பள்ளி ஆசிரியர் பச்சமுத்து டூ கல்வித்தந்தை பாரிவேந்தர்!

parivendharசென்னை: பள்ளியில் கணித ஆசிரியராக பணியைத் தொடங்கிய பச்சமுத்து இன்றைக்கு கல்வித்தந்தை பாரிவேந்தராக உயர்ந்து நிற்கிறார்.தனது குடும்ப உறுப்பினர்களை அறங்காவலர்களாக கொண்ட அறக்கட்டளை மூலம் எஸ்ஆர்எம் குழுமத்துக்குச் சொந்தமாக 5 வளாகங்களில் செயல்படும் 21 கல்லூரிகளையும், புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி பத்திரிகைகளையும், புதிய தலைமுறை தொலைக்காட்சியையும், வேந்தர் மூவீஸ் திரைப்பட நிறுவனத்தையும் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார். காட்டாங்கொளத்தூர் அருகே பல நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் எஸ்.ஆர்.எம். வளாகம் , ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தை போல பிரமாண்டமாக மிரட்டுகிறது.

10000 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரரான பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் 72.50 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 1969ல் மேற்கு மாம்பலத்தில் எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேள் என்ற பெயரில் துவங்கப்பட்ட ஒரு பிரைமரி பள்ளி இன்று தமிழகத்தின் மாபெரும் கல்வி கொள்ளை நிறுவனமாக வளர்ந்தது எப்படி?

நைட்டிங்கேல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வள்ளியம்மை பாலிடெக்னிக் கல்லூரி எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி எஸ்ஆர்எம் நர்சிங் கல்லூரி எஸ்ஆர்எம் பிசியோதெரபி எஸ்ஆர்எம் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் காலேஜ் எஸ்ஆர்எம் பாலிடெக்னிக் கல்லூரி ஈஸ்வரி பொறியியல் கல்லூரி எஸ்ஆர்எம் பல்மருத்துவ கல்லூரி எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி மையம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி என 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் பச்சமுத்து. இவை போக சில வட இந்திய மாநிலங்களில் எஸ்.ஆர்.எம். கல்லூரிகளின் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன.

கல்வி நிறுவனங்களை தாண்டி, எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகள், எஸ்.ஆர்.எம். நட்சத்திர விடுதிகள் , எஸ்.ஆர்.எம். பார்சல் சர்வீஸ், எஸ்.ஆர்.எம். டிராவல்ஸ், எஸ்.ஆர்.எம். எலக்ட்ரிக்கல்ஸ், இந்திய ஜனநாயக கட்சி என வேறு பல தொழில்களிலும் கோலோச்சுகிறார் பச்சைமுத்து. ஊடகத்துறையில் புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி என்ற இரண்டு பத்திரிக்கைகளும், புதிய தலைமுறை என்ற செய்தி தொலைகாட்சியும் இயங்குகிறது. புதுயுகம், வேந்தர் டிவி ஆகிய பொழுதுபோக்கு சேனலும் நடத்தி வருகிறார்.

எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் 80% மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்கிறது அதன் இணையதளம். நிகர் நிலைப் பல்கலைக் கழகமான எஸ்ஆர்எம் தனது கல்லூரிகளில் மாணவர்களை அனுமதிப்பதற்கான நுழைவுத் தேர்வை தானே நடத்துகிறது. அதில் அவர்களே உருவாக்கும் தர வரிசைப்படி மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தரவரிசை எண்ணைப் பொறுத்து நன்கொடை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது. யாரிடம் எவ்வளவு நன்கொடை வாங்குவது என்பதை பச்சமுத்து குடும்பத்தினர் மட்டுமே தீர்மானிக்கின்றனர்.

எஸ்ஆர்எம்மில் குறைந்த செலவில் இடம் வாங்கித் தருவதாக வாக்களிக்கும் தரகர்கள் பல வட இந்திய நகரங்களில் முளைத்திருக்கின்றனர். மருத்துவக் கல்லூரியிலோ இதனை விடவும் லட்சங்களின் எண்ணிக்கை கூடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8,000 மாணவர்கள் பல்வேறு படிப்புகளில் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கின்றனர்.

tamil.oneindia.com

TAGS: