உலக நாடுகள் இலங்கைக்கு காட்டியுள்ள சாதக சமிக்ஞை!

maithriஇலங்கை தொடர்பிலான சர்வதேசத்தின் பார்வை பச்சை விளக்கு சமிக்ஞை சாதகமான போக்கில் காணப்படுவதை ஐ. நா. பொதுச் சபை கூட்டத்தின் போது நன்கு அவதானிக்க முடிந்துள்ளதாக அறிய முடிகிறது.

2015க்கு முன்னர் வரை சர்வதேசம் இலங்கை தொடர்பில் கொண்டிருந்த மோசமான எண்ணக்கரு எமது நாட்டை உலக அரங்கிலிருந்து தனிமைப்படுத்தும் ஒரு அச்சுறுத்தலுக்குள் தள்ளிவிட்டிருந்தது.

2015 ஜனவரி 8 க்குப் பிறகு வீழ்ந்திருந்த இலங்கை எழுந்து நடக்கத் தொடங்கியது. தன்னம்பிக்கையின் அடிப்படையில் அரசு செயற்படத் தொடங்கியதன் மூலம் தான் எம்மால் எழும்ப முடிந்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ. நா. பொதுச் சபைக் கூட்டத்தில் உலகத் தலைவர்கள் முன்னிலையில் ஆற்றிய உரைக்கு உலகத் தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்திருக்கின்றனர்.

ஜனாதிபதியின் உரை உலகத் தலைவர்களை ஈர்த்துள்ளதையே இது காட்டுகின்றது.

நாட்டில் மீண்டுமொரு தடவை யுத்தம் ஏற்பட எந்த வழியிலும் இடமளிக்கப்படமாட்டாது எனவும் நல்லிணக்கத்தின் மூலம் சகல மக்களதும் மனங்களை வெற்றிகொள்ளஉறுதிபூண்டிருப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்திக் கூறியிருக்கின்றார்.

உலகில் மிகச் சிறந்த நாடாக இலங்கையை கட்டியெழுப்ப எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இரண்டாவது இலக்கை அடைவதற்கு முதலாவது இலக்கை வெற்றி கொள்ள வேண்டும். சகல இன மக்களதும் இதயங்களை வென்றெடுக்க வேண்டும்.

2015 ஜனவரி 8ல் அளித்த உறுதி மொழியை உரிய முறையில் நிறைவேற்றுவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்.

அது சாத்தியப்படுவதன் மூலமே இந்த இலக்கை எம்மால் எட்ட முடியும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், அவரது அரசும் யுத்தம், இன நெருக்கடி போன்றவை தொடர்பில் உள்நாட்டில் ஒரு விதமாகவும் சர்வதேசத்துக்கு வேறு விதமாகவும் தெரிவித்து வந்தனர்.

அதன் காரணமாக நாடு எதிர்கொண்ட நெருக்கடிகள் கொஞ்சமல்ல. அதிலிருந்து மீள முடியாமல் சர்வதேசம் எம்மை தவறாகவே பார்க்கும் நிலை ஏற்பட்டது.

ஆனால் மைத்திரிபால சிறிசேன தேர்தலுக்கு முன்னர் என்ன சொன்னாரோ அதே உறுதிப்பாட்டில் தான் இன்றுமிருக்கிறார்.

நல்லாட்சி, நல்லிணக்கம் இதன் மூலம் இனங்களை ஒன்றுபடுத்தி நாட்டைக் கட்டியெழுப்புவோம் என அறிவிக்கப்பட்ட உறுதிமொழியில் இம்மியளவும் பிசகாமல் காரியமாற்றிக் கொண்டிருக்கிறார்.

தேசிய சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச ஆதரவு, ஒத்துழைப்புடன் நாட்டைக் கட்டியெழுப்புவது தமது எதிர்பார்ப்பு என இங்கு தெரிவித்திருக்கும் ஜனாதிபதி அடுத்த ஆண்டினை ஏழ்மையிலிருந்து விடுதலையடையும் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எமது நாட்டைப் பொறுத்தளவில் பொருளாதார ரீதியில் எமக்கு மீள் உருவாக்கம் மிக முக்கியமானதாகும்.

பொருளாதாரத்தில் கணிசமான முன்னேற்றத்தை எட்ட முடிந்தால் மட்டுமே எம்மால் அடுத்த கட்ட நகர்வுக்குள் பிரவேசிக்க முடியும்.

நாட்டில் பொருளாதாரம் வளமடைய வேண்டுமானால் மக்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.

ஊழல், மோசடிகளிலிருந்து நாடு முழுமையாக விடுபட வேண்டும். உளச்சுத்தத்துடன் நாட்டுப் பற்றுடன் செயற்பட வேண்டும்.

அதற்காகவே தமது அரசு நல்லிணக்கத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக ஜனாதிபதி உலகத் தலைவர்களிடம் எடுத்துரைத்திருக்கிறார்.

உலகத் தலைவர்களுடனான தனித் தனிச் சந்திப்புக்களின் போது கூட தலைவர்கள் ஜனாதிபதியை பாராட்டியதோடு இலங்கையின் அபிவிருத்திப் பயணத்துக்கு உதவுவதாகவும் உறுதியளித்திருக்கின்றனர்.

ஜனாதிபதி பொதுச் சபையில் உரையாற்றும் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் உலகத் தலைவர்கள் மெச்சியுள்ளனர்.

ஜனாதிபதியின் உரை இலங்கைக்கு மட்டுமல்ல பொருளாதார ரீதியில் சீர்குலைந்து காணப்படும் அனைத்து உலக நாடுகளுக்கும் பொருத்தமானதெனத் தெரிவிக்கின்றனர்.

20 மாதங்களுக்கிடையில் நாட்டில் அச்சமற்ற சூழலை ஏற்படுத்த முடிந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி சர்வதேசம் இனியும் எம்மை மாற்றுக் கண்கொண்டு பார்க்காமல் நாட்டின் முன்னேற்றத்துக்கும் அபிவிருத்திக்கும் உலகம் கைகொடுத்துதவ வேண்டுமென்ற கோரிக்கைக்கு சாதகமான சமிக்ஞையை சர்வதேச நாடுகள் காட்டியிருக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூட இலங்கைக்கு உதவத் தயாரென அறிவித்திருக்கிறார். ஜனாதிபதியின் ஐ. நா. உரை தொடர்பிலும் அவர் பாராட்டுத் தெரிவித்திருப்பது இலங்கைக்கு கௌரவத்தை ஈட்டித தந்திருக்கின்றது.

ஜனாதிபதியாக பதவியேற்று 20 மாதங்களை மட்டுமே நிறைவு செய்திருக்கும் மைத்திரிபால சிறிசேனவின் உலகளாவிய பார்வை குறித்து உலகம் வியந்து நிற்கிறது.

இது எமக்கெல்லாம் மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளது.

சர்வதேசம் அதன் நேசக்கரத்தை இலங்கையின் பக்கம் நீட்டத் தயார் என அறிவித்திருப்பதன் மூலம் அரசின் நல்லாட்சிப் பயணத்துக்கு தெம்பூட்டுவதாக கொள்ள முடிகிறது.

நிச்சயமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஐ. நா. விஜயமும், பொதுச் சபையில் அவர் ஆற்றிய உரையும் எமது நாட்டின் முன்னேற்றப் பயணத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்திருக்கின்றது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

-http://www.tamilwin.com

TAGS: