தேர்தல் தொகுதிச் சீரமைப்புக்கு எதிராக சிலாங்கூர் சட்ட நடவடிக்கை

azminசிலாங்கூர்     அரசு,     தேர்தல்  தொகுதிச்   சீரமைப்பு    தொடர்பில்  எழுப்பிய   கேள்விகளுக்குத்   தேர்தல்   ஆணையம்  (இசி)   தகுந்த   விளக்கமளிக்கத்    தவறியதால்   அதற்கு  எதிராக   சட்ட  நடவடிக்கை  எடுக்கவுள்ளது.

குறிப்பாக,   தொகுதிச்  சீரமைப்பு   அரசமைப்பில்  சொல்லியபடிதான்   மேற்கொள்ளப்பட்டதா    என்று  சிலாங்கூர்    அரசு    அறிந்துகொள்ள  விழைந்தது.

“நேற்று  இசி   பதில்    அனுப்பியிருந்தது.  ஆனால்,  எழுப்பப்பட்ட  கேள்விக்கு  அதில்  பதில்  இல்லை.  அதிலிருந்து   தேர்தல்   தொகுதிச்   சீரமைப்புக்கு    நியாயமான  காரணத்தை     அவர்களால்    கூற    முடியவில்லை  என்ற   முடிவுக்குத்தான்   வர    வேண்டியுள்ளது.

“இசி   பொறுப்பாக    நடந்து  கொள்ள    வேண்டும்.  அடிப்படையானதும்  முக்கியமானதுமான   விவகாரங்கள்   குறித்து   எழுப்பப்படும்   கேள்விகளுக்குப்   பதிலளிக்காது   ஒதுக்கிவிடக்கூடாது”,  என  சிலாங்கூர்   மந்திரி   புசார்  அஸ்மின்  அலி   ஓர்    அறிக்கையில்    கூறினார்..

இசி   இப்படியொரு    நிலையைக்  கைக்கொண்டிருப்பதால்    அதற்கு   எதிராக    சட்ட  நடவடிக்கை   எடுப்பதற்கான   வழிகளை  ஆராயும்படி    வழக்குரைஞர்களைக்   கேட்டுக்கொள்ளப்போவதாக    அஸ்மின்   தெரிவித்தார்.

இதனிடையே,  சிலாங்கூர்  சிந்தனைக்  குழுவான   டாருல்   எசான்   கழகம்( ஐடிஇ)    இசியின்  பரிந்துரைகளின்படி     தொகுதிகள்   சீரமைக்கப்பட்டால்   14-வது   பொதுத்   தேர்தலில்   பிஎன்    வெற்றிபெற    நிறைய   வாய்ப்புண்டு  என்றது.

“2004-இல்  பிஎன்னின்    வெற்றிக்குக்   காரணமே   தொகுதிச்  சீரமைக்கப்பட்டதுதான். பாக்  லாவின்  செல்வாக்கு    அதற்கு  முக்கிய  காரணமல்ல”,  என்றும்    ஐடிஇ-இன்   துணைத்    தலைவர்   ரெட்சுவான்  ஒத்மான்   சினார்  ஹரியானிடம்    தெரிவித்தார். அப்துல்லா  அஹமட்  படாவி   பிரதமரானதும்    பிஎன்னுக்குக்    கிடைத்த  மிகப்    பெரிய   வெற்றி  குறித்துத்தான்   அவர்  அவ்வாறு   கூறினார்.

“சரவாக்   தேர்தல்களில்  (மே  மாதம்)    டிஏபி     ஐந்து   இடங்களை   இழந்ததற்கும்    தொகுதிச்  சீரமைப்புத்தான்    காரணமே    தவிர,   சீனர்களின்     ஆதரவு  குறைந்து    விட்டது   என்பது   காரணமல்ல”,  என்றாரவர்.