“இச்சாதாரி” பாம்புகள்… இரு தார சண்டைகள்.. ஆட்டிப்படைக்கும் சீரியல்கள்.. அடிமையாகும் பெண்கள்!

0சென்னை: கண் தெரியாத கர்ப்பிணி வெண்ணிலாவை கடத்திட்டாங்களே… யாரா இருக்கும் சேனாவா? இல்லை மாமாவா என்று குழம்பி போனதோடு சோகத்தோடு பேசி வருகின்றனர் இல்லத்தரசிகள். இது ஏதோ பக்கத்து வீட்டு சமாச்சாரம் இல்லை. சன்டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் வள்ளி சீரியலின் கதையைத்தான் இப்படி சீரியஸ் ஆக பேசி வருகின்றனர். சன் டிவியில் காலை முதல் இரவு 10 மணி வரை சீரியல்மயம் தான். எல்லாம் அடுத்தவர் குடியை கெடுப்பதுதான். இருதார கதை, இல்லாவிட்டால் பாம்பு அல்லது பேய் பழிவாங்கும் கதையாக இருக்கிறது. டிவி சீரியலுக்கு சென்சார் இல்லாவிட்டால் இந்த கொடுமைகளை சகித்துதான் ஆகவேண்டும்.

காலை 11 மணிக்கு அபூர்வ ராகங்கள் சீரியலில் பேய் பழிவாங்க வந்து பவித்ராவின் வாழ்க்கையை சீரழிக்க நினைக்கிறது. இது ஒருதலைக்காதலால் தற்கொலை செய்து கொண்ட பெண் பேயாக பழி வாங்க வருகிறாள்.

பொம்மலாட்டம் சீரியலில் அக்கா பாரதியின் வாழ்க்கையை கெடுக்க நினைக்கும் தங்கை மாலதி. அண்ணனை கொன்று விட்டு சொத்துக்களை அமுக்க நினைக்கும் நினைக்கும் நடராஜன் என கதை ஆயிரம் எபிசோடுகளாக போய்க்கொண்டிருக்கிறது.

சந்திரலேகாவோ, கல்யாணப்பரிசோ எந்த சீரியல் என்றாலும் பழிவாங்கும் கதையாகத்தான் இருக்கிறது. இருதாரமணத்திற்கு ஆதரவு, கள்ளக்காதலுக்கு ஆதரவு என போகிறது சீரியல்கள். கூடவே இருந்து குழி பறிப்பது எப்படி என்றும் பயிற்சி கொடுக்கிறார்கள்.

கண் தெரியாத தங்கையின் வாழ்க்கையை காப்பாற்ற வள்ளி ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறாள். வெண்ணிலா கர்ப்பமாக இருக்க அவளை கடத்தி விடுகின்றனர். வெண்ணிலாவை கடத்தியது யார் என்பதுதான் இப்போது சஸ்பென்ஸ்.

நாகதோஷம் உள்ள குடும்பத்தை பழிவாங்க வந்திருக்கும் பெண், அடிக்கடி பாம்பாக மாறி கண்ணை உருட்டி மிரட்டு பயமுறுத்த நினைக்கிறாள். கதாநாயகி மகாலட்சுமியை அழுகை லட்சுமி என்று வைத்திருக்கலாம் சீன் பை சீன் அழுவது எப்படி என்று எங்கிருந்துதான் கற்றுக்கொண்டாரோ தெரியலையே.

பாசமலரில் உமாவிற்கும் கோகிலாவிற்கும் மீண்டும் சக்களத்தி சண்டை ஆரம்பித்து விட்டது. அம்மன் வந்து ஒருபக்கம் பயமுறுத்த… அதைக்கண்டு தாமரை அஞ்ச… இப்போது இறந்து போனதாக கூறப்பட்ட கோகிலா மீண்டும் திரும்பி வந்து இப்போது தனது சண்டையை ஆரம்பித்து விட்டாள்.

குலதெய்வம் பழிவாங்கும் படலமாக நகர, பத்து கோடியை வைத்து கதை நகருகிறது தெய்வமகள். வம்சம் தொடரோ ஜோதிகாவின் திருமணத்தை வைத்து ஒருவாரமாக இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லாம் பத்துகோடி கதையாகவே இருக்கிறது.

குலதெய்வம் கோவிலுக்கு போன உமாவின் குடும்பத்தினர் சந்திக்கப் போவது என்ன? அங்கே கொலை நடக்குமா? வாணி ராணியில் தேஜூவை சரவணன் திருமணம் செய்து கொள்வானா? என்ற சஸ்பென்ஸ் உடன் போகிறது கதை.

நாகினியில் கொலை செய்யும் வெறியோடு அலையும் கவர்ச்சி நாகங்கள்தான் இரவு தூங்கும் நேரத்தில் அனைவரின் வீடுகளுக்கும் வந்து செல்கிறது. ஊரே அமைதியாக இருக்க மகுடிச்சத்தம் மட்டும் அனைவரின் வீடுகளிலும் கேட்கிறது. மொத்தத்தில் சீரியலில் தொடங்கி சீரியலுடன் முடிகிறது இல்லத்தரசிகளின் ஒருநாள்.

கதை புத்தகம் படித்து சமையல் குறிப்பு படித்து கதை பேசிய பெண்கள் கூட்டம் இப்போது வள்ளி வாழ்க்கை இப்படி ஆயிருச்சே… வாணி மருமகள் ஏன் இப்படி இருக்கா என்று பக்கத்து வீட்டு பெண்களின் கதையை பேசுவது போல சீரியல் நாயகிகளின் கதையை பேசி பொழுதை கழித்து வருகின்றனர் என்பதுதான் கொடுமை.

tamil.oneindia.com