விசாரணைக்கு தயார் – மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி வாரியம்

soorian1மலேசிய இந்தியக் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவைச் சார்ந்த சிலர் இன்று மலேசிய இலஞ்ச ஊழல் இலாகாவிடம் மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி மேம்பாடு காரணமாகப் புகார் செய்ய உள்ளதாக அறிவித்ததை வரவேற்பதாகவும், அதற்கான முழு ஒத்துழைப்பையும்  மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி வாரியம் வழங்கும் என்றும் அதன் வாரியத்தலைவர் கா. உதயசூரியன் அறிவித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:

“தேசிய முன்னணி அரசியல் கட்சி கூட்டமைப்பில் இந்தியர்களின் பிரதிநிதியாக இருக்கும்    மலேசிய இந்தியக் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவைச் சார்ந்த சிலர் இன்று மலேசிய இலஞ்ச ஊழல் இலாகாவிடம் மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி மேம்பாடு காரணமாகப் புகார் செய்ய உள்ளதாக அறிகிறோம். இதற்கு முன்பு இது சார்பாகப் பத்திரிக்கையில் செய்தியும் வந்திருந்ததையும் அறிவோம்.

midlands 1இலஞ்சம் மற்றும் ஊழல் சார்பாக நமது நாடு இன்று உலக அளவில் பேசப் பட்டும் அமெரிக்காவில் விசாரணைக்கு உட்பட்டும் உள்ளது. அவ்வகையில் இன்று குடிமக்களாக உள்ள அனைவரும்  இலஞ்சம் மற்றும் ஊழல் என்பதில் இருந்து நாட்டை மட்டுமல்ல எந்த அமைப்பையும் காப்பாற்ற முன்வர வேண்டும். அவ்வகையில் மிட்லண்ஸ் பள்ளி விவகாரம் சார்பாக மஇகா இளைஞர் பிரிவு மலேசிய இலஞ்ச ஊழல் இலாகாவிடம் புகார் செய்யும் நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். அந்த விசாரணைக்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்.

மஇகா இளைஞர் பிரிவு செய்யும் இந்த நடவடிக்கையானது  இலஞ்சம் மற்றும் ஊழல் என்பதில் இருந்து நாட்டைக் காப்பாற்றப் புறப்பட்டுள்ள ஒரு புதிய மஇகா இளைஞர் அரசியலாக உருவாக வேண்டும். அந்தத் துணிவும் ஆற்றலும் இவர்களுக்கு உள்ளது என்று நம்புகிறோம். அதை விடுத்து  இவர்கள் மிட்லண்ஸ் பள்ளி விவகாரத்தோடு நின்று விட்டால் அது கபாலி சொன்ன நண்டு கதையாகி,  மஇகா இளைஞர் பிரிவு நகைப்புக்கு உட்பட்டுவிடும்.

midlands 2008ஆம் ஆண்டில் மக்கள் கூட்டணி சிலாங்கூர் மாநில ஆட்சிக்கு வந்த பிறகு, சிலாங்கூர் மாநிலத்தில் பல மாற்றங்களைக் காண முடிந்தது. அதில் ஒன்றுதான் நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும்  மிட்லண்ஸ் பள்ளியும் அங்குக் கட்டப்பட்டுள்ள மிட்லண்ஸ் மாநாட்டு மையமும். அதன் தொடக்கம் முதல் இன்றுவரை அதை முன்னின்று நடத்தி வரும் இந்தப்பள்ளியின் வாரியம் புதிய பள்ளியின் மேம்பாடு சார்பான அனைத்து விபரங்களையும் கணக்குகளையும் முறையாக வைத்துள்ளது. பள்ளி வாரியக்குழு முறையாக நிருவாகக் கூட்டங்கள் நடத்தி கணக்குவழக்குகளைச் சரிபார்த்து வருகிறது.

எங்களுக்கு ஊக்குவிப்பும் ஆதரவும் தந்துள்ள அனைத்து தரப்பினர்களுக்கும் எங்களது நன்றியை பதிவு செய்கிறோம். அதோடு வரும் 27.08.2016 (சனிக்கிழமை) காலை 11.00 மணிக்கு மிட்லண்ஸ் மாநாட்டு மையத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு செய்தியாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதில் பத்திரிக்கை செய்தியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கா. உதயசூரியன், தலைவர், மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி வாரியம், 24.8. 2016.”