இருமொழித் திட்டம் பற்றிய வினா – விடை

DLP collageஉலகக் கல்வி நிறுவனமாகிய UNESCO-வின் பரிந்துரையின்படி தொடக்கப்பள்ளிக் குழந்தைகள் அனைவரும் அவரவர் தாய்மொழியிலேயே கல்வியைக் கற்க வேண்டும். தாய்மொழி உரிமை அவரவர் பிறப்புரிமை. மலேசிய அரசியலமைப்புச் சட்டத்திலும் தாய்மொழி உரிமை பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தமிழ்ப்பள்ளிகளில் மலாய், ஆங்கிலம் தவிர மற்ற அனைத்துப் பாடங்களும் தமிழிலேயே இருக்க வேண்டும்.

தொடக்கப்பள்ளியில் கணிதம் மற்றும் அறிவியலைத் தாய்மொழியிலும் இடைநிலைப்பள்ளியில் ஆங்கிலத்திலும் படிப்பதற்குப் புதியத்  திட்டத்தை கொண்டுவர கல்வி அமைச்சு தி ட்டம் வகுக்க வேண்டும். அதோடு ஆங்கிலப் பாடத்தை மேம்படுத்தி ஆங்கில மொழி அறிவை வளர்ப்பதற்குக் கல்வி அமைச்சு திட்டமிட வேண்டும்.

இருமொழி திட்டம் சார்பாக எழும் வினாக்களும் அவற்றுக்கான பதில்களும்:

DLP திட்டம் எத்தனைப் பள்ளிகளில் நடக்க உள்ளது?

தமிழ்ப்பள்ளிகள் 49, தேசியப்பள்ளிகள் 572 மற்றும் சீனப்பள்ளி 1ஆகும்.

DLP திட்டத்தில் இடம்பெறும் பாடங்கள் யாவை?

கணிதமும் அறிவியலும் முதலாம் ஆண்டிலும் நான்காம் ஆண்டிலும் அறிமுகப்படுத்தப்படும். இடைநிலைப்பள்ளியில் முதலாம் படிவத்தில் ஆகும்.

DLP திட்டத்தினால் ஆங்கில மொழித் திறன் வளர்ச்சி அடையுமா?

ஆங்கில மொழித் திறனை வளர்க்க ஆங்கிலப் பாடத்தையும் பாட நேரத்தையும் பாடத்திட்டத்தையும் மேம்படுத்த வேண்டும். கணிதம், அறிவியல் ஆகிய திறன் பாடங்கள் (Skill Subjects) வழியாக ஆங்கிலத்தை வளர்க்க நினைப்பது சரியான அணுகுமுறை அல்ல.

கணிதம், அறிவியல் பாடங்களை எந்த மொழியில் சிறப்பாகக் கற்கலாம்?

DLP 2கணிதம், அறிவியல் தொடர்பான நுட்பங்களையும் (Technique) கோட்பாடுகளையும் (Theory) ஆய்வு முறைகளையும் (Experiment), கருதுகோள்களையும் (Hypothesis), கண்டறிதல்களையும் (Finding) அவரவர் தாய்மொழியில்தான் சிறப்பாகக் கற்றுக்கொள்ள முடியும்.

கணிதம், அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் படித்தால் என்ன?

முதலாம் வகுப்பில் புதிதாக கணிதம், அறிவியலைக் கற்கத் தொடங்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் மொழியாகிய ஆங்கிலத்தில் கற்பித்தால் அவர்களால் சரிவர புரிந்துகொள்ள இயலாது.

அப்படியானால் கணிதம், அறிவியலை ஆங்கிலத்தில் படிப்பது தவறா?

இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, பல்கலைக்கழகம் செல்லும் பொழுது கணிதம், அறிவியலை ஆங்கிலத்தில் படிப்பதுதான் சரியானது. ஆனால், தொடக்கப்பள்ளியில் கணிதம், அறிவியலை ஆங்கிலத்தில் படிப்பது முற்றிலும் தவறு.

தொடக்கப்பள்ளியில் கணிதம், அறிவியலை ஆங்கிலத்தில் படித்துக்கொண்டால் பிறகு இடைநிலைப்பள்ளி, பல்கலைக்கழகம் செல்லும் பொழுது எளிதாக இருக்கும் அல்லவா?

இல்லை. தொடக்கப்பள்ளியில் கணிதம், அறிவியலைத் தாய்மொழியில் படித்தால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். கணிதவியல் நுட்பங்களையும் அறிவியல் கோட்பாடுகளையும் தாய்மொழி வழியாகத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். கணிதம், அறிவியல் மொழியைவிட தெளிவும் புரிதலுமே மிக முக்கியம். அந்தத் தெளிவும் புரிதலும் குழந்தைகளுக்குத் தாய்மொழி வழியாகப் படித்தால்தான் கிடைக்கும்.

தாய்மொழி வழியாகக் கணிதம், அறிவியலைப் படிப்பதால் வேறு என்ன நன்மை?

DLP 3தாய்மொழியில் கணிதம், அறிவியலைப் படிப்பவர்களுக்கு   திறனாய்வுச் சிந்தனை (Critical Thinking), ஏரணம் (Logic), கரணவியல் (Reasoning) புத்தாக்கச் சிந்தனை (Inovative) முதலான திறன்கள் மிகச் சிறப்பாக வளரும். பிரான்சு, செருமன், சப்பான், சீனா, கொரியா முதலான நாடுகளில் அதிகமான கண்டுபிடிப்புகளும் ஆக்கங்களும் உருவாகுவதற்குக் காரணம் அந்த நாடுகளில் கணிதம், அறிவியலைத் தாய்மொழியில் படிப்பதுதான்.

கணிதம், அறிவியலைத் தமிழில் படித்தால் முன்னேற முடியுமா?

கண்டிப்பாக முடியும். கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழ்வழியில் படித்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி இருக்கிறார்கள்.

கணிதம், அறிவியலைத் தமிழில் படிக்கும் மாணவர்கள் உலக அரங்கில் சாதிக்க முடியுமா?

DLP 1நிச்சியமாக முடியும். நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலக அளவில் நடைபெறும் அறிவியல், தகவல் தொழில்நுட்பம், புத்தாக்கம் தொடர்பான போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர் எனும் செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன.

அறிவியல் கலைச்சொற்கள், நூல்கள் போன்றவை தமிழில் உள்ளனவா?

கலைச்சொற்கள் தமிழில் வந்துவிட்டன. அகராதிகளும் நிறைய உள்ளன.

DLP –யினால் தமிழ்மொழிக்கு என்ன ஆபத்து?

தமிழ்மொழியின் பயன்பாடு குறையும். தமிழ்மொழியின் கலைச்சொற்கள் அழிந்து போகும். தமிழ்மொழியில் ஆங்கிலமொழிக் கலப்பு அதிகமாகும்.தமிழ்மொழியில் கணிதம், அறிவியல் புத்தகங்கள் வெளிவராது.

தமிழ்ப்பள்ளியில் தமிழ்  பயிற்று மொழியாக இருக்கும் நிலைமை மாறும். தமிழ்ப்பள்ளியில் தமிழ் ஒரே ஒரு பாடமொழியாக ஆகக்கூடும். தமிழ்ப்பள்ளியின் தனி அடையாளம் அழிந்துபோகும். தமிழ்ப்பள்ளியில் தமிழ் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்து போகும். கணிதம், அறிவியல் பாடங்களைக் கற்றுக்கொடுக்க பிற இன ஆசிரியர்கள் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பப்படலாம்.

எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளிகள் அனைத்தும் மூடப்படலாம் அல்லது தேசியப்பள்ளியாக மாற்றப்படலாம்.

DLP திட்டத்தினால் தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கை அதிகரிக்குமா?

சந்தர்ப்பவாதிகள் பயன்படுத்திக்கொள்ளும் நிலையுண்டு.  ஒருவேளை மாணவர் எண்ணிக்கை அதிகரித்தாலும் அவர்களால் தமிழ்க்   கல்விக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் எந்த நன்மையும் கிடையாது. ஆங்கிலத்தை நம்பி தமிழ்ப்பள்ளிக்கு வரும் சந்தர்ப்பவாதிகளை நம்பி தமிழ்ப்பள்ளிகளின் தனி அடையாளத்தை நாம் இழக்கக் கூடாது. அவர்களால் ஏழ்மை – பணக்கார இடைவெளி மேலும் விரிவடையும்.

கணிதம், அறிவியல் துறைகளில் நமது மாணவர்கள் முன்னேறுவதற்கு DLP திட்டம் நல்லதொரு வாய்ப்பாக இருக்குமா?

DLP 7கண்டிப்பாக இருக்காது. காரணம் DLP-யாக இருக்கட்டும் அல்லது இதற்கு முன்பு இருந்த PPSMI-யாக இருக்கட்டும், இவை இரண்டும் இல்லாத காலத்திலேயே நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கணிதம், அறிவியல் பாடங்களில் மிகச் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அவர்கள் மேற்கல்வி பெறுவதற்கும் முன்னேறுவதற்கும் நம் நாட்டில் நீதி நியாயமான முறையில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இப்பொழுது DLP-யினால் இந்த நிலைமை மாறும் என்பதற்கு எந்தவித உறுதியும் இல்லை.

DLP –யினால் ஆபத்து இருக்குமென்றால் 572 தேசியப் பள்ளிகள் எப்படி அதனை ஏற்றுக்கொண்டன?

DLP –யினால் எந்த ஆபத்தும் இல்லை என்றே வைத்துக் கொள்வோம். அப்படியானால் ஏன் சீனப்பள்ளிகள் DLP திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். உண்மையில் மலாய்மொழி ஆர்வலர்களும், மலாய் இலக்கிய அமைப்புகளும், சீனக் கல்வியாளர்கள் குழுவும் DLP திட்டத்தை வன்மையாக எதிர்க்கின்றனர்.

DLP திட்டத்தினால் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா?

Tamil 2ndary school - MPSமாணவர்களுக்குக் கணிதமும், அறிவியலும் புரியாமல் போகும். மாணவர்களுக்குக் கணிதமும், அறிவியலும் பிடிக்காமல் போகும். மாணவர்களிடையே மன உளைச்சல் ஏற்படும்.

மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் உருவாகும். பின்தங்கிய மாணவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை உருவாகும். ஆங்கிலவழிக் கல்வி, தமிழ்வழிக் கல்வி என இரண்டு வெவ்வேறு வகையான மாணவர்களை உருவாக்கிவிடும். கல்வி மாணவர்களுக்கு ஒரு சுமையாக ஆகிவிடும். பள்ளிப்பிள்ளைகள் மனிதப் பண்புகளை மறந்த இயந்திரங்களாக ஆக்கப்படுவார்கள்.

DLP- யைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

பெற்றோர்கள் அனைவரும் DLP வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.
பொது இயக்கங்கள் ஒன்றுகூடி DLP திட்டத்தை எதிர்க்க வேண்டும்.
தமிழ்ப்பள்ளி நிருவாகங்கள் சீனப்பள்ளிகளைப் பின்பற்றி DLP திட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • vallavan wrote on 27 December, 2016, 22:10

  ஓர் இனத்தை உரு தெரியாமல் அழிக்க வேண்டும் என்றால் மொழியை அழித்தால் போதுமானது..புரிந்துகொள்ளுங்கள் மக்களே…

 • manmathan wrote on 28 December, 2016, 10:25

  மொழி அழிந்தால் இனம் அழிந்து விடும் என்பது பூமிபுத்ரா மக்களுக்கு நன்றாக தெரியும் மக்கேளே

 • en thaai thamizh wrote on 28 December, 2016, 14:03

  தமிழ் நாட்டில்தான் தமிழை தினசரி அழித்துக்கொண்டிருக்கின்றான்களே– ஈன ஜென்மங்கள்– முதல் என்ற வார்த்தை கூட தெரியாத மடையர்கள் first firsta என்று கூறும் அவலம்– பார்க்கிறான் என்று கூட தெரியாதா? looku விடறானாம் –என்ன கேவலம்? இன்னும் எவ்வளவோ?. அத்துடன் தமிழிலில் என்ன பெயர்வைக்கின்றனர்? தமிழ் பெயர்களே கேவலம் என்று நினைக்கும் கேவலம். பேசவே எரிகிறது.

 • Letchu wrote on 28 December, 2016, 16:37

  ஏன் மகளை ஒன்றாம் ஆண்டு தமிழ் பள்ளியில் பதிந்து விட்டேன்
  அவல் ஆங்கில பாலர் பள்ளியில் படித்தவள் தாய் மொழியை படிக்க வேண்டும் என்று பதிந்து விட்டேன். இப்பொழுது என்ன செய்வது…

 • vallavan wrote on 28 December, 2016, 17:25

  இந்த ஒரு மொழியைக் கொல்லும் இருமொழித் திட்டம் கைவிடப்படா விட்டால் நாம் அனைவரும் வரும் பொதுத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்…இது சிலருக்கு கசக்கும் ஆனாலும் கஷாயம் சாப்பிட்டால் தான் உடல் நலமாகும் என்றால் சாப்பிடுவதில் தவறில்லை…நான் ரெடி….நீங்க ரெடியா?

 • தேனீ wrote on 28 December, 2016, 18:12

  தமிழ்ப் பள்ளியில் இருமொழி திட்டம் வேண்டுவோருக்கு ‘தமிழ்’ ஊறுக்காய். நமக்கோ ‘தமிழ்’ சோறு போன்றது. இதுதான் அவர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு. தமிழை ஊறுகாய் போன்று நக்கிக் கொண்டு ஆங்கிலத்தைச் சோறு போன்று சாப்பிடுவார்கள். தமிழ் பற்றில்லாத தமிழர் தத்தம் பிள்ளைகளை மலாய் மொழி பள்ளியில் சேர்த்துச் செம்மையடைவதை நாங்கள் தடுக்கவில்லை. தேர்வு உங்களுடையது.

 • vallavan wrote on 28 December, 2016, 22:36

  .

  “மெல்லத் தமிழ் இனிச் சாகும்” – பாரதி …சரிதானே….? அதை நாம் நம் கண் முன்னே பார்க்கப் போகிறோம் அதுவும் சரிதானே?

 • Dhilip 2 wrote on 30 December, 2016, 1:15

  வாயாலே வடை சுடுவதை விட்டு விட்டு , ஆக்ககரமாக சிந்தனை செய்தால் நன்று, இந்த பிரச்சனையை களைந்து விடலாம் …

 • கோவிந்தசாமி அண்ணாமலை wrote on 31 December, 2016, 15:50

  கேள்வி பதில் சிறப்பாகவே இருக்கின்றன. தாய் மொழிக் கல்வியே சிறந்தது என்பது குறித்து சிஞ்சிற்றும் சந்தேகம் இல்லை. தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் தமிழ் மேல் பற்று வைத்திருக்கிறார்கள் அதே சமயம் இரு மொழி திட்டம் என்று வரும்பொழுது அதனையும் ஏற்கிறார்கள் .காரணம் தங்கள் பிள்ளைகள் இடை நிலை பள்ளிக்கு செல்லும் போது மலாய் மாணவர்களிடம் ஆங்கில மொழி வளத்தில் தோற்று விடக் கூடாது என்ற எண்ணத்தினால்தான். மேலும் மலாய் சீன பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களும் தமிழ் பள்ளிக்கு வரக்கூடிய வாய்ப்பும் அதிகரிக்கலாம்.

 • கோவிந்தசாமி அண்ணாமலை wrote on 31 December, 2016, 15:56

  “மெல்லத் தமிழ் இனிச் சாகும்” – பாரதி இதைச் சொல்லவில்லை வேறு ஒரு “கேனயன்” சொன்னதாகத்தான் சொல்லி அப்படி நடவாது இருக்க என்ன செய்ய வேண்ண்டுமென பாடினார்.

 • நல்லவன் wrote on 1 January, 2017, 16:40

  அந்தக் ‘கேனயனாக’ பாரதி தன்னையே உருவகப்படுத்தி கற்பனை செய்து எதிர்காலத்த தமிழனை வியந்து எண்ணி பாடியதுதான் அந்தப் பாடல்…இன்று நம்மைப் போன்ற பல கேனையன்களுக்கு கொஞ்சமாவது சூடு சொரணை இருக்க வேண்டுமே என்ற தோரணையில் நெஞ்சு நிமிர்த்தி அவன் பாடியது அது.

 • Pon Rangan wrote on 2 January, 2017, 8:13

  Dhilip 2 wrote on 30 December, 2016, 1:15
  வாயாலே வடை சுடுவதை விட்டு விட்டு , ஆக்ககரமாக சிந்தனை செய்தால் நன்று, இந்த பிரச்சனையை களைந்து விடலாம் …

  ஆக்ககரமாக சிந்தனை ஒரு வரி அராஜக புத்தி…அனால்
  எழுதுவதில்லை ..நொட்டச்சொல் நோயன்!

 • PalanisamyT wrote on 5 January, 2017, 6:33

  1. தாய் மொழி விவகாரத்தில் நம்மவர்கள் அவசர பட்டு அடிக்கடி கண்மூடித்த தனமாக முடிவுகள் எடுப்பதாக நினைக்க வேண்டியுள்ளது. அன்று துங்கு அவர்கள் பிரதமராக இருந்தக் காலக் கட்டத்தில் மலாயா பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசரியராக சேவை செய்த டாக்டர் ராமசுப்பையா அவர்களும் இப்படியொரு செயல் திட்டத்தைக் கொண்டு வந்தார்; தூர நோக்கு சிந்தனையோடு தமிழ்ப் பள்ளியைக் காப்பாற்ற வேண்டி அவர் கொண்டு வந்த திட்டம் நல்லது திட்டம்தான்; நோக்கமும் நல்ல நோக்கம்தான். அப்படியொரு திட்டம் அன்று செயல்பாட்டிற்கு வந்திருந்தால் இன்று தமிழ் பள்ளிகள் நிரந்தரமாக இல்லாமல் போயிருக்கும்; தமிழர்களாகிய நாமும் இன்று அடையாளம் தெரியாமல் போயிருப்போம். இதன் தாக்கம் நம் கோயில்களையும் இன்று அடையாளம் தெரியாமல் இழந்திருப்போம். 2. நாம் அவசர பட்டு கண்மூடித்தனமாக எடுக்கின்ற எந்த முடிவுகளும் நாளை நமக்கு பாதகமாக அமையலாம்; ஒரு சமயம் நாம் ஒருக் காலை முன்னோக்கி வைத்துவிட்டால் பின்பு நாம் எக்காலத்திலும் பின் வைக்க முடியாது. ஆதாவது தமிழ்ப் பள்ளியின் உரிமைகளை நம் நிரந்தரமாக பறிக் கொடுத்தற்கு சமமாகிவிடும்; தமிழ் பள்ளியின் உரிமைகளையும் நாளைய நம் தலைமுறையினரையும் தயவு செய்து யாரிடமும் அடகு வைத்து விட வேண்டாம்! தமிழ்ப் பள்ளியில் ஆங்கிலம் தேசிய மொழித் தவிர மற்றப் பாடங்கள் நம் தாய் மொழியிலேயே போதனா மொழியாக இருக்கட்டும்!

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)