இனப்படுகொலைக்காக பகிரங்க மன்னிப்பு கேட்ட போப்

pope francisருவாண்டா நாட்டில் நடந்த இனப்படுகொலைக்கு போப் தற்போது பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

ருவாண்டா நாட்டில் கடந்த 1994 ஆம் ஆண்டு டுட்சி இன மக்கள் மீது ஹூடு இனத்தவர்கள் கடும் ஆயுதத் தாக்குதல் நடத்தினர். சுமார் 100 நாட்களுக்கும் மேலாக நடந்த இந்த வன்முறையில், 8 லட்சத்துக்கு மேலான டுட்சி இன மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பல நாட்கள் கத்தோலிக்க தேவாலையங்களில் தஞ்சம் புகுந்திருந்த மக்களை ஹூடு இனத்தவர்கள் படுகொலை செய்தனர். இதுவரை குறித்த இனப்படுகொலைக்கும் கத்தோலிக்க திருச்சபைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என வாடிகன் சாதித்து வந்தது.

அப்போதைய கத்தோலிக்க திருச்சபை, ஹூடு இன மக்களுக்கு ஆதரவாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் 1994 ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலைக்கு தற்போது கடவுளிடம் மன்னிப்பு கேட்பதாகவும் டுட்சி இனமக்களை பாதுக்க தவறியா பாவத்தை செய்துள்ளதாகவும் போப் பிரான்சிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் இதே கோரிக்கையை வலியுறுத்தி கிகாலியில் அமைந்திருக்கும் அரசு வாடிகன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.

தற்போது போப் பிரான்சிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ருவாண்டா மக்களின் காயங்களுக்கு மருந்தாக அமையும் என ஜனாதிபதி பால் ககாமெ தெரிவித்துள்ளார்.

ருவாண்டாவில் என்ன நடந்தது?

1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹூடு இனத்தவரான முன்னாள் ஜனாதிபதி Juvenal Habyarimana பயணம் செய்த விமானத்தை சுட்டு வீழ்த்தினர். இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

இக்கொடூர செயலை கண்டித்த ஹூடு அடிப்படைவாதிகள் டுட்சி இனத்தவர்கள் மீது பழி சுமத்தியதுடன், திட்டமிட்ட படுகொலைக்கு தயாரானார்கள்.

ஆனால் டுட்சி இனத்தவர்கள் அந்த குற்றச்சாட்டை புறந்தள்ளியதுடன், இனப்படுகொலைக்கு வேண்டுமென்றே காரணம் உருவாக்குகிறார்கள் எனவும் குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரம் திடீரென நெருப்பாக பற்றிக்கொண்டு அடுத்த 3 மாதங்களில் டுட்சி இனத்தவர்களையும் ஹீடு இனத்தவர்களில் சிறுபான்மையினரையும் ஹூடு அடிப்படைவாதிகள் கொன்று குவித்தனர். இதில் 100 நாட்களில் 8 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

-http://news.lankasri.com