இந்து மக்களை புகழ்ந்த அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ..!

donald_9_001அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ”அமெரிக்க கலாசார வளர்ச்சியில், இந்துக்களின் பங்கு அளப்பரியது,” என புகழ்ந்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அண்மித்துள்ள நிலையில், குடியரசு கட்சி சார்பில், டொனால்டு டிரம்பும், மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிங்டன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வெற்றியை தீர்மானிப்பதில், அமெரிக்க குடியுரிமையும், ஓட்டுரிமையும் பெற்ற இந்தியர்களின் ஓட்டுகள் முக்கிய பங்காற்றும் என்பதால், இருவரும், அங்கு வசிக்கும் இந்தியர்களை கவரும் வகையில் பிரசாரம் செய்கின்றனர்.

இந்நிலையில், நியூஜேர்சியில், அடுத்த மாதம் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார நிகழ்வுக்கு குடியரசு கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான, அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர்கள் பங்கேற்க உள்ளனர். அந்த நிகழ்ச்சியில், டிரம்ப், ஆதரவு திரட்டவுள்ளார்.

இதுகுறித்து, டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவிக்கையில், அமெரிக்கா மற்றும் உலக கலாசார மற்றும் நாகரிக வளர்ச்சியில், இந்துக்களின் பங்கு அளப்பரியது.

குடும்ப வாழ்க்கை முறை, ஒழுக்கம், கடின உழைப்பு, முன்னேற்றம் போன்றவற்றின் மூலம், அமெரிக்காவின் வளர்ச்சிக்கு, இங்கு வசிக்கும் இந்துக்கள் பெரும் பங்காற்றி உள்ளனர்.

அமெரிக்காவின் வளர்ச்சியில், இந்தியர்களின் பங்களிப்பை புறக்கணிக்க முடியாது. அவர்கள் மத்தியில் உரையாற்றும் நாளை எண்ணி, ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நியூஜேர்சியில் நடக்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், அனைவரும் பங்கேற்க வேண்டும். அமெரிக்காவை மேலும் வளமானதாக்க, தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com