பரவுகிறது போராட்டம்.. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகளும் களத்தில் குதிப்பு

farmers-protest2345தஞ்சை: டெல்லியில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் உள்ள விவசாயிகள் இன்று தங்கள் போராட்டத்தை தொடங்கினர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் வடகாடு, கோட்டைக்காடு கிராமங்களில் போராட்டங்கள் நடைபெறவுள்ளதால் தமிழகமே போராட்டக்களமாக உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், நதி நீர் இணைப்பு, வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் கடந்த 15 நாள்களாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்த மத்திய அரசு ஓப்பந்தத்தில் நேற்று கையெழுத்தானது. இதனைக் கண்டித்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, வடக்காடு உள்ளிட்ட கிராம மக்கள் போராட்டத்தை தொடங்க ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் காவிரி உரிமை மீட்புக்குழுவினரும், தஞ்சை விவசாயிகளும் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற அவர்களை ஆட்சியர் அலுவலகம் செல்லும் நுழைவாயிலில் காவல் துறை தடுத்து நிறுத்தியது. இதனால் பிரதான சாலை ஓரத்தில் அமர்ந்து உடலில் இலைகளை கட்டிக் கொண்டு பட்டை போட்டுக் கொண்டு விவசாயிகள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாயிகளுக்காண வறட்சி நிவாரணம் ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். டெல்டா மாவட்டங்களை ஒருங்கிணைந்த வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இந்த தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. போராட்டத்தை த.வெள்ளையன் தொடங்கி வைத்தார்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த இடத்தை விட்டு செல்வதில்லை என்று போராட்டக்குழுவினர் கூறியுள்ளனர். தகவல் அறிந்து தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகளும் இவர்களுக்கு வலுசேர்க்க வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: