விவசாயிகள் மரணம்… ஜல்லிக்கட்டு தடை – பல ஊர்களில் கருப்பு பொங்கல் அனுசரிப்பு

farmer1மதுரை: காவிரி நீரை நம்பியும், பருவமழையை நம்பியும் நெற்பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகள் இந்த ஆண்டு ஏமாந்துதான் போயினர். காவிரி நீரும் வரவில்லை, மழையும் பெய்யவில்லை. பயிர்கள் கருகியதுதான் மிச்சம்.

கருகிய பயிர்களைக் கண்டு வேதனையில் பல விவசாயிகள் மாரடைப்பில் மரணமடைந்தனர். கடன் தொல்லையில் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அறுவடை திருநாள் கொண்டாடப்படும் இந்த நாளில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை உற்சாகமின்றியே காணப்பட்டது. அறுவடையில்லை புத்தரிசியும் இல்லை… அரசு கொடுத்த இலவச அரிசியில் மட்டுமே பல இடங்களில் பொங்கல் பொங்கியது.

காவிரி டெல்டாவில் சோகம்

நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் விவசாயிகள் மரணமடைந்த வீடுகளில் இந்த ஆண்டு அதுவும் இல்லாமல் போனது. பல ஊர்களில் அடுத்தடுத்து துக்க வீடுகள் இருந்ததால் பொங்கல் பண்டிகை உற்சாகமிழந்தே காணப்பட்டது.

ஜல்லிக்கட்டு தடையால் கறுப்பு பொங்கல்

உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பால் மதுரை மாவட்டத்தில் பொங்கல் கொண்டாட்டம் ஒட்டுமொத்தமாக களையிழந்து விட்டது. ஜல்லிக்கட்டு நடைபெறாததால் அலங்காநல்லூரில் தொடர்ந்து 3வது ஆண்டாக எங்களுக்கு கருப்பு பொங்கல் என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

போலீஸ் குவிப்பு

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்கநல்லார், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராம மக்கள், மத்திய, மாநில அரசுகளுக்கும், காவல்துறையின் கெடுபிடிக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கருப்பு பொங்கல்

ஜல்லிக்கட்டு தடையால் தங்கள் கிராமங்கள் களையிழந்து காணப்படுவதால், பொங்கல் திருநாளை கருப்பு பொங்கலாக அனுசரிப்பதாக பாலமேடு, அவனியாபுரம் கிராம மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

துக்கம் அனுசரிப்பு

சேலம் ரெட்டியூர், நரசோதிப்பட்டி, குரங்குசாவடி பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில், எருதாட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கோரி நரசோதிப்பட்டி பெருமாள்மலை அடிவாரம் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினர். சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது. இளைஞர்கள் பலர், கருப்புச் சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

tamil.oneindia.com

TAGS: