பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கத் தயங்குவது ஏன்?

india-pakistanடெல்லி: பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்ற தனிநபர் மசோதாவை இந்திய அரசு எதிர்க்கப் போவதாக உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாத எதிர்ப்பு என்பது சர்வதேச அளவில் பெரும் சவாலாகவே உள்ளது. இந்நிலையில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலுப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் கர்நாடகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் பிப். 3-ஆம் தேதி பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார்.

பொருளாதார தடை

அதில் அவர் குறிப்பிடுகையில், பயங்கரவாதத்தை வேரறுக்காத பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடையும், அந்நாடுகளைச் சேர்ந்த மக்கள் மீது போக்குவரத்துத் தடையும் விதிக்க வேண்டும். அதோடு அந்நாடுகளை பயங்கரவாத நாடுகளாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். பாராளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியதும் இந்த மசோதாவானது வரும் மார்ச் மாதம் 9-ஆம் தேதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ஜெனீவா ஒப்பந்தம்

இந்நிலையில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளான பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதித்தால் அது ஜெனீவா மாநாட்டு ஒப்பந்தத்தின் படி உள்ள ராஜ்ய உறவுகளை பாதிக்கும் என்று இந்திய அரசு கருதுகிறது. எனவே அதுகுறித்து மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வர்த்தக உறவு

இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கையில், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா வர்த்தகம் மேற்கொண்டுள்ளது. எனவே பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடை விதிப்பது சரியன்று என்று தெரிவிக்கின்றன.

சட்டம் தேவையா?

அந்த மசோதாவை பாராளுமன்ற அவைக் குழுவினர் பரிந்துரைத்தால் அது சட்டமாக இயற்றப்படும். பின்னர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். ஒரு வேளை அதிகளவிலான உறுப்பினர்கள் ஆதரித்தால் அந்த மசோதா சட்டமாக உருவெடுக்கும்.

oneindia.com

TAGS: