செடிகள் நீரின்றி வாடியதால் மனமுடைந்த விவசாயி தூக்கிட்டு தற்கொலை.. தொடரும் சோகம்

vivasaayiதிருவண்ணாமலை: மல்லிகை பூ செடிகள் நீரின்றி வாடியதால் மனம் நொந்த விவசாயி ஏழுமலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவிரியில் இருந்து நீர் கிடைக்காததாலும், பருவ மழை போதிய அளவு பெய்யாததாலும் தமிழகம் வறட்சி பூமியாகிவிட்டது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை, மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரியும், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று 15வது நாளாக டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை அருகே செங்கம் அருகில் உள்ள பாய்ச்சல் கிராமத்தில் விவசாயி ஏழுமலை தனது நிலத்தில் மல்லிகை பூ பயிரிட்டுள்ளார். ஆனால் மல்லிகை செடி தண்ணீர் இன்றி வாடியிருக்கிறது. இதனை கண்டு மனமுடைந்த விவசாயி ஏழுமலை மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளார்.

பின்னர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பயிர் கடனை செலுத்தமுடியாமலும், தண்ணீரின்றி வாடும் பயிரை கண்டும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர் கதையாகி வருவது சோகத்தை உண்டக்கி வருகிறது.

tamil.oneindia.com

TAGS: