இராணுவ அதிகாரி ஒருவரே ஆவா குழுவை இரகசியமாக உருவாக்கினார்!

Jaffna-Boys-06ஆவா குழு எனப்படும், உந்துருளிகளில் சென்று குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவை, முன்னைய ஆட்சிக்காலத்தில் வடக்கில் உயர் பதவியில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவரே, இரகசியமாக உருவாக்கினார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், நன்கு திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட அடிப்படையில் இந்தக் குழு உருவாக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே பொலிஸ்துறை இதனைக் கண்டுபிடித்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பாக ஊடகங்களிடம் எதையும் கூற வேண்டாம் என்று அரசியல் அதிகாரமட்டத்தில் இருந்து பொலிஸ்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குறிப்பிட்ட ஆங்கில ஊடகத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர், போருக்குப் பின்னர் வடக்கில் பல குழுக்கள் செயற்பட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்திய திரைப்படப் பாணியில் இந்தக் குழுக்களைச் சேர்ந்த இளைஞர்கள் வாள்கள், கத்திகளுடன், உந்துருளிகளில் திரிந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2013ம் ஆண்டு இத்தகைய குழுவொன்றினால், பொலிஸ்துறையைச் சேர்ந்த ஒருவரின் கை வெட்டப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் போருக்கு முன்னரும் கூட இது போன்ற குழுக்கள் செயற்பட்டன.

எனினும், விடுதலைப் புலிகள் இருந்த போது, இத்தகைய குழுக்கள் ஏதும் இருக்கவில்லை என்றும் இராணுவ அதிகாரி ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

– Puthinappalakai

TAGS: