யாழ் மண்ணின் காலத்தால் அழியாத இந்துப் பாரம்பரியம்

nallurயா ழ். தமிழர்களுக்குரிய இனத்துவ அடையாளமாக நல்லூர்க் கந்தன் ஆலயம் விளங்குகின்றது.

இலங்கையின் வட பகுதித் தமிழ் மக்கள் உலகின் எப்பிரதேசத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் நல்லூர்க் கந்தனை தங்களது குலதெய்வமாகவே என்றும் போற்றி வழிபடுகின்றனர்.

இலங்கையின் வரலாற்றை நோக்குவோமானால், நல்லூர்க் கந்தன் ஆலயம் மிகவும் தொன்மை மிக்கதாக விளங்குகின்றது.

எமது நாட்டின் வரலாற்று இலக்கிய மூலாதாரங்களில் கூட நல்லூர் கந்தன் ஆலயம் ஸ்தாபிக்கப்பட்ட காலப் பகுதியை சரியாக மதிப்பிட முடியாதபடி மிக நீண்டகாலத் தொன்மை மிகுந்ததாக இவ்வாலயம் விளங்குகின்றது.

அதேசமயம் ஐரோப்பியர்களின் ஆக்கிரமிப்புகளின் போது நல்லூர்க் கந்தன் ஆலயம் நிர்மூலமாக்கப்பட்டபோதிலும், அவ்வாலயத்தை முற்றாக அகற்றி விடுவதற்கு அந்நியர்களால் முடியாமல் போய்விட்டது.

நல்லூர்க் கந்தன் ஆலயமும் அதன் கீர்த்தியும் காலவோட்டத்தில் வளர்ச்சி பெற்றே வந்துள்ளன.

எனவே வரலாற்றினால் அழித்தொழிக்க முடியாத தெய்வீகச் சிறப்பு மிக்க வழிபாட்டுத் தலமாக நல்லூர்க் கந்தன் ஆலயம் மிளிர்கிறது.

இந்து மதத்துக்கும் பௌத்தத்துக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. இவ்விரு மதங்களின் மூலாதாரமே ஒன்றுதான்.

இந்து சமுத்திரப் பிராந்தியமெங்கும் செல்வாக்குப் பெற்றிருந்த இந்து மதத்தில் உதித்த கௌதம புத்தர் அவர்களால் அருளப்பட்ட வாழ்க்கை நெறித் தத்துவங்களே பௌத்த மதமாகப் பின்பற்றப்படுகின்றன.

ஆகவே பௌத்தம் என்பது இந்து மதத்திலிருந்து வேறுபட்ட ஒன்றல்ல. இந்து மதக் கோட்பாடுகளைப் பின்பற்றி உருவாகியுள்ள சீரிய வாழ்க்கை நெறியே பௌத்தம் எனலாம்.

எனவேதான் இலங்கையில் பௌத்த மதத்தினரான சிங்கள மக்களும் இந்து மத வழிபாட்டையும் பின்பற்றி வருகின்றனர்.

இலங்கைப் பௌத்தர்களின் இந்து வழிபாட்டுத் தெய்வங்களில் முதன்மையானவராக முருகப் பெருமான் விளங்குகின்றார்.

கதிர்காமம் போன்ற திருத்தலங்கள் பெளத்த மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்று விளங்குவதை இங்கு குறிப்பிட முடியும்.

இந்நாட்டின் பௌத்த சிங்கள மக்கள் கதிர்காமம் வழிபாட்டுத் தலத்தைப் போன்று நல்லூர்க் கந்தன் ஆலயத்தையும் பக்திபூர்வமாக நோக்குகின்றனர்.

நாட்டில் யுத்தம் நிலவிய நீண்டகாலப் பகுதியில் தென்னிலங்கை சிங்கள மக்கள் வட பகுதிக்குச் செல்ல முடியாத சூழல் காணப்பட்டது.

இலங்கையில் அமைதி நிலவுகின்ற இவ்வேளையில், தென்னிலங்கை சிங்கள மக்களும் நல்லூர்க் கந்தனின் ஆசியைப் பெறுவதற்காக யாழ்ப்பாணம் நோக்கிப் படையெடுப்பதைக் காண முடிகிறது.

எனவே இலங்கையில் வாழ்கின்ற தமிழ், சிங்கள மக்களுக்குரிய பொதுவான தெய்வமாகவே நல்லூர்க் கந்தன் விளங்குகின்றான்.

நல்லூர்க் கந்தனுக்கு இன்று தேர்த்திருவிழா.

உலகெங்கும் பரந்துபட்டு வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கு இன்றைய தினம் பக்திபூர்வமானது.

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஆரம்பமான உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகெங்கும் சிதறுண்டு போய் வாழ்கின்றனர்.

அவர்கள் இலங்கையில் இருந்து உயிர்களையும் உடைமைகளையும் மாத்திரமே கைவிட்டுச் சென்றார்களே தவிர, தங்களது கலாசார பண்பாட்டு விழுமியங்களையும் இனத்துவ அடையாளங்களையும் தம்முடனேயே எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

தாங்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளில் இனத்துவ பாரம்பரியங்களை இறுதிவரை பின்பற்றிய படியே இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

நல்லூர்க் கந்தன் ஆலய உற்சவம் தொடங்கியதும் அவர்கள் பக்திநெறியில் மூழ்கி விடுகின்றனர்.

யாழ். மண்ணில் வசிப்பது போலவே தங்களைக் கற்பனை செய்தபடி உற்சவ காலத்தில் அந்நாடுகளில் ஆசாரத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

அதேசமயம் மேற்கு நாடுகளில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களில் ஏராளமானோர் தங்களது இயந்திர வாழ்க்கைக்கு மத்தியிலும் நல்லூர்க் கந்தனைத் தரிசிக்கவென உற்சவ காலத்தின் போது தாயகத்துக்கு வந்து சேர்ந்து விடுகின்றனர்.

புலம்பெயர் தமிழர்கள் நல்லூரானின் தேர்த்திருவிழாவைக் காண இன்றைய தினத்தில் யாழ். மண்ணில் வந்து குவிந்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

இதுவே நல்லூர்க் கந்தன் திருத்தலத்துக்குரிய தனிச் சிறப்பாகும்.

நல்லூர் புனித பூமியானது உலகில் பரந்துபட்டு வாழும் மக்களாலும், உள்நாட்டில் வாழும் பக்தர்களாலும் இன்று நிறைந்து காணப்படுகின்றது.

யாழ். பிரதேசமே தெய்வீக பூமியாகக் காட்சியளிக்கின்றது.

ஒரு மதத்துக்கும் இனத்துக்கும் உரிய தனியான சிறப்பு இதுதான்.

அந்நிய படையெடுப்புகளாகட்டும், கடந்த கால உள்நாட்டு மோதல்களாகட்டும், வடக்கு மண்ணில் இருந்து இந்து அடையாளங்கள் ஒருபோதுமே அழிந்துவிடவில்லை. அவை மென்மேலும் சிறப்புற்றே விளங்குகின்றன.

வேறு மதத்தவர்களும் மதிப்பளிக்கின்ற திருத்தலங்களாகவே இந்து ஆலயங்கள் விளங்குகின்றன.நல்லூர்க் கந்தனின் புகழும் அவ்வாறானது தான்.

இலங்கையில் அனைத்து மதங்களுக்கிடையேயும் பலமான உறவுப் பாலம் கட்டியெழுப்பப்படுவதற்கு நல்லூர்க் கந்தனின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டுமென இன்றைய தேர்த்திருவிழா நன்னாளில் பிரார்த்தனை செய்வோம்.

-http://www.tamilwin.com

TAGS: