எங்கே தமிழனின் தண்ணீர் ஆதாரம்?

cauvery-harangi-damமுதல்வர் திரு. பழனிச்சாமியின் தலைமைக்கு இந்த வறண்ட கேள்வி… தமிழ்நாட்டின் தற்போதைய ஆக்ஸிஜன் தேவை எது? அம்மா கல்லறையில் அடுத்த சபதம் எடுப்பதா? திருமதி. சசிகலாவை மொபைல் அலாரம் அலற வாரம் தவறாமல் பெங்களூரில் சந்திப்பதா? இல்லை.. அடுத்து கட்சி கட்டம் கட்டும் முதல்வருக்கு வேட்டி வாங்க கதர் கடை நோக்கி ஓடுவதா? எது? … தண்ணீர்.! தண்ணீர் மட்டுமே.!

வருடம்தோறும் வேண்டிய அளவு மழை பெய்தாலும், ஏரி, குளம், அணை, ஆற்று நீர் வறண்டு, விவசாயி விதைநெல் விற்று களத்து மேட்டில் மரிக்கும் நிலை மட்டும் மாறவில்லை. பிரச்சனையின் அடிவேர் பிடிக்க ஆயிரம் வழிகள் இருந்தும், தமிழனின் ஆதரவற்ற குரல் ஓங்கி ஒலிப்பது கேட்பது போல் வெட்ககேடான விஷயம் இங்கு எதுவுமில்லை. இதோ.. அடுத்த நீரற்ற கோடைக்கும், தண்ணீர் தராத அண்டை மாநிலத்தை தெறி விளிக்கவும் தொண்டை கணைத்து நாம் தயார்.! வெட்கம்.!

ஆளும் ஆளுமைக்கும், ஆளத்துடிக்கும் வெள்ளை வேட்டிகளுக்கும் நெஞ்சை அரிக்கும் ஒரு கேள்வி.! தமிழ்நாடு அரசு வருவாய் மூலம் 1960க்கு “பிறகு” வெட்டிய குளம், கால்வாய், ஏரி, நீர்த்தேக்கம், தண்ணீர் வழித்தடங்களின் எண்ணிக்கை எவ்வளவு? கரிகாலன் தொட்டு ராஜாஜி, காமராஜர் வரை மக்களோடு பயணித்தவர்கள் விட்டுச்சென்ற நீர் வழித்தடங்களை தூர்வாரியதில் பொதுப்பணித்துறை அர்ப்பணிப்பு என்ன? அரசு மூலம் இதுவரை நட்ட மரங்களின் எண்ணிக்கை, பராமரிப்பு நிலவரம் என்ன?

காலை முன்வைக்கவே இல்லை

பதில் இங்கே இருக்கிறது. 1960க்கு பிறகு புதிய அணை, குளம், ஏரி கட்ட நாம் காலை முன்வைக்கவே இல்லை. இருக்கும் நீர் வழித்தடங்களை நன்கு தூர்வாரி பராமரித்த லட்சணம், வெள்ளம் சைதாப்பேட்டை பாலம் மேல் ஏறி பயணித்தது உலக வரலாறு. அரசின் மையக் கேந்திரம் சென்னை மாநகருக்கே இதுதான் கதி என்றால், காவிரியும், வைகையும், தாமிரபரணியும், புழலும், செம்பரம்பாக்கமும், பவானியும், மேட்டூரும் இருக்கும் நிலைமை யாரும் சொல்ல தேவை இல்லை. இந்த நீர்வழி தடங்கள் தான் ஜீவ ஆறுகளின் உயிர் மையம். பல தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா, கொங்கு மண்டலம் சார்ந்த நகரங்களில் இருந்த நீர்வழி தடங்கள் எல்லாம் வரைபடத்தில் மட்டுமே காட்டும் வறண்ட கோடுகளாய் மாறி விட்டது. கேவலம்..வெட்ககேடு என்ற வார்த்தையை அடிநெஞ்சில் ஒரு முறை உரக்க உச்சரியுங்கள். அதன் வீரியம் நமக்கு உறைக்கட்டும்.

நெஞ்சார வசை பாடி விட்டு

ஒவ்வொரு முறையும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா தண்ணீர் தரவில்லை எனில் அவர்களை நெஞ்சார வசை பாடி விட்டு அந்தந்த மாநில மக்களுக்கு எதிராக, நல்ல “தரமான” தமிழில் உயர குரல் கொடுத்தால் நம் தண்ணீர் தேவை முடிந்து விடுமா? இல்லை…கோர்ட் மூலம் அணுகி, போராடி, வெறுப்பாக அவர்கள் பிச்சை போல் தரும் சில TMC நீரை குடித்தால், தமிழன் தொண்டையும், உங்களுக்கு அடுத்து கொடி தாங்கி கட்சி காக்க வரப்போகும் அரசியல் வாரிசு தொண்டையும் எப்போதும் அது நனைத்து விடுமா? நல்ல எண்ணத்தில், உதவும் நோக்கில் பகிராத அந்த நீரை பருகுவதை விட புறங்கை தூக்கி கருமேகம் வர காத்திருப்பது உத்தமம். ‘தமிழன்’ என்ற இறுமாப்பில் நீரற்று மடிந்த பெயராவது தமிழுக்கு நிலைக்கும்.

பாமரக் கேள்வி

தமிழகத்தின் வருட மழை அளவு எவ்வளவு? ஒரு சில வருடம் தவிர்த்து, இயற்கை நமக்கு கொடுக்கும் மழை எந்தவிதத்திலும் அண்டை மாநிலத்தில் பெய்யும் மழைக்கு குறைவல்ல. சராசரி வருட மழையளவு 945 mm. ஒரு பாமரக் கேள்வி.! தமிழ்நாட்டின் தண்ணீர் தேவைக்கு கடந்த 30 ஆண்டுகளில், அறிவியல்பூர்வமாக, புதிதாக எல்லோரும் என்ன செய்தீர்கள்?. நல்ல நீர்வழி தடங்களை கண்டறிந்து புதிய அணைகளோ, குளங்களோ,ஏரிகளோ ஏன் கட்டவில்லை? கால்வாய்களை, ஆறுகளை, குளங்களை தூர்வாரி, அகலப்படுத்தி மழைக்கு முன் ஏன் தயார் செய்யவில்லை? ஆற்று மணலை ஆழமாய் அள்ளுவதில் மட்டும் அலாதி ஆர்வம் காட்டிவிட்டு அதன் ஆதி ஆதாரத்தை அடையாளம் தெரியாமல் ஆக்குவது எதற்கு? எதை நோக்கி நம் வெறிபிடித்த பயணம்? தெறித்த குரல்கள் எல்லாம் வெறும் வெற்று அறிக்கைகளாக, காகிதங்களில் மட்டுமே தங்கி விட்டன.

ஆளுமை என்பது

ஆளுமை என்பது இன்பமாய் கழித்தல் என்ற புதிய சொல் தமிழ் அகராதியில் ஏறியது மட்டுமே மக்கள் கண்ட பேரின்பம்.! பொதுமக்கள் வரிப்பணம் 10 ரூபாயில் வெறும் 0.50 பைசா எப்போதோ தண்ணீர் ஆதாரத்திற்கு ஒதுக்கி இருந்தால் கூட இந்நேரம் 2 புதிய அணை கட்டி இருக்க முடியும். 10 குளம் வெட்டி இருக்க முடியும். 25 கால்வாய், ஏரி தூர்வாரி நீர் நிறைத்து இருந்தால், மழை பொய்த்தாலும் விவசாயத்திற்கு உயிர் கொடுத்திருக்க முடியும். விவசாயத்தின் ஆணிவேரை அழிந்து, மற்ற துறையில் மட்டும் முன்னேறி யாருக்கு என்ன பயன்?

விண்டு வெடித்த நிலம்

விண்டு வெடித்த நிலமும், பால் வற்றிய கறவை மாட்டை மட்டும் வைத்து உழவன் என்ன செய்வான்? அவன் செத்து விழுவதை பார்த்து அடிநெஞ்சு பதறி பரிதாபப்பட இங்கு பல்லாயிரம் உயிர்கள் உள்ளது. ஆனால், நமக்கு தேவை அழுத்தமான தீர்வு.! அடுத்த தலைமுறைக்கு உண்ண எதை விட்டுச் செல்ல உத்தேசம்? மழை என்பது இயற்கை. செய்ய ஒன்றும் இல்லை என அகலமாக எல்லோரும் கை விரிக்க போகிறீர்களா? வரும் வரிப்பணம் போதவில்லை (!)..இதில் குளம், ஏரி, அணை தூர்வாரல் என்பது நினைத்து கூட பார்க்க இயலாது என்று சொல்லி உங்களை நீங்களே ஏமாற்ற விருப்பமா? மத்திய அரசாங்கம் நிதி ஒதுக்காமல் நமக்கு செய்ய ஒரு வழியும் இல்லை என ஒருமித்த கூக்குரலா?

அறிவியல் உண்மை

ஒரு அறிவியல் உண்மை. ஆப்பிரிக்காவில், நமீபியா நாட்டு பாலைவனத்தில், பூமிக்கடியில் 10000 வருடம் முன்பு ஆதிமனிதன் கட்டிய ஏரியை கண்டறிந்து இருக்கிறார்கள். அதில் சேமித்த நீரின் அளவு புவியின் நிலப்பரப்பில் இருந்த குடிநீரை விட அதிகம். ஆதிமனிதன் பாலைவனத்தில் கூட நீரை சேமித்தவன். நாம் மீண்டும் பாலை ஆக்க வெறிகொண்டு திரிகிறோம். சொல்ல ஒன்றே. நம் தண்ணீர் ஆதாரத்தை பலப்படுத்த நமக்கு எந்த அண்டை மாநிலத்தின் ஆதாயமும் தேவையில்லை. நாளை மேகதூத் (Mekedatu) அணையோ, முல்லை பெரியாரோ..எதோ ஒன்று வந்து கொண்டே இருக்கும். அவர்கள் செய்வது வரம்புமீறிய, சட்டம் மதிக்காத, தகாத செயல் எனில், அதே சட்டம் வாயிலாக அணுக வேண்டியது நம் கடமை. அதை விடுத்தது அங்கு இருக்கும் அறிவற்ற, மனிதாபிமானமற்ற கூட்டம் போல் இங்கும் இதை கருவியாக வைத்து பந்தாடும் கூட்டத்தின் பேச்சைக்கேட்டு வெறும் வெறுப்பை இருபுறமும் மாறி உமிழ புறப்பட்டால்..என்ன பயன்? அதில் வெற்றி தேட நினைப்பது முகக் கண்ணாடி முன் நின்று வெறுப்பை உமிழ்வதற்கு சமம்.

எத்தனை கரம் வேண்டும்

நன்கு தேர்ந்த, படித்த, எதிர்பார்ப்பற்ற, அறிவார்ந்த பொறியாளர்கள், கட்டுமான நிபுணர்கள், வழிகாட்டிகள், தமிழ்நாட்டின் நீர்வழி தடத்தையும், இயற்கையையும் நேசிப்பவர்கள் இங்கு உண்டு பல்லாயிரம்.! நம் தண்ணீர் ஆதாரத்தை வலுப்படுத்த எத்தனை பேர் கரம் வேண்டும் அரசுக்கு? உங்கள் அடிநெஞ்சின் நோக்கம் உண்மை என்றறிந்தால், தமிழன் சொல்லாமலே வந்து நிற்பான்.

நீர் இல்லார்க்கு இல்லை இவ்வுலகு

இந்த அதிவிரைவு அறிவியல் பயணத்தில், புதிய வழிமுறைகள் மூலம் மழை நீரை சேமிப்பது, குளங்கள், ஆறுகளை பலப்படுத்துவது, தூர்வாரி நீர் வழி தடம் செய்வது, ஆற்று மணலை பாதுகாப்பது, முக்கியமாக நதிகளை இணைப்பது என்று எதுவும் இயலாத காரியம் அல்ல. தேவை ஒன்று தான். தீர்க்கமான தொலைநோக்கு.! பரந்த எண்ணம்.! உங்களில் யார் இருதயம் துருப்பிடித்து இருந்தாலும், அதை செப்பனிட்டு, பக்கச் சுவரை பெரிதாக்கி, எண்ணங்களை விரிவுபடுத்துங்கள். களத்தில் உடனே இறங்குங்கள்.! நாளை என்று வேறொன்றில்லை. தண்ணீர்..! விவசாயத்தின் அடிவேர்.! “நீர் இல்லார்க்கு இல்லை இவ்வுலகு”

tamil.oneindia.com

TAGS: