காலத்தை இழுத்தடிக்க முடியாது! – தமிழ் சமூகம் அழைப்பு

WarCrime1இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமைகள் மீறலை முடிவுக்கு கொண்டுவந்து, பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் சமூகம் அழைப்பு விடுகின்றது.

இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை கடந்த 23 மார்ச், 2017அன்று நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பில் எமது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கலாம்.

அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில், பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), அமெரிக்க தமிழர் அரசியல் செயலவை (USTPAC), கனடிய தமிழர் பேரவை (CTC) ஆகிய முன்று அமைப்புக்களும் ஒன்றிணைந்து இவ்வறிக்கையை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

இலங்கை அரசாங்கம் 2015இல் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு (30/1) இணையனுசரனை வழங்கி எற்றுக் கொண்டதை தாங்கள் அறிவீர்கள். ஆனால் குறித்த பிரேரணையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை இலங்கை அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை.

இந்த நிலையில்தான் ஏற்கனவே அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக அமுல்படுத்துவதற்காக மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதன் மூலம் பொறுப்புக் கூறல் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை அரசுக்குள்ள சர்வதேசத்திற்கான பொறுப்பும் கடப்பாடும் மீளவும் ஒருமுறை சர்வதேசத்தின் முன்னால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கை அரசாங்கம் கால அவகாசம் கோரியதன் மூலம் தானாகவே ஒரு சர்வதேச பொறிக்குள் அகப்பட்டிருக்கிறது.

குறித்த பிரேரணை தொடர்பில் கருத்துத்; தெரிவிக்கும் அமெரிக்க தமிழர் அரசியல் செயலவையின் தலைவர் Dr.காருண்யன் அருளானந்தம் ‘இந்தப் புதிய பிரேரணையானது இலங்கை தொடர்ந்தும் சர்வதேச கண்காணிப்பின் கீழ் இருப்பதற்கான புறச் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த வகையில் இது ஒரு முக்கியமான விடயமாகும் எனினும், இது மட்டும் போதுமானதல்ல. அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் பலவும், இலங்கை விவகாரத்தில் குறிப்பிடத்தகு நேரத்தையும் சக்தியையும் செலவளிதிருக்கின்றன.

இதன் காரணமாகவே, 2012ஆம் ஆண்டிலிருந்து, இலங்கை தொடர்பில் இதுவரை ஐந்து பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இவ்வாறானதொரு நிலையில் இலங்கை அரசு தொடர்ந்தும் முன்னேற்றங்களை காண்பிக்காமல் இருக்க முடியாது” என கூறுகின்றார்.

எனவே இது தொடர்பில் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் ஒரு நெகிழ்வுப் போக்கை கடைபிடிக்கக் கூடாது. இவ்வாறு குறிப்பிடும் காருண்யன், பிரேரணையில்

உள்ளடங்கியிருக்கும், அனைத்து விடயங்களும் முழுமையாக அமுல்படுத்துவதற்கான நிதி, தொழில் நுட்ப ஆலோசனைகளை மேற்படி நாடுகள் கொடுத்து ஒத்துழைப்பையும் நெருக்குதலையும் வழங்க வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும், என்றும் குறிப்பிடுகின்றார்.

மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையை தொடர்ந்தே, புதிய பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அரசாங்கம் குறித்த பிரேரணையின் கீழ்

ஏற்றுக்கொண்டிருக்கும் விடயங்களை அமுல்படுத்துவதற்கு முழு அளவிலான வேலைத்திட்டம் மற்றும் அதற்குரிய கால அட்டவணை ஆகியவற்றை ஆணையாளர் தனது அறிக்கையில் வலியுறுத்தியிருக்கின்றார்.

உறுப்பு நாடுகள் பலவும் அவரது கூற்றினை ஆதரித்துள்ளன. அத்துடன் அரசாங்கம், இலங்கையின் அனைத்து சமூகங்களும்விளங்கிக் கொள்ளக் கூடியவாறான பரந்த வேலைத்திட்டம் ஒன்றையும் கைக்கொள்ள வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.

மேலும், முன்னைய பிரேரணையின் (30/1) அமுலாக்கமானது கவலையளிக்கக் கூடிய அளவு மந்தமானதென ஆணையாளர் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இது தொடர்பில் அபிப்பிராயம் தெரிவித்திருக்கும் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவிக் குமார் ‘இலங்கை அரசின் செயற்பாடுகள் தமிழ் மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பக் கூடிய வகையில் அமைந்திருக்கவில்லை.

அதில் அரசாங்கம் தோல்வியடைந்திருக்கிறது. அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பொறுப்புக் கூறல் தொடர்பான அனைத்து செயற்பாடுகளுமே, தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

எனினும் அரசாங்கமானது, குறித்த பிரேரணைக்கு, மீளவும் இணையனுசரனை வழங்கியிருப்பதன் ஊடாக பிரேரணையில் ஏற்றுக் கொண்டிருக்கும் விடயங்களை முழுமையாக அமுல்படுத்த வேண்டிய தனது பொறுப்பு மீளவும் ஒரு முறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு குறிப்பிட்டிருக்கும் ரவி சர்வதேச சமூகம் எதிர்காலத்தில் இதனை விடக் குறைவான எதனையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இவ்வாறானதொரு பின்னணியில் பிரித்தானிய தமிழர் பேரவை, அமெரிக்க தமிழர் அரசியல் செயலவை மற்றும் கனடிய தமிழர் பேரவை ஆகிய மூன்று அமைப்புக்களும், வடக்கு கிழக்கில் வாழும் எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செயல்பூர்வமான நன்மைகள் துரிதமாகச் சென்றடைவதற்கான வழிவகைகளை உருவாக்க தொடர்ச்சியாக செயற்படுமென இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அரசின் இழுத்தடிப்பு நடவடிக்கைகள் காரணமாக பாதிப்புற்ற எம் மக்கள் அடைந்த பயன் மிகக் குறைவு. எனவே இது தொடர்பில் அரசாங்கம் தனது நல்லெண்ணத்தை முதலில் நிரூபித்துக் காட்ட வேண்டுமாயின், அரசாங்கம் பின்வரும் விடயங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

கேப்பாப்புலவில் உள்ள காணிகள் உள்ளடங்கலாக மக்களின் அனைத்து காணிகளையும் உடனடியாக மக்களிடம் கையளிக்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை (OMG) உடன் செயல்பட வைக்க வேண்டும்.

மிக மோசமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறையிலுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் காலதாமதமின்றி விடுதலை செய்ய வேண்டும்.

சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உட்பட ஏனைய மனித உரிமை மீறல்கள் அனைத்தும் தடுக்கப்படுவதுடன் இதனை மீறுவோர் தண்டிக்கப்படுவர் என்ற பொது அறிவித்தல் வெளி வரவேண்டும்.

தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு படையினரின் துன்புறுத்தல்கள், கண்காணிப்புக்கள், பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்துவதற்கான உத்தரவுகள் உடன் பிறப்பிக்கப்பட வேண்டும்.

அரசாங்கம், மனித உரிமைகள் பேரவையின் (OHCHR) அலுவலகத்தை, வட கிழக்கிலும் மற்றும் கொழும்பிலும் திறப்பதற்கான அழைப்பை விடுக்க வேண்டும்.

கனடிய தமிழர் பேரவையின் தலைவர் ராஜ் தவரட்ணசிங்கம் இது தொடர்பில் கருத்துக் தெரிவித்திருக்கும் போது: இலங்கை அரசாங்கம், கலந்தாலோசனை செயலணியின் (CTF) பரிந்துரைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசாங்கம் அதனை புறக்கணிக்குமாயின், அது, ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை அவமதிப்பதாகவே அமையும் என்றும் அரசாங்கம் நிலைமாறுகால நீதி தொடர்பிலும் தொடர்ச்சியான கலந்தாலோசனைகளில் ஈடுபடவேண்டுமென்றும் வலியுறுத்துகின்றார்.

அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் தொடர்ச்சியாக கலப்பு நீதிமன்றத்தை எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையிலேயே பேரவையின் ஆணையாளர் தனது அறிக்கையில் கலப்பு பொறிமுறைய மீளவும் கண்டிப்பாக வலியுறுத்திருக்கின்றார்.

இது தொடர்பில் Dr. அருளானந்தம் ‘நீதியின்றி நல்லிணக்கம் என்பது சாத்தியமில்லை. கலப்பு சாட்சியங்களை பாதுகாக்கும் செயலணி உருவாக்க வேண்டும், விசேட வழக்குத் தொடுனர்களுக்கான அலுவலகம் ஒன்றை ஸ்தாபித்து, யுத்தக் குற்றங்கள்,

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனவழிப்பு என்பனவற்றை குற்றங்களாக சட்டமியற்றி அவற்றினை விசாரிப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும்.

வெளிநாட்டு நீதிபதிகளை நிராகரிப்பதன் மூலம் அரசாங்கம் தன் வாக்குறுதியினை மீறியுள்ளது என்று குறிப்பிடும் அருளானந்தம், வடக்கு கிழக்கில் பாதுகாப்பு

கட்டமைப்புக்கள் மறுசீரமைத்து, வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை அகற்றினாலன்றி நல்லிணக்கம் என்பது கானல் நீரே எனக் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள், மீளவும் நிகழாமல் தடுப்பதற்காக புதிய அரசியல் யாப்பு மற்றும் நிலைமாறுகால நீதி ஆகிய இரண்டும் சமாந்தரமாக பயணிக்க வேண்டும்.

வருட இறுதிக்குள் ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கும் முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இலங்கை அரசாங்கம் சமஸ்டி கட்டமைப்பின் அடிப்படையில் வடக்கு கிழக்கிற்கு நிரந்தரமான அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ராஜ் குறிப்பிட்டார்.

இவை அனைத்தினதும் சாராம்சமாக கூறுவதாயின்: பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்பட்டுவரும் நாம், ஒரு தெளிவான பெறுபேறை எதிர்பார்த்து நிற்கின்றோம்.

இலங்கையில் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய நல்லிணக்கம் நிகழ வேண்டுமென்றால், கிடைத்திருக்கும் கால அவகாசத்தை இலங்கை அரசாங்கம் மிகவும் ஆக்கபூர்வமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் இதற்கும் மேலதிகமான ஒரு கால அவகாசத்தை அரசாங்கம் கோர முடியாது.

-http://www.tamilwin.com

TAGS: