவுறவில்லை”, என  பெர்சே  கூறிற்று.

லிம்,  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையத்தின்  விசாரணைக்குத்  தொடர்ந்து  ஒத்துழைப்பு  கொடுத்து வந்துள்ளார்  என்கிறபோது   நேற்று  அவரைக்  கைது  செய்ததும்   கொம்டாரில்  பெரும்  எண்ணிக்கையில்  போலீசாரைக்  குவித்து  “அச்சமூட்டியதும்”  தேவையற்றது  என்று  அது  கூறியது.

ஒரு  வணிகப்  பெண்மணியான  பாங்  லி  கூன்  கைது  செய்யப்பட்ட  விதமும்  “கவலை  அளிப்பதாக”  அந்தத்  தேர்தல்  கண்காணிப்பு  அமைப்பு  குறிப்பிட்டது.

“மாறாக,  எம்ஏசிசி  நீதிமன்றத்துக்கு  வருமாறு  முதலமைச்சருக்கும்  பாங்கும்   உத்தரவிட்டிருக்கலாம்”, என  பெர்சே  மேலும்  தெரிவித்தது.

லிம்  நீதிமன்றத்தில்  நிறுத்தப்படுவதை  இரண்டுமே  வரவேற்றன.  அப்போதுதான்  டிஏபி  தலைமைச்  செயலாளரான  லிம்,  பங்களா  வீடு  வாங்கிய  குற்றச்சாட்டுக்குப்  பகிரங்கமாக  பதிலளிக்க  முடியும்.

லிம்  தாம்  குற்றவாளி   அல்ல  என்றால்  அதை  நீதிமன்றத்தில்  நிரூபிக்க  முடியும்  ஆனால்,   அதற்கு  நம்  நீதித்துறை  அரசியல்  தலையீடின்றிச்  சுதந்திரமாக  செயல்பட  வேண்டும்  என  சி4  கூறியது.  நீதிபதிகள்  சுதந்திரமாகவும்  நியாயமாகவும்  செயல்பட  வேண்டும்  என  பெர்சேயும்  வலியுறுத்தியது.

இதனிடையே,  அமைச்சர்  அப்துல்  ரஹ்மான்  டஹ்லான்   லிம்  கைது  செய்யப்பட்டது   டிஏபி  கைசுத்தமான  கட்சி  அல்ல  என்பதைக்   காண்பிப்பதாக  நேற்று  கூறியது  தேவையில்லாத  ஒரு  கருத்து  என்று  பெர்சே  குறிப்பிட்டது.

வழக்கு  விசாரணைக்கு  வருவதற்கு  முன்பே  பிரதமர்துறை  அமைச்சர்  முன்முடிவு  செய்தது  சரியன்று  என  அது  கடிந்து  கொண்டது.