சிறை செல்ல அவகாசம் கோரி சசிகலா உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல்!

vk-sasikalaடெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சசிகலா தாம் சரணடைய கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று காலை மனுத்தாக்கல் செய்ய உள்ளார்.

வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள்தான் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஜெயலலிதா மரணமடைந்துவிட்டாலும் அவர்தான் இந்த வழக்கின் மாஸ்டர் மைண்ட் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விளாசியுள்ளனர்.

மேலும் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா விதித்த 4 ஆண்டு சிறைத் தண்டனையையும் ரூ30 கோடி அபராதத்தையும் உறுதி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிசி கோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தனர். அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் சொத்து குவிப்பு நடவடிக்கைகளையும் கடுமையாக சாடினர்.

அத்துடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனே பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடையவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் தாங்கள் சரணடைய கால அவகாசம் கோரி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இன்று உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்ய உள்ளனர்.

நீதிபதிகள் பிசி கோஷ், அமித்வா ராய் முன்னிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் இன்று காலை 10.30 மணிக்கு சரணடைய கால அவகாசம் கோரும் மனுவைத் தாக்கல் செய்ய உள்ளார். அம்மனுவில், தாம் சரணடைவதற்கு முன்பாக தனிப்பட்ட வகையில் சில ஏற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது. அப்படி கால அவகாசம் தராவிட்டால் அது எனக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட இருக்கிறார்.

அதேநேரத்தில் என்ன மாதிரியான தனிப்பட்ட ஏற்பாடுகள் என்பது சசிகலாவின் மனுவில் இடம்பெறவில்லை. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனின் சொத்து குவிப்பு நடவடிக்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்தே உச்சநீதிபதிகள் பிசி கோஷ், அமித்வா ராய் ஆகியோர் நேற்று தீர்ப்பளித்திருந்தனர். இன்று அதே நீதிபதிகள் முன்னிலையில் சரணடைவதற்கு அவகாசம் கோரி சசிகலா மனுத்தாக்கல் செய்ய உள்ளார். நிச்சயம் நீதிபதிகள் இந்த கால அவகாசம் கோரும் மனுவை உடனே நிராகரித்து இன்னும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கவே வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

tamil.oneindia.com

TAGS: