நிறுவனங்களைக் கருப்புப் பட்டியலிடுவது கூடாது- தெங்கு ரசாலி

ku liஅம்னோ    மூத்த     தலைவர்    தெங்கு   ரசாலி   ஹம்சா,   பெர்சே  இயக்கத்துக்குப்  பண உதவி   செய்யும்   நிறுவனங்களைக்  கருப்புப்  பட்டியலிட   வேண்டும்    எனக்  கூறப்படுவதை   நிராகரிக்கிறார்.

“அது  சரியல்ல    என்பது   என்  கருத்து”,  என்று   குவா  மூசாங்    எம்பி     தெரிவித்தார்.  இன்று   கோலாலும்பூர்   லேக்  கிளப்பில்  ‘அம்னோ  முடிவுக்கு  வருகிறதா?’ என்னும்    கட்டுரைத்  தொகுப்பு  நூல்  வெளியீட்டுக்குப்  பின்னர்    அவர்      செய்தியாளர்களிடம்   பேசினார்.

“யாரும்   எதற்காகவும்   நன்கொடை   அளிக்கலாம்.  அது   சட்டத்தை   அல்லது  அரசமைப்பை  மீறாதிருப்பதுதான்   முக்கியம்”,  என்றாரவர். மலாய்   நாளேடான   உத்துசான்  மலேசியா   அப்படிப்பட்ட   நிறுவனங்களைக்   கருப்புப்  பட்டியலிட   வேண்டும்   என்று   தெரிவித்திருந்தது   குறித்து   கருத்துரைத்தபோது   தெங்கு  ரசாலி   அவ்வாறு   உரைத்தார்.

ஆனால்,   பிரதமர்துறை  அமைச்சர்   அப்துல்   ரஹ்மான்   டஹ்லான்     உத்துசானின்   கருத்தை   வரவேற்றார்.  அரசாங்கக்  குத்தகைக்கு  விண்ணப்பிக்கும்     நிறுவனங்களின்   பின்னணியை    ஆராயும்படி   பொருளாதாரத்   திட்டப் பிரிவையும்   அரசாங்க-  தனியார்   பங்காளித்துவப்  பிரிவையும்   பணிக்கப்  போவதாகவும்    அவர்  கூறினார்.