பாக். மீது போர் தொடுப்பதை கடைசி வாய்ப்பாக வைத்துக்கொள்ள மத்திய அரசுக்கு காங். அட்வைஸ்

25-1474780359-digvijaya-singh46-600பனாஜி: பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதை கடைசி வாய்ப்பாக மத்திய அரசு வைத்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங் வலியுறுத்தியுள்ளார். கோவா மாநிலம் பனாஜியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட திக்விஜய் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. எனவே போர் தொடுப்பதை கடைசி வாய்ப்பாக இந்தியா கொள்ள வேண்டும். பாகிஸ்தான் மீது அழுத்தத்தை ஏற்படுத்த பேச்சுவார்த்தை மூலம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். நமது நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவும் இப்போது பாகிஸ்தானுடன் சேர்ந்து ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த காலங்களில் இதுபோல் நடந்தது இல்லை. இவைகளை எல்லாம் பாஜக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசுக்கு ஆதரவு

காஷ்மீர் மாநிலம் உரியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் நம் அனைவருக்கும் கவலை அளிக்கும் நிகழ்வு. உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்பு விஷயத்தில் காங்கிரஸ் எப்போதும் ஆட்சியில் இருக்கும் அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது.

தனிமைப்படுத்துவோம்

பயங்கரவாத பிரச்சினையில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த காங்கிரஸ் ஒரு இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளது. நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பொதுச்சபை மாநாட்டிலும் தீவிரவாதம் பற்றி விவாதிக்கப்பட்டு உள்ளது.

அம்பலப்படுத்த வேண்டும்

பாகிஸ்தானை சேர்ந்த இயக்கங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக உறுதியான ஆதாரங்களுடன் நாம் அடையாளப்படுத்த வேண்டும். உரி தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ முகமது இயக்கம் என பாகிஸ்தான் கூறியுள்ளது.

சமரசமே இல்லை

ஆனால் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்திய வழக்கில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவர் அசார் மசூதை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விடுதலை செய்தது. காங்கிரஸ் கட்சி பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுடன் ஒருபோதும் சமரசம் செய்துகொண்டதில்லை.

அன்று காட்டம்

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் மீது கடுமையான அறிக்கைகளை வெளியிட்டார். ஆனால் மோடி ஆட்சிக்கு வந்தபின்னர் இப்போது மன்மோகன்சிங் செய்ததையே செய்துவருகிறார். இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.

tamil.oneindia.com

TAGS: