‘பதவி ஏற்ற ஓராண்டில் இத்தனை குறைகூறல்களா’ அபாண்டி ஆதங்கம்

agமுகம்மட்  அபாண்டி   சட்டத்துறைத்   தலைவர்  பொறுப்பை  ஏற்று  நாளையுடன்   ஓராண்டு   நிறைவு  பெறும்.

அவரின்     இந்த    முதலாம்  ஆண்டு    பரபரப்புமிக்க   ஆண்டாகவே  இருந்துள்ளது.  அவரிடம்   குறை  காண்பவர்கள்   அவரை  அரசாங்கத்தின்  கைப்பாவை   என்று    சாடியுள்ளனர்.  ஆனால்,  அபாண்டி  அதை   வன்மையாக    மறுக்கிறார்.

சட்டத்துக்கு  ஏற்பவே   முடிவெடுப்பதை     எவ்வளவோ   எடுத்துச்  சொல்லியும்    குறைகூறப்படுவது   ஏனென்று     புரியவில்லையே  என  பெரித்தா  ஹரியானில்  அவர்    கூறினார்.  அந்நாளேட்டில்   எழுதிய  ஒரு  கட்டுரையில்   தம்  எண்ணங்களைக்   கொட்டியுள்ளார்    அபாண்டி.

“நான்  செய்வது   எல்லாமே  சட்டத்துக்கு  உட்பட்டதுதான். ஆனாலும்  சிலர்    நாடாளுமன்றத்தில்  எனக்கெதிராக   நம்பிக்கையில்லா  தீர்மானம்  கொண்டுவர   விரும்புகிறார்கள்,  நான்   பதவி  விலக   வேண்டும்   எனக்  கோருகிறார்கள்,   என்னை    நீதிமன்றத்துக்கு   இழுத்துச்  செல்ல  விரும்புகிறார்கள்”,  என்று  கூறினார்.

“எடுத்துக்காட்டுக்கு,  ஒரு   வழக்கில்    மேற்கொண்டு    சட்ட  நடவடிக்கை  தேவையில்லை   என்ற  முடிவுக்குச்  சட்டத்துறைத்   தலைவர்   அலுவலகம்   முடிவுக்கு   வந்தது.  முடிவுக்கான   காரணமும்  விளக்கப்பட்டது”,  என்றார்.

முக்கியமான   அவ்வழக்கில்    குற்றச்செயல்   எதுவும்  நிகழ்ந்திருப்பதாக   தாம்  கருதவில்லை   என்பதால்   அம்முடிவுக்கு  வந்ததாகக்   கூறினார்.

அது  என்ன  வழக்கு   என்பதை  ஏஜி   குறிப்பிடவில்லை.  ஆனால்  பிரதமர்  நஜிப்   அப்துல்  ரசாக்   மீதான   விசாரணை   பற்றித்தான்   அவர்  குறிப்பிடுகிறார்  என்று   தெரிகிறது.

இப்போதெல்லாம்   சமூக   ஊடகங்களில்   பொறுப்பற்ற   முறையில்   செய்திகள்   வெளியிடப்படுகின்றன  என   அபாண்டி   கூறினார்.

“அதனால்,  சட்டத்தைப்   பின்பற்றி   நடக்க   வேண்டும்  என்பதை     சம்பந்தப்பட்ட   அனைவருக்கும்  நினைவுபடுத்த   விரும்புகிறேன்”,  என்றாரவர்.