தெற்கில் இருந்து நல்லூர் வரை ஈழத்தமிழர்கள் : தென்னிலங்கை புதைத்தவை வடக்கு நோக்கி நகர்கின்றது

templeஇலங்கை வரலாற்று அடிப்படையிலும் சரி, நிகழ்காலத்திலும் சரி முரண்பட்ட ஓர் பாதையிலேயே சென்று கொண்டு இருக்கின்றது.

வடக்கில் தமிழர் தொன்மையைத் தேடுகின்றோம் அப்படி என்றால் தெற்கில் தமிழர் பண்பாடு இருக்க வில்லையா? இங்கு நமக்கு நாமே ஒரு பிரிவினை ஏற்படுத்திக் கொண்டோம் என்றே தோன்றுகின்றது.

தொட்டது அனைத்திலும் தமிழ் தமிழ் என்ற ஓர் சிந்தையை ஏற்படுத்தி வருகின்ற காரணத்தினால் தமிழர் தொன்மையை நாமே மறைத்துக் கொண்டு வருகின்றோம் என்பதே உண்மை.

சரி சந்தேகம் என்னவெனில் தென்னிலங்கை தமிழர்களுக்கு உரியது இல்லையா? அங்கே தமிழர் பண்பாடு இருக்கவில்லையா? அதற்கான ஆதாரங்கள் வரலாற்றில் இருக்கின்றதா?

இதற்கு நிச்சயமாக தென்னிலங்கையிலும் தமிழர் வாழ்ந்து வந்தனர் என அடித்துக் கூறக்கூடிய ஆதாரங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஆனால் இதனை வெளிப்படையாக சொல்லப்போனால் இனவாதம் என்ற மாயத்தை தோற்று வித்து விடுவார்கள். எது எப்படி என உண்மைகளை ஆராயும் போது தெளிவுகள் பிறக்கலாம்.

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப் பழைமையான எழுத்துப்படிமம் ஒன்று தென்னிலங்கை திஸ்ஸமஹாராமவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சுட்ட ஓட்டில் உள்ளது.

அந்த ஓடு தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்டது. அதனை ஆய்வு செய்த போது கி.மு 2ஆம் நூற்றாண்டுக்கு உரியதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனை உடன்படிக்கை ஒன்றின் உறுதிப்படிமமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்.

இந்த ஆதாரம் இலங்கையில் தொன்மையில் தென்னிலங்கையில் தமிழர் பண்பாடு நிலவியதற்கு சான்றாக அமைகின்றது. ஆனால் இன்று அந்த ஆதாரம் எங்கு சென்றது என்பதற்கு விடையில்லை.

குறிப்பாக பொம்பரிப்பு இடுகாட்டு ஆய்வுகள் தமிழர் தொன்மையை கண்டறிய உதவியாக அமையும் என்றும் அது பல்லாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்தது என்று நிருவ முற்பட்ட போது பொம்பரிப்பு அடங்கும் வில்பத்து ஆராய்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்ட பாதுபாக்கப்பட்ட வனமாக மாற்றமடைந்து போனது.

அது அவ்வாறு இருக்கட்டும் அடுத்து தென்னிலங்கையில் உள்ள பல பிரதேசங்களின் பெயர்களை ஆராயும் போது, பாணன்துறை , கல்லுத்துறை மாத்துறை , தேவன்துறை என அமைந்துள்ளது இவை தமிழ்ப் பெயர்கள் என்பது தெளிவாக புரியும்.

கல்லுத்துறை என்பது இப்போதைய களுத்துறை. களு என்பது சிங்களத்தில் கறுப்பு எனப் பொருள்படும் ஆனால் அப்பிரதேசத்திற்கும் கறுப்பிற்கும் தொடர்பு இல்லை.

ஆனால் கற்கள் அதிகம் உள்ள பிரதேசம் ஆகையால் இந்தபெயர் வந்து அது மாற்றமடைந்து சென்றிருக்கலாம் என்பது வாதம்.

அந்தப் பிரதேசத்தில் இப்போது அதிகம் வாழ்கின்றவர்கள் கரவாச்சிங்களவர்களே. அகமண முறையைக் கொண்ட அவர்களது வருகை கி.பி 14ஆம் நூற்றாண்டு.

ஆனாலும் கூட பெந்துறை எனப்பட்ட இப்போதைய பேருவளை, சீனன்கோட்டையில் இஸ்லாமிய குடியேற்றங்கள் 8ஆம் நூற்றாண்டு முதல் என பதிவுகள் உள்ளன.

அதேபோல் மாத்தறை என்பதும் கூட மாத்துறை என்றே இருந்ததாக ஐரோப்பிய ஆவணப்பதிவுகள் கூறுகின்றன. இங்கு பாணன் துறையில் தமிழக் கோயில்களுக்கும், கடவுள்களுக்கும் பஞ்சமில்லாத இடம்.

இங்கு முருகக் கடவுள் ஆலயம் உள்ள ஒரு இடத்திற்கு வேலபுரம் என்ற ஒரு பெயரும் இன்றும் இருக்கின்றது.

தொண்டீஸ்வரம் என்று நம்பப்படுகின்ற தென்னிலங்கை ஆலயத்தின் தொன்மங்களை காட்டுவதன் மூலம் தேவந்துறை ஆலயத்தின் தொன்மையோடு தமிழ்த் தொன்மையையும் கூற முடியும்.

இந்த துறைகளில் தென்கோடியில் அமைந்துள்ளது துறை தொந்தற. இந்த இடத்தின் சிறப்புக்களை மகாவம்சம் கூட கூறுகின்றது.

அதாவது தொந்துறை என்பது தெய்வந்துறை , தேவன் துறை , தேவனம்துறை , தென்துறை , தென்னவன்துறை என்றும் தமிழில் கூறப்படுகின்றது.

இதன் சிறப்பு தேவ நாயனார் ஆலயம். இது கேரளாவிக் கட்டடக் கலையை காட்டுகின்றது. முருகன், விஸ்ணு, விநாயகர், சிவன், பத்தினி தெய்வம், போன்ற தெய்வ வழிபாடுகள் இங்கு நடைபெறுகின்றன.

இந்த தெய்வங்களில் சிவனின் கோவில் வளாகப்பகுதி நாகிராசா கோவில் எனப்படுகின்றது. ஆய்வாளர் ஜோன் என்பவர் தனது பௌத்தவிஷ்ணு புத்தகத்தில் இங்கு ஐநூறு ஆடல் மங்கையர் கலைப்பணி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் வரலாற்றுப் பதிவுகளின் ஒழுங்குபடுத்தலின் படியும் கிரேக்க இனத்தவரின் பழைமையான உலக வரைபடத்தின் படி இந்த ஆலயம் அமையப் பெற்ற சூழலை புனித இடம் எனக் குறிப்பிட்டிடுக்கின்றார்கள்.

மேலும் கி.பி 98 களில் தொலமி தனது உலகப்படத்தில் தெகண எனப் பெயரிட்டு இந்த ஆலயப்பகுதியைக் குறித்திருக்கின்றார்.

சந்திரசேகரம் எனப்படுகின்ற தேவேந்திரமுனையில் இடம் பெற்ற சிவக்கடவுள் வழிபாட்டினைப் பற்றி அறிமுகத்தினை மட்டும் குறிப்பிடும் யாழ்ப்பாண வைபவ மாலை இதனை தெய்வந்துறை என்று கூறுகின்றது.

7 ஆம் நூற்றாண்டில் இலங்கையை ஆட்சி செய்து கொண்டிருந்த பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்மன் இந்த ஆலயத்தை பராமரிப்பு செய்து வந்தான் எனவும் கூறப்படுகின்றது.

தென்னிலங்கை வரலாற்றை மாற்றியமைத்தது என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் கேகாலையில் கண்டெடுக்கப்பட்ட ஓர் ஓலைச்சுவடி.

அந்த ஓலைச்சுவடியின் படி விஷ்ணுவின் உருவம் தப்புல மன்னன் காலத்தில் கடலில் மிதந்து வந்ததாகவும், பின்னர் அதனை பிரதிஷ்டை செய்து அக்கடவுள் சிலைக்கு பூஜை செய்வதற்காக தமிழர்களை அங்கே குடி அமர்த்தினான் எனப்படுகின்றது.

17ஆம் நூற்றாண்டுக்குரிய ஓர் எழுத்துச் சாசனம் இந்த கதையை உறுதிப் படுத்துகின்றது.

14ஆம் நூற்றாண்டில் ரய்கம தேசத்தை ஆண்டுவந்த அழகக்கோனார் எனும் மன்னன் தேவந்துறைக்கு நிலங்களை மானியமாக வழங்கியுள்ளான்.

இதனை கோட்டே ஆறாம் பராக்கிரமபாகு காலத்து கல்வெட்டு ஒன்றினைப் பற்றி எட்வேட் முல்லர் என்பர் பதிவு செய்துள்ளார்.

அதன் படி அந்த கல்வெட்டில் தமிழ் கிரந்த எழுத்துக்களில் குங்கன்கொல்ல, பகரகரமுல்ல, வேர்டுவ, நாய்முனை போன்ற கிராமங்களை அழகக்கோனார் தேவந்துறை நாயனார் ஆலயத்திற்கு மானியமாக வழங்கியதாகவும் பொறிக்கப்பட்டு காணப்பட்டதாம்.

இவை அனைத்தையும் விட மும்மொழிக்கல்வெட்டு எனப்படும் தென்னிலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று இன்றும் சிதையாமல் கொழும்பு தொல்பொருள் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது.

தென்னிலங்கையில் ஈழத்தமிழர்களின் செல்வாக்கு, அவர்களின் வாணிபம், கப்பல் கட்டுமானம், சர்வதேசம் சார்ந்த உறவுகள், வழிபாட்டு பண்பாட்டுத் தொன்மைகள்., போன்ற பல விடயங்களை தெளிவாக காட்டும் அந்தக் கல்வெட்டு மூன்று மொழிகளில் தான் சுமந்துள்ள செய்தியை பரப்புகின்றது.

கி.பி 1409களில் சீனத்தளபதி செங் ஹீ இலங்கைக்கு வருகைத் தந்ததை முன்னிட்டு பொறிக்கப்பட்ட அக்கல்வெட்டு 1911ஆம் ஆண்டு காலியில் கண்டு பிடிக்கப்பட்டது.

அந்தக் கல்வெட்டு தேவந்துறை கடவுளை சீனத்தளபதி செங் ஹீ உலக அமைதியின் பொருட்டு பிராத்தனை செய்தான் எனவும் கூறுகின்றது.

14ஆம் நூற்றாண்டு காலப்பகுதிகளில் யாத்திரிகர் இபுன் பாதூதா தன் பயணக்குறிப்பில் ஆயிரம் சைவ யோகிகளும் , ஐநூறு ஆடற்பெண்களும் தேவந்துறையில் கடவுள் பணி செய்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

கி.பி 15ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட கோகில சந்தேசய என்கிற குயில் விடு தூது எனப்படும் நூல் சப்புமல் குமாரவைப்பற்றிய விடயங்களை கூறுவதாய் அமைகின்றது.

அந்த நூலின் அமைப்பின் படி குயில் ஒன்றின் தூதுப்பாதை தேவந்துறை ஆலயத்தில் தொடங்கிச் சென்று நல்லூரில் முடிவதாக குறிப்பிடுகின்றது.

இது தமிழர்களின் பரவல் வடக்கு தெற்கு என இலங்கை முழுதும் காணப்பட்டுள்ளது என்பதை உறுதி படுத்துகின்றது எனலாம்.

மற்றும் 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட செப்புச்சாசனத்தின் படி ஏழாம் விஜயபாகு மன்னன் விஷ்ணுக் கடவுளுக்கு செய்து வந்த தானங்கள் தொடர்பில் அறிந்து கொள்ள முடியும்.

இப்படி சிறப்பாக காணப்பட்ட ஆலயமே கி.பி 1588 களில் போர்த்துக்கேய கடற்படைத்தளபதி சூசா திரவியங்களை கொள்ளையடித்தது மட்டும் இல்லாமல்., தேவந்துறை ஆலயத்தை இடித்து அதில் கிடைத்த கற்களைக் கொண்டே சென்லூசியா உள்ளிட்ட மூன்று தேவாலயங்களை கட்டு வித்திருக்கிறான்.

ஐந்தாவது ஆளுநராக இலங்கைக்கு நியமிக்கப்பட்ட ஆங்கிலேயர் போர்த்துக்கேயரின் அழிப்புப் படலத்திற்கு முன்னர் தேவந்துறை ஆலயம் மிகப் பெரியதாக காணப்பட்டிருக்கும் சாத்தியம் உண்டு என்கின்றார்.

அதேபோன்று கி.பி 1807ஆம் ஆண்டு வாழ்ந்த ஜேம்ஸ் எனன்கின்ற நிர்வாகி சுமார் இருநூறு கல்வெட்டுக்களைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

மாத்துறையில் (மாத்தறையில்) தேவந்துறை ஆலயத்தின் தொன்மங்களோடு இணைத்துக் கூறப்படுகின்ற தொண்டீஸ்வர ஆலயமும் சுமார் இருபதாண்டுகளுக்கு முன்பு வரை ஐதீகம் மட்டுமே.

எனினும் 1998ஆம் ஆண்டு மாத்துறையில் செய்யப்பட்ட அகழ்வில் நந்தியின் சிலையும், சிவலிங்கச் சிலையும் தொண்டீஸ்வரம் பற்றிய ஐதீகங்களை வரலாறாக மாற்றி விட்டன.

இவை தவிர மேலதிகமான இலக்கியங்களை ஆராயும் போதும், தொல்பொருள் தரவுகள் தொகுத்து நோக்கும் போதும்.,

தொண்டீஸ்வரம், தேவந்துறை ஆலயம், மும்மொழிக் கல்வெட்டு, திஸ்ஸமகாராம மட்பாண்ட எழுத்துக்கள், கதிர்காமம் என்று ஒரு தொன்மையான ஈழத்தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டின் வரலாற்றுத் தொடர்ச்சியை மேலும் உறுதி படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால் இன்றைய நிலை என்ன வடக்கில் புத்தர் சிலைகள் அகழ்ந்து எடுக்கப்படுவதாக சித்தரிக்கப்படுகின்றது. ஆனால் தெற்கின் நிலை?

தென்னிலங்கையில் காணப்படும் அல்லது புதைந்து போன தமிழர் தொன்மங்களை ஆய்வு செய்பவர் யார்? தொலைந்து போன எம் தொன்மங்களை தெற்கிலும் தேட வேண்டும் அதனை வெளிக் கொண்டு வர வேண்டும் என்படும் கட்டாயத் தேவையே.

என்றாலும் இன்றைய கால கட்டத்தில் தொட்டது அனைத்திலும் தமிழரே என்று (சில) வெட்டிப் பேச்சாளர்கள், போலி விவாதம் செய்து கொண்டு வருவதால் தமிழர் தொன்மை இது தான் என்பது கூட.,

இப்படியும் இருந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாய் மாறிப் போய் விட்டது. கொஞ்சகாலம் நாகரீகமாய் இருந்தது “பச்சைத் தமிழன் என்றால் பகிர வேண்டும்” என தொட்டது சுட்டது அனைத்திலும் தமிழைத் தேடும் படலம்.

அதில் ஓர் குற்றமும் இல்லை ஆனால் காலத்தின் தேவையறிந்து நாம் செயற்படும் போது மட்டுமே தலை நிமிர்ந்த தமிழனாய் வர முடியும் என்பதும் கூட உண்மை தான்.

சொல்வது என்னவென்றால் தமிழர் ஆவணங்களை முடிந்த அளவு மெய்யோடு இணைத்து தேடி பக்குவமாய் பாதுகாக்க வேண்டும் என்பதே.

ஓர் வரலாறு மட்டும் அல்ல, இனம் பண்பாடு அனைத்தையும் அதிகாரங்களும் காலம் மாற்றமடைய செய்து விடும் இதனை நன்றாக காட்டுகின்றது ஈழமும் இலங்கையும்.

வடக்கில் மட்டும் அல்ல தெற்கிலும் தமிழர் வரலாற்று பண்பாட்டுத் தொன்மை காணப்பட்டுள்ளது. ஆனால் சில பல காரணங்களுக்காக அவை மறைக்கப்பட்டு விட்டன.

அந்த மறைக்கப்படும், தமிழ் தொன்மை புதைக்கப்படும் படலமே இப்போது வடக்கிற்கும் நகர்ந்து கொண்டு செல்கின்றது. நகர்ச்சி என்னமோ ஆமை வேகத்தில் தான் ஆனால் விளைவு பார தூரமாய் அமைந்து போகும்.

அதன் படி நாளைய தமிழர்களின் கட்டாயத் தேவை என்ன? அவரவர் சிந்தைக்கு தெளிவாகத் தெரியும் அதன் படி நடப்போம் பாதுகாப்போம் தமிழர்த் தொன்மையை.

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் ஒருவரால் வழங்கப்பட்டு 29 Mar 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

-http://www.tamilwin.com

TAGS: