மீண்டுமொரு அழிவை சந்திப்பதற்கு தமிழர் ஒருபோதும் விரும்பவில்லை!

eelam_tamilsதமிழ் மக்கள் அழிக்கப்பட்டவர்கள், அழிந்தவர்கள். எனவே மீண்டும் ஒரு அழிவை சந்திக்க நாம் விரும்பவில்லை என கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் அன்ரனி மரியராசா தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி மனோரி முத்தெட்டு வேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய செயலணியினரால் நல்லிணக்கப் பொறிமுறை அமைப்பது தொடர்பான மக்களுடைய கருத்தறியும் அமர்வு நேற்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் அன்ரனி மரியராசா கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தார்.

“முல்லைத்தீவு மீனவர்கள் கடந்த காலங்களில் எதிர்நோக்கி வந்த பிரச்சினைகளுக்கு தற்போது நல்ல தீர்வுகள் எட்டும் நிலை உருவாகியுள்ளன.

நாங்கள் எடுக்கும் முயற்சி எல்லாச் சமுகத்தினர் மத்தியிலும் அமைதியானதொரு தீர்வாகவேஅமைகின்றது.

நாங்கள் இங்கு அமைதியாக தொழில் செய்யவேண்டும். ஏனைய சமூகத்தைச் சேர்ந்த மக்களும் தொழில் செய்யவேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம்.

எனினும், சிலர் கடந்த காலத்தில் எப்படி நாங்கள் பெரும் வடுக்களைச் சந்தித்தோமோ, அந்த வடுக்களை திரும்பவும் கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றனர்.

மீனவர்களுடைய பிரச்சினை தொடர்பாக நேர்மையான, நியாயமான தீர்வுவேண்டும் அவர் இதன் போது வலியுறுத்தியுள்ளார்.

மாவட்டத்தினுடைய மீன்பிடி சார்ந்த முடிவுகளை எடுக்கும் அனைத்து கூட்டங்களிலும் முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் நிச்சயமாகக் கலந்துகொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: