மீண்டும் போர்க்களமாகிறது நெடுவாசல்.. 70 கிராம மக்களுடன் நெடுவாசல் குழு ஆலோசனை

neduvasal-11புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டத்தை தொடங்குவது தொடர்பாக 70 கிராம மக்களுடன் நெடுவாசல் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுக்க மத்திய அரசு கடந்த மாதம் தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்தது. அந்த திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகத்தில் விவசாயம் கேள்விக்குறியாகி, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் போராடினர்.

விவசாயத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த அனுமதி்க்க முடியாது என்று தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை மக்கள் ஒத்திவைத்தனர்.

ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்நிலையில் நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தம் நேற்று டெல்லியில் மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்தானது. பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்பட 22 நிறுவனங்களுக்கு இந்த ஒப்பந்தத்தை பெற்றுக் கொண்டன.

நெடுவாசலில் ஜெம் நிறுவனம்

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுக்க ஜெம் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் பாஜக பிரமுகருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. ஒப்பந்தம் கிடைக்க பெற்ற நிறுவனங்கள் 32 வகையான அனுமதிகளையும் பெற வேண்டும்.

மக்கள் ஆலோசனை

இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்த்து தெரிவித்து தங்கள் போராட்டத்தை மீண்டும் முன்னெடுத்துச் செல்வது குறித்து 70 கிராம மக்களுடன் நெடுவாசல் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டுகின்றனர். மேலும் இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆட்சியரிடம் மனு

ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தங்கள் நிலங்களை திருப்பி தருமாறு கிராம மக்கள் புதுக்கோட்டை ஆட்சியர் கணேஷிடம் நெடுவாசல் மக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். இதனால் நெடுவாசல் மீண்டும் போர்க்களமாகும் சூழலை மத்திய அரசு ஏற்படுத்தி விட்டது.

tamil.oneindia.com

TAGS: