பௌத்த மயமாகும் தமிழர் தாயகம்; மறுக்க முடியாத ஆதாரங்கள் மூலம் அனைவர் கவனத்தையும் ஈர்த்த பிரித்தானிய தமிழர் பேரவை

geneva03 ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமை கழகத்தின் 33வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானிய தமிழர் பேரவை சமர்ப்பித்த ஆவணங்கள் சிறிலங்காவின் முன்னைய அரசு மற்றும் இன்றைய “நல்லாட்சி” அரசின் நிலப் பறிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது.

நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழக (UNHRC) கூட்டத் தொடரில் இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ மயமாக்கல் மற்றும் நில அபகரிப்பு தொடர்பாக நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), பசுமை தாயகம் மற்றும் அமெரிக்காவினை தளமாகக் கொண்டியங்கும் USTPAC இணைந்து இந் நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தனர்.

தமிழர் பிரதேசங்களில் நிர்மாணிக்கப்படும் பௌத்த விகாரைகள் மற்றும் சிறிலங்கா படையினர் நடாத்தும் தொழில் முயற்சிகள் தொடர்பான விரிவான தகவல்கள் அடங்கிய புத்தக பிரதி கடந்த வாரம் நடைபெற்ற 33 வது மனித உரிமை மாநாட்டில் அனைத்து நாட்டு பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்டிருந்தது.

மேலும் நில அபகரிப்பு தொடர்பில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து புகைப்பட ஆதாரங்கள் மூலமாக சர்வதேச நாட்டு பிரதிநிதிகளுக்கு மேற்படி “பக்க” நிகழ்வில் (Parallel event)  விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. 8 மாதங்களாக நடாத்திய ஆய்வின் அடிப்படையில் இராணுவ ஆக்கிரமிப்புக்குட்பட்ட தமிழர் தாயகத்தின் மூலை முடுக்கெல்லாம் சத்தமில்லாமல் கட்டியெழுப்பட்டு வந்த சிறிய பெரிய பௌத்த கட்டுமானங்கள் மற்றும் இராணுவம் நடாத்தும் பொருளாதார நிறுவனங்கள் குறித்த ஆதாரபூர்வமான புகைப்படங்கள் மற்றும் தரவுகள் பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

geneva01இந் நிகழ்வில் முக்கிய அதிதிகளாக உலகளாவிய ரீதியில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஓக்லாண்ட் நிறுவனத்தின் அனுராதா மிட்டல் (Executive Director, The Oakland Institute, USA), வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Member of Parliament, Vice Chair of All Party Parliamentary Group for Tamils) மற்றும் போல் ஸ்கல்லி (Member of Parliament, Vice Chair of All Party Parliamentary Group for Tamils) போன்றோர் இணைந்து இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராணுவ மயமாக்கல் மற்றும் நில அபகரிப்பு தொடர்பில் தமது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

இலங்கையில் தமிழர் பகுதியில் மிக வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நில அபகரிப்பு மற்றும் இராணுவ மயமாக்கலுக்கு எதிராக பல தொடர்ச்சியான காத்திரமான செயற்பாடுகளை பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த பல வருடங்களாக மேற்கொண்டு வருகின்றது. கடந்த 2014 ம் ஆண்டு லண்டனில் பல நாட்டு பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் , வெவ்வேறு நாட்டின் தலை சிறந்த அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அரசியல் வாதிகள் எனப் பலரை உள்ளடக்கி, இலங்கையில் நடைபெறும் நில அபகரிப்பு மற்றும் அது தொடர்பான இலங்கை அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை வெளிக்கொணரும் முகமாக சர்வதேச மாநாடு ஒன்று ஒழுங்கு செய்திருந்தனர்.  இதன் காரணமாக கடந்த கால அரசாங்கம் பல முனைகளில் இருந்து பல அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது.

geneva04சர்வதேச அழுத்தம் காரணமாக இலங்கை அரசு தான் ஆக்கிரமித்த சொற்ப அளவான நிலப் பகுதியினை விடுவித்து சர்வதேச நாடுகளை ஏமாற்றும் செயற்படுகளை மேற்கொண்டது. எனினும் பிரித்தானிய தமிழர் பேரவை  இவ் வருட மார்ச் மாதத்தில் அபகரிக்கப்படட மற்றும் விடுவிக்கப்படட நிலம் தொடர்பில் தான் திரட்டிய விரிவான புள்ளி விவரங்கள் கொண்ட அறிக்கை ஒன்றினை தயாரித்து சர்வதேச நாடுகளிடம் சமர்ப்பித்திருந்தது. குறிப்பாக வட மாகாணத்தில் அபகரிக்கப்படட 70,000 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 2500 ஏக்கர் நிலப்பகுதி மட்டுமே விடுக்கப்பட்டிருந்ததமை அம்பலப்படுத்தப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில்  பங்கு  பற்றிய  சர்வதேச  நிபுணர்  அனுராதா  மிட்டல்  அவர்கள்  இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த பொழுது, உள் நாட்டில்  இடம்பெயர்ந்து வாழும்  பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது இடங்களில் மீள குடியேறும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். எனினும் அங்கு மேற்கொள்ளப்படும் இராணுவ மயமாக்கல் இதற்கு பெரும் தடையாக உள்ளது.  ஏற்கனவே  சில  இடங்களில்  மீள்  குடியேற்றப்பட்ட மக்கள்  அங்கு  வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் அற்ற நிலைமையில் பெரும் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

geneva02மக்கள் மீளக்குடியேற்றப்படட சம்பூர்  பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இராணுவ  முகாம் மற்றும் அவர்களினால் மேற்கொள்ளப்படும் தடைகள்  காரணமாக  அப்பகுதி மக்கள் மீன்பிடித்தல் மற்றும் விவசாயம் போன்ற  தொழில்களை மேற்கொள்வதில் பாரிய  சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அத்துடன் இலங்கை இராணுவத்தினரால் இந்து ஆலயங்கள் பௌத்த ஆலயங்களாக மாற்றப்படுகின்றன. யுத்தம் முடிவடைந்து ஏழு  வருடங்கள்  முடிவடைந்த பொழுதும்  இலங்கையின்    வடக்கு  கிழக்கு பகுதியில் பாரிய  அளவில் இராணுவ மயமாக்கல் மேற்கொள்ளப்படுகின்றது.

ஆறு பொது மக்களுக்கு ஒரு இராணுவம் என்னும் வகையில் தமிழர் பிரதேசங்களில் பாரிய அளவிலான இராணுவ மயமாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையின் கிழக்கு பகுதியில் பாரிய அளவில் மேற்கொள்ளப்படட  சிங்கள  மயமாக்கல்  காரணமாக  தமிழர்கள்  சிறுபான்மையினர்  ஆக்கப்பட்டுள்ளனர். தற்போழுது இவ்வாறான நடவடிக்கைகளை வடக்கிலும் மேற்கொள்ளவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டுவருவதுடன் மைத்திரியின் புதிய அரசு ஆட்சி அமைத்து ஒன்றரை வருடங்கள் கழிந்தும் கைதிகள்  விடுதலை,  மற்றும்  மீள  நிலங்களை  ஒப்படைத்தல்  போன்ற  விடயங்களில்  காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை, பொது மக்களின் இயல்பு வாழ்வில்  இராணுவத்தின் தலையீடு என்பன குறித்த தகவல்களை இப் பக்க நிகழ்வில் அனுராதா அவர்கள் வெளிப்படுத்தியிருந்தார்.