‘கபாலி ரஜினி சொன்ன தமிழ் நண்டு கதையை நிரூபிச்சிட்டாங்களே!’

kabali-posterசமூக வலைத் தளங்களில், இணையத்தில் கபாலி படம் குறித்து எதிர்மறையாக வரும் விமர்சனங்களின் பின்னணியில் ‘வேறு அரசியல்’ உள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ரஜினியின் கபாலி படம் நேற்று வெளியாகி வசூலில் புது சரித்திரம் படைத்துள்ளது. மூன்று நாட்கள் முடிவில் இந்தப் படத்தின் வசூல் 200 கோடிகளுக்கு மேல் போகும் எனக் கணித்துள்ளது பாக்ஸ் ஆபீஸ்.

இது மட்டும் நடந்தால், உலகளவில் புதிய சரித்திரத்தைப் படைத்த பெருமை கபாலி என்ற படத்துக்கும் அதற்கு முழுக் காரணமான ரஜினிக்கும் கிடைக்கும். அதிக அரங்குகளில் வெளியான படம், அதிக நாடுகளில் வெளியான (53) முதல் இந்தியப் படம் என கபாலி வெளியாகும் முன்பே பல சாதனைகளை உருவாக்கிவிட்டது. அவற்றையெல்லாம் இன்னொரு ரஜினி படம் மட்டுமே இனி உடைக்க முடியும் என்பதுதான் நிலைமை.

ரஜினி அடிக்கடி சொல்வார்: ‘நிச்சயம் ஒரு நாள் தமிழர்கள் தலைநிமிர்ந்து சொல்லும்படியாக ஏதாவது நான் செய்வேன்’, என்று. கபாலி மூலம் அதை நிரூபித்திருக்கிறார். இன்று உலகமே கபாலி என்ற தமிழ்ப் படம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது. “அவர் அரசியல்வாதியல்ல. மக்கள் அவருக்கு ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்து அதிகாரத்தில் அமர்த்தவில்லை. அவர் ஒரு நடிகர். ஒரு கலைஞராக தன் துறையில் உலகளவில் புதிய சாதனைகள் படைத்து அவர் தமிழர்களின் பெருமையாக நிற்கிறார்.

இன்று ரஜினி என்றால், உலகம் முழுவதும் தமிழ் தெரிகிறது, தமிழர்கள் தெரிகிறார்கள். வேறென்ன செய்ய வேண்டும் அவர்?,” என்கிறார் ஒரு திரைப்பட விமர்சகர். “ஆனால் சமூக இணைய தளங்களைப் பாவிப்போரில் பலரது மன நிலை வக்கிரத்தின் உச்சமாக உள்ளது.

ஒரு படம் ஜெயிக்க வேண்டும்… இன்டஸ்ட்ரி வாழ வேண்டும் என்றுதான் பொதுவாக நினைப்பார்கள். ஆனால் இவர்களோ எப்போதுடா ஒரு படம் வீழும் என்ற எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். அல்லது காலைப் பிடித்து இழுத்து வீழ்த்தப் பார்க்கிறார்கள். இது ஆபத்தான போக்கு. ஒரு படத்தின் நிறை குறைகளை அதன் தரம் பார்த்துச் சொல்லத் தெரியாத நிலைதான் இவர்களிடம் உள்ளது,” என்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

“ரஜினி சாரின் கபாலி நல்ல படம்தான். அதில் அப்படி ஒன்றும் தப்பாக இல்லை. அதிலும் ரஜினியின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் சான்சே இல்லை. ஆனால் அந்தப் படம் தோற்க வேண்டும் என்று யாகமே நடத்துவார்கள் போலிருக்கிறது இணையப் போராளிகள். காரணம் இயக்குநர் ரஞ்சித் மீதான இவர்களின் காழ்ப்பு. ஒரு தமிழ்ப் படம் உலக அளவில் சாதனைகள் செய்து கொண்டிருக்கும்போது, அதனை இன்னும் உற்சாகப்படுத்த கைகொடுக்காமல் காலைப் பிடித்து இழுப்பது மன நோயின் அறிகுறி…” என்கிறார் ஒரு இயக்குநர்.

கபாலி படத்துக்கு மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு, படம் பார்க்க குவியும் அவர்களின் எண்ணிக்கை திரைத்துறைக்கு புது உற்சாகம் தரும் சூழலில், படத்தைப் பற்றி வேண்டுமென்றே எதிர்மறையாகப் பேசுவது, குறிப்பாக இயக்குநர் மீதான வன்மத்தில் குறிப்பிட்ட சாயம் பூச முயல்வது தமிழரின் வழக்கமான குணமாகிவிட்டது என ரஜினி ரசிகர்கள் இணையத்தில் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தக் கருத்துகளைக் கேட்ட பிறகு, கபாலியில் ரஜினி சொல்லும் தமிழ் நண்டு கதைதான் நினைவுக்கு வருகிறது!

tamil.filmibeat.com