உரிமைக்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டியது அவசியம்

elukatamil-2யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது இன்று வரை எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது.

2009 ஆம் ஆண்டு இந்த நாட்டில் உரிமைக்காக போராடிய ஒரு இனத்தின் போராட்டத்தை பயங்கரவாதம் என்னும் பெயரால் சர்வதேச ஆதரவுடன் மனித குலமே வெட்கிக் தலைகுனியும் அளவுக்கு போர்க்குற்ற மற்றும் மனிதவுரிமை மீறல்களுடன் முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஸ காலத்தில், யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்தும் தமிழ் தேசிய இனம் ஒடுக்கப்பட்டவர்களாகவும், அச்சத்துடனுமே வாழ்ந்து வந்தனர்.

இதனால் கடந்த அரசாங்கத்தின் மீது ஏற்பட்ட வெறுப்புணர்வாலும், சர்வதேசத்தையே தமிழ் தேசிய இனம் நம்பியிருந்த நிலையில், மேற்குலகம் ஆதரித்து கொண்டு வந்த இந்த ஆட்சிமாற்றத்திற்கு தமிழ்தரப்பும் தனது ஆதரவை வழங்கியிருந்தது.

தமிழ் தேசிய இனத்தின் ஜனநாயக குரலாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு நிபந்தனையற்ற பூரண ஆதரவு வழங்கியிருந்தது.

இன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2 வருடங்கள் கடந்து விட்டது. நல்லாட்சி அரசாங்கம் என வாய்கிழிய கத்துகின்ற போதும் பழைய குருடி கதவைத் திறவடி என்ற நிலையில் தான் தமிழ் மக்களின் பிரச்சினைகள் காணப்படுகின்றது.

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததைத் தொடர்ந்தும் ஐ.நா மனித உரிமைகள் தீர்மானத்தில் கூறிய விடயங்களைக் கூட நடைமுறைப்படுத்தாது கால இழுத்தடிப்புக்களையே செய்து வருகின்றது.

தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதை விடுத்து எதிர்கட்சி தலைவர் என்ற பதவியில் இருந்து கொண்டு அரச ஆதரவு சார் தளத்தில் செயற்படுகின்றது.

அமைச்சர்களைப் போல் அவர்களுக்கும் சுகபோக வாழ்க்கை கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த அரசாங்கத்தையும், தமது தமிழ் தலைமைகளையும் நம்பயிருந்த தமிழ் மக்கள் இன்று மேய்ப்பர் அற்ற மந்தைகள் போன்று அனாதைகளாகியுள்ளனர்.

தமிழ் மக்களின் ஆணையின் மூலம் இந்த அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும், பாராளுமன்ற பிரதிநித்துவ வாய்ப்பையும் வைத்து இந்த அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து மக்களுடைய அபிலாசைகள் மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளைக் கூட தீர்த்து வைக்க கடுமையாக உழைக்கவில்லை.

கடந்த ஆட்சிக் காலத்தில் காணப்பட்டதனைப் போன்று திட்டமிட்ட நிலஅபகரிப்புக்களும், பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகளும் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

காணி விடுவிப்பு என்னும் பெயரில் ஆங்காங்கே சிறு சிறு காணிகள் விடுவிக்கப்பட்ட போதும், 20 வருடங்களுக்கு மேலாக இன்றும் வடபகுதியில் முகாம் வாழ்க்கை தொடர்கிறது.

இதுதவிர, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பிரச்சனை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை என பல பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படாத நிலையிலேயே உள்ளது. இந்த நிலையில் தமிழ் மக்கள் செய்வதறியதாத நிலையில் உள்ளனர்.

இந்த அரசாங்கம் மீதும் இந்த அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் தமிழ் தலைமைகள் மீதும் அதிருப்தியும், விரக்தியும் அடைந்த மக்கள் ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும்’ என தியாக தீபம் திலீபன் கூறியதைப் போன்று தாமாகவே வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளார்கள்.

வவுனியாவில் காணாமல் போகச் செ உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம், முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இரண்டு வாரங்களைக் கடந்தும் விமானப்படைவசம் உள்ள காணிகளை விடுவிக்க கோரி அப்பகுதி மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம், புதுக்குடியிருப்பு மக்களால் இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி மேற்கொள்ளப்பட்ட போராட்டம் என்பன அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மாணவர் சக்தி திரண்டு எழுந்ததைத் தொடர்ந்து உலகம் பூராகவும் உள்ள ஒட்டுமொத்த தமிழினமும் அதற்காக குரல் கொடுத்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக வடக்குப் பகுதியில் இந்த மக்கள் போராட்டங்கள் இடம்பெற்று வருவதனால் அதற்கான ஆதரவு பல்வேறு தரப்புக்களிடம் அதிகரித்து வருகிறது.

இந்த போராட்டங்களில் மக்களை வைத்து வழிநடத்த வேண்டிய தமிழ் தலைமைகள் மக்கள் போராட்டங்களை கையில் எடுப்பதை விடுத்து அதன் பார்வையாளர்களாக மாறியிருப்பது என்பது தமிழ் தலைமைகளுக்கும் மக்களுக்கும் இடையில் இடைவெளிகள் ஏற்பட்டுள்ளதையே வெளிப்படுத்துகின்றது.

மக்கள் தமது கோரிக்கைகளயும், அபிலாசைகளையும் தாமாகவே முன்வைத்து வீதியில் இறங்கும் ஒரு நிகழ்வாகவே பேரவையின் எழுக தமிழ் பேரணியும் அமைந்திருந்தது.

இது தமிழ் மக்கள் தமது அபிலாசைகள், இறைமை குறித்து தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பதையே வெளிப்படுத்கின்றது.

யாழில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியைத் தொடர்ந்து மட்டக்களப்பிலும் நடந்திருக்கின்றது. இவ்விரு பேரணிகளிலும் தமிழ் மக்கள் கலந்து கொள்ள காட்டிய ஆர்வம் யுத்தத்திற்கு பின்னும் தமிழ் மக்கள் தமக்கான தீர்வு விடயத்தில் உறுதியான ஒரு நிலைப்பாட்டில் இருப்பதை வெளிப்படுத்துகன்றது.

மறுபுறம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மக்கள் போராட்டங்களை அரசாங்கத்துடன் இணைந்து நலினப்படுத்தவும், இந்த அரசாங்கத்தற்கு அழுத்தம் கொடுப்பதில் இருந்து பாதுகாக்க முயல்வதாகவே எண்ணத்தோன்றுகின்றது.

அரசாங்கமும் மககள் வீதி வருகின்ற சந்தர்ப்பங்களில் அவர்களை ஆசுவாசப்படுத்தி கால இழுத்தடிப்புக்களை செய்ய முயல்கிறது. இது ஜெனீவா நோக்கிய ஒரு அரசாங்கததின் நகர்வாகவும் அமைந்திருககின்றது.

எதிர்வரும் வரும் 27ஆம் திகதி ஐ.நா மனிதவுரிமை பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.

இதன்போது இந்த அரசாங்கம் இணை அனுசரணையாளராக ஐ.நாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மேலும் கால அவகாசங்களை கோர முற்படுகிறது.

இதனை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் தெளிவாக கூறியிருக்கிறார்.

ஐ.நாவை ஆசுவாசப்படுத்த முயலும அரசாங்கம் 69 சுதந்திர தினத்தையும் கொண்டாடியிருக்கிறது. தமிழில் தேசிய கீதத்தை இசைத்திருக்கிறது. ஆனால், சுதந்திரம் பெற்ற அன்றிலிருந்து தமழ் தேசிய இனம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல்வதாக தெரியவில்லை.

புதிய அரசியலமைப்பிலும் தமிழ் மக்களது அபிலாசைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. இந்த நிலையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதால் மட்டும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என இந்த அரசாங்கம் எண்ணுகின்றதா அல்லது ஐ.நாவையும், தமிழர் தரப்பையும் ஏமாற்றவும், காலம் கடத்தவும் முயல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த அரசாங்கம் மேல் விரக்தி நிலையில் இருக்கும் தமிழ் மக்கள் மேற்கொள்ளும் மக்கள் போராட்டங்கள் மேலும் மக்கள்மயப்படுத்தப்பட வேண்டும்.

அதன் மூலமே இந்த அரசாங்கத்தையும், அவர்களுக்கு துணையாக செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் வழிக்கு கொண்டு வர முடியும்.

இந்த நிலையில் தமிழ் மக்களும் வீதியில் இறங்குவதன் மூலமே தமக்கான உரிமைகளை பெறமுடியும் என்பதே நிதர்சனம்.

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் ஒருவரால் வழங்கப்பட்டு 14 Feb 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

-http://www.tamilwin.com

TAGS: