உத்தரகாண்ட் எல்லையில் இருந்து அதிக அளவில் மக்கள் வெளியேறுவது சீனாவுக்கு சாதகம்: தருண்விஜய் எச்சரிக்கை

tarun vijayடேராடூன்: சீனா எல்லையையொட்டிய உத்தரகாண்ட் பகுதியில் இருந்து அதிக அளவில் மக்கள் வெளியேறி வருகின்றனர்; இதனால் அப்பகுதிகளை சீனா ஆக்கிரமிக்கும் அபாயம் இருப்பதாக பாஜகவின் தருண் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக டேராடூனில் செய்தியாளர்களிடம் தருண் விஜய் கூறியதாவது: உத்தரகாண்டின் எல்லைப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வேலைவாய்ப்பு தேடி இடம்பெயர்ந்து வருகின்றனர். இதைத் தடுத்த நிறுத்த உள்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகள் ஆகியவை செய்து கொடுக்கப்பட வேண்டியது அவசியம். எல்லைப்புற கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதால் மனித நடமாட்டம் இல்லாத நிலை ஏற்படுகிறது. இது சீனாவுக்கு விடுக்கப்படும் வெளிப்படையான அழைப்பாகி விடும்.

இதனால் இமயமலைப் பகுதிகளில் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது. கிராமவாசிகள் இடம்பெயர்ந்ததால் சமோலி மாவட்டத்தின் பாரா ஹோதி, பிதோராகர் மாவட்டத்தில் உள்ள கஞ்சி மற்றும் மிலாம் பனிமலைப் பகுதிகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

நான் முன்ஷியாரி முதல் மிலாம் பகுதி வரை சுமார் 105 கி.மீ. தூரத்துக்கு மலையேறிச் சென்று பார்த்தேன். அந்தப் பகுதிகள் ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன. அரிய வகை மான்களுக்காகவும், போஜ்பாத்ரா வனத்துக்காகவும் உலகப் புகழ் பெற்ற இப்பகுதியில் தற்போது ஒரு சில குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. மிலாம் பகுதி வரை சீனா உலோகத்தாலான சாலையை அமைத்துள்ளது. ஆனால் நமது ராணுவ வீரர்கள் தங்கள் ஆயுதங்கள் மற்றும் பொருட்களுடன் அப்பகுதியைச் சென்றடைய 3 நாட்களாகும் என்ற நிலை உள்ளது. இவ்வாறு தருண்விஜய் கூறினார்.

tamil.oneindia.com

TAGS: