நஜிப்: இந்தியர்களை ‘பென்டாத்தாங்’, ‘கெலிங்’ என்று கூப்பிட வேண்டாம்

 

nopendatang‘கெலிங்’ மற்றும் ‘பென்டாத்தாங்’ போன்ற இழிவுபடுத்தும் சொற்களை இந்திய சமூகத்தின் மீது பயன்படுத்தப்படுவதை தாம் விரும்பவில்லை என்று பிரதமர் நஜிப் ரசாக் இன்று கூறினார்.

மஇகாவின் 70 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டத்தை இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் மக்களிடையே பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும் என்றார்.

“இந்தியர்களைப் ‘பென்டாத்தாங்’ என்றும் ‘கெலிங்’ என்றும் கூப்பிட வேண்டாம். நான் இதை விரும்பவில்லை. தயவு செய்து, வேண்டாம்” என்றாரவர்.

“நாடு ஒன்றுபட்டிருந்தால் உண்மையான மாற்றங்களைக் கொண்டு வர முடியும்…எதிரணி அரசியலால் மக்கள் சலிப்படைந்து விட்டனர்” என்று அவர் மேலும் கூறினார்.

பாரிசான் தலைவரான நஜிப் நாட்டிலுள்ள அனைத்து இந்தியர்களையும் சுப்ரமணியம் ஒன்றுபடுத்துவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக மஇகா அதன் பிரச்சனைகளைத் தீர்த்துவிடுவது மிக அவசியமானதாகும் என்றாரவர்.

“நாட்டிலுள்ள இந்திய சமூகத்தை பாதுகாக்க வேண்டும் என்று மஇகா விரும்பினால், அது அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அது அனைத்து இந்தியர்களையும் அதன்குடையின் கீழ் ஒன்றுபடுத்த வேண்டும்”, என்றார் நஜிப்.

கட்சியுள்ள அனைத்துத் தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து ஒற்றுமை பற்றி பேச வேண்டும். அவர்கள் உண்மையிலேயே ஒன்றுபட இயலாவிட்டாலும், எதிர்வரும் தேசிய தேர்தலில் குறைந்தபட்சம் பிஎன் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதற்கான ஓர் அர்த்தமுள்ள, பயன்படத்தக்க கூட்டணியை அமைக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நஜிப் மேலும் கூறினார்.

“நான் ஒரு வலுவான மஇகாவை காண விரும்புகிறேன். மஇகா வலுவானதாக முடியும், மலேசியாவிலுள்ள அனைத்து இந்தியர்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவருதின் மூலம்”, என்பதை அவர் வலியுறுத்தினார்.

அவ்வாறு செய்தால் நாம் வலுவாக இருக்க முடியும். நமக்கு வேண்டியதை நாம் கேட்க முடியும் என்று கூறிய பிரதமார் நஜிப், மஇகா மக்கள் சக்தி போன்ற அரசு சார்பற்ற அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.